முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் அதிகளவு பயிர் செய்யப் படுகிறது. ஒரு எக்டேரில் முந்திரி கொட்டையின் விளைச்சல் 500 கிலோவாகும். நம்மிடையே முந்திரி கொட்டைகளை போல முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு. நாட்டில் உற்பத்தியாகும் 500 டன் முந்திரி பழங்களில் 10 சதவிகிதம் கூட பயன்படுத்துவதில்லை.
ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனும் வேதிப் பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும்போது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது. இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேகவைத்து அல்லது உப்புநீரில் ஊறவைத்து சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரிபழம். முக்கியமாக வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தை விட, முந்திரிபழத்தில் அய்ந்து மடங்கு அதிகமுள்ளது.
வைட்டமின் சி மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு நோயை குணமாக்குகின்றது. பற்கள், நகங்களை உறுதிப்படுத்துகின் றது. ஸ்கர்வி என்ற வைட்டமின் சி குறைபாடு நோயை குண மாக்குகின்றது. மேலும், கிருமி நாசினியாக செயல்பட்டு தொற்று வியாதிகளை குணமாக்க பயன்படுகின்றது. இவற்றில் புரதம், பீட்டோ கரோட்டின், நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
மேலும், பழத்தில் டானின் உள்ளதால் ஆன்டி ஆக்ஸி டன்ட் ஆக செயல்படுகின்றது. இச்சிறப்புமிக்க பழத்தில் இருந்து ஜூஸ், சிரப், ஜாம், மிட்டாய் போன்ற மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரித்து பயன்படுத்தலாம்.
சாறுகளில் உடல்நலம்
இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.
வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.
வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.
புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.
நெல்லிக்கனி சாறு - நல்ல அழகை கொடுக்கும்.
துளசி சாறு - தொண்டைச்சளி, சோர்வு நீக்கும்.
முசுமுசுக்கை சாறு - மூக்கு நீர் வற்றும்.
அகத்தி இலை சாறு - அடிவயிற்று மலத்தை நீக்கும்.
நீரிழிவு நோயை தடுக்கும் உணவுகள்
இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய்படுத்திக் கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த சர்க்கரை நோயே. அதிகம் பசி உண்டாகும். நாவறட்சி அடிக்கடி ஏற்படும். உடல் சோர் வாகவே இருக்கும். அடிக்கடி சிறுநீர் பிரியும்.
கை, கால் மரத்துப் போகும். சில நேரங்களில் தடித்துப் போகும். கண் பார்வை மங்கல் உண்டாகும். பாதங்கள் உணர்வற்ற தன்மை உண்டாகும். திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை உண்டாகும். அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும். உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்
நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிடவேண்டிய சில காய்கறிகள்
வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப் பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு. இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.
பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும். நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாக வும் செய்து அருந்தலாம்.
காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை
சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், அய்ஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள். கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம். சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப் பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
-விடுதலை,19.5.14