பூண்டு என்றவுடன் அதன் வாசனையால் முகம் சுளிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் பூண்டு மருத்துவ குணம் கொண்டது என்பதை அறிந்தவர்கள் சிலரே! வெள்ளைப் பூண்டு தட்டையான இலைகள் கொண்ட சிறு செடி. இதன் கிழங்குகள் காரமணத்துடன் குமிழ்வடிவத்தில் இருக்கும். அதுவே பூண்டு என அழைக்கப்படுகிறது. அதன் உள்ளே 10 அல்லது 12 பிரிவுகள் அமைந்திருக்கும் அவை பூண்டுப் பற்கள் என அழைக்கிறோம்.
பூண்டு உலகின் பல பகுதிகளில் சிறந்த உணவுப் பொருளாகவும், மருந்தாகவும், அழகு மற்றும் வாசனைப் பொருளாகவும் பயன்படுகிறது. சிறந்த கிருமி நாசினியாகிய பூண்டு வியர்வையை பெருக்கும். உடற்சக்தியை அதிகரிக்கும் தாய்ப்பாலை விருத்தி செய்யும். சளியை கரைக்கும் இரத்த கொதிப்பை சரிசெய்யும். நீரிழிவு உள்ளவர்களின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
பூண்டில் அமைந்துள்ள ஈதர் நமது நுரையீரல் மற்றும் மகத்தில் அமைந்துள்ள சைனஸ் பகுதிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றும் குணம் கொண்டதாகும். வெள்ளைப் பூண்டு பற்களை 10 எடுத்து பாலில் வேக வைத்துக் கடைந்து சாப்பிட வாயு, செரியாமை, சளி முதலியவை தீரும். குடலில் உள்ள புழுக்கள் மடிந்து மலத் துடன் வெளியேறும்.
பூண்டை உரித்து கைப்பிடி அளவு எடுத்து 300மிலி பசும்பாலில் போட்டு காய்ச்சி இரவு உணவுக்கு பின்பு குடித்து பூண்டைத் தின்றால் ரத்தஅழுத்தம் சீராகும். மாரடைப்பு வராது. தொடர்ந்து இதைப் பயன்படுத்தி வந்தால் ரத்தக் குழாயில் கொழுப்பு படியாது. நீண்டகாலம் பயன்படுத்தி வந்தால் ஊளை சதை குறையும். உடல் எடையும் படிப்படியாக குறையும்.
தொடக்க நிலை மூட்டு வலி உள்ளவர்கள் பூண்டை நசுக்கி அந்தச் சாற்றுடன் சிறிது சூடத்தை கரைத்து மூட்டுகளில் தடவிவந்தால் மூட்டுவலி குணமாகும். பூண்டு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 20 கிராம், சுக்கு 20 கிராம், ஆமணக்கு நெய் 1000மிலி எடுத்து அதில் இதைத் தட்டி போட்டு அதனுடன் 100 மி.லி. எருக்கிலைசாறு சேர்த்து காய்ச்சி வடிகட்டி கொள்ள வேண்டும். மூட்டுவலி , வாத வலியுள்ள இடங்களில் தடவிவந்தால் குணமாகும்.
நமது வழக்கமான உணவுபொருட்களில் வாயு தன்மை கொண்டவையே அதிகமாக பயன்படுத்துவதால் மலச் சிக்கல் வாயு, அஜீரணக்கோளாறு, புளிப்பு, வயிற்று பொறுமல், வயிற்று எரிச்சல் போன்றவை ஏற்படுகின்றன. எனவே நாள் தோறும் ஆறு பூண்டுப் பற்களை பாலில் வேகவைத்து சாப்பிட்டு வந்தால் மேற்சொன்ன அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
அளவுக்கதிகமான வாயுக் கோளாறுகளால் துன்பப்படு வோர் தேவையான அளவு பூண்டை தோல் நீக்கி எடுத்துக் கொண்டு பாலாவியில் வேகவைத்து அதனுடன் அதே அளவு பனைவெல்லம் சேர்த்து சிறிதளவு சுக்கை பொடித்து போட்டு அடுப்பில் வைத்து இளகலாக செய்து அதில் சிறிதளவு தேன் கலந்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவேண்டும். இதில் இரண்டு தேக்கரண்டி வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டுவர அனைத்து வகையான வாய்வுக்கோளாறுகளும் குணமாகும்.
தற்போது பூண்டுத்தேன் என சித்தமருந்து கடைகளிலும் கிடைக்கிறது. உள்நாக்கு தடித்தோ சற்று சதைவளர்ச்சி அதிகமா னோலோ சிறிது பூண்டை நசுக்கி அதனுடன் இஞ்சிசாறுவிட்டு அரைத்து சிறிது தேன் கலந்து காலை மாலை சாப்பாட்டுக்கு முன்பாக இரண்டு தேக்கரண்டிவீதம் குடிக்கவேண்டும். இந்த விழுதை தொண்டையின் மேல் பக்கம் பூசி வர வேண்டும். மூன்றே நாட்களில் குணமாகும்.
உடலில் வெள்ளைத் தேமல் ஏற்பட்டால் உலகமே அழிந்து விட்டதைப்போல் சிலர் மனக்கவலை கொள்வார்கள். இவர்கள் பூண்டின் சாற்றில் நவச்சாரத்தைக் குழைத்து பூசி வந்தால் வெண்ணிறம் மாறி இயல்பு நிலைக்குத் தோல் மாறும். காசநோயால் துன்பப்படுபவர்கள் 300மிலி பசும்பாலுடன் அதே அளவு தண்ணீர் கலந்து அதனுடன் பத்து மிளகு, சிறிது மஞ்சள்தூள் கலந்து அதில் ஒரு பூண்டை உரித்துப் போட்டு நன்கு காய்ச்சி பாதியாகச் சுண்டியவுடன் வடிகட்டி பாலை குடித்துவிட்டு பூண்டை சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 90 நாட்கள் சாப்பிட வேண்டும். குணம் அடையும் வரை குடித்து வரலாம்.
நெஞ்சுகுத்து என்னும் வலியால் துன்பப்படுவோர்கள் பூண்டு சாற்றையும் இஞ்சி சாற்றையும், சம அளவு கலந்து காலை மாலை மூன்றுநாட்கள் சாப்பிட நெஞ்சக்குத்து நீங்கும். சிலருக்கு புழுவெட்டு ஏற்பட்டு தலை மற்றும் மீசையில் ஒரு பகுதியில் அல்லது திட்டுத் திட்டாக முடி வளராமல் இருக்கும். இவர்கள் பூண்டை அரைத்து தேன்விட்டு குழைத்து முடிவளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் முடிவளரும். வாயு தொல்லையால் வயிறு உப்புதல், சத்தத்துடன் வாயு பிரிதல்,
வாத நோய் உள்ளவர்கள். அரைக்கீரையுடன் ஒரு பூண்டைத் தோலுரித்துப் போட்டு சீரகம் பச்சை மிளகாய் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்து சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீரும். உரித்த பூண்டு பத்துகிராம் எடுத்து 50மிலி நல்லெண்ணெயில் போட்டுகாய்ச்சி ஆறவைத்த இரண்டொரு துளிகள் காதில் விட்டு வர காது வலி, காது மந்தம் முதலிய பிரச்சினை தீரும்.
ஒருபூண்டு, பத்து மிளகு, கரிசலாங்கண்ணிக்கீரையுடன் அரைத்து காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் அளவு மூன்று நாட்கள் சாப்பிட சோகைநோய் குணமாகும். வாதம் அதிகரித்து உடலில் வலி ஏற்பட்டால் பூண்டு அதே அளவு துத்திகீரையும் நசுக்கி நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி ஆற வைத்து அந்த எண்ணெயை உடலில் தடவி வந்தால் வலி குறையும். 250 மி.லி. பாலில் 6 பூண்டு பற்கள் போட்டு காய்ச்சி பனகற்கண்டு சேர்த்து இரவில் குடித்து பூண்டைசாப்பிட்டு வந்தால் தூக்கம் வரும்.
இரத்தக் கொதிப்பு அடங்கும். பருவ வயதில் முகத்தில் தோன்றும் பருக்கை நகத்தால் கிள்ளுதல் கூடாது. பூண்டை உடைத்து இழைத்தால் வரும் விழுதை இந்தப் பருக்களின் மீது பூசிவர பரு உடைந்து ஆறும். வடு ஏற்படாது.
வண்டு, குளவி, பூச்சி ஆகியவை கடித்தால் அந்த கடி வாயில் பூண்டை அரைத்துக்கட்டவேண்டும். கடிவாயில் கட்டிய பூண்டால் எரிச்சல் உண்டாகும். தாங்கமுடியாத எரிச்சல் ஏற்பட்டால் நஞ்சு இறங்கியது என்பதை அறிந்து பூண்டை எடுத்து விடவேண்டும். அனைத்து வகையிலும் வேகவைத்து உண்பதே சிறந்ததாகும். நாட்டுபூண்டையே அதிகமாக சேர்த்து கொள்ளவேண்டும்.
மலைப்பூண்டு தேவையான அளவிலேயே எடுக்கவேண்டும். அமுதே ஆனாலும் அளவறிந்து உண்ண வேண்டும், என்பது நமது முன்னோர்கள் நமக்கு தெரிவித்த வழி முறையாகும் அந்த வழியில் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.
-விடுதலை,22.8.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக