புதன், 11 மார்ச், 2020

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட கொய்யாப் பழம்

எளிமையாகக் கிடைக்கக்கூடிய சிறந்த பழங்களில் ஒன்று கொய்யாப் பழம். இந்தப் பழத்தில் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள், வைட்டமின் சி, லைக்கோபின், நார்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன. கொய்யாப் பழம், பல நன்மைகளை உள்ளடக்கியிருக்கிறது.

கொய்யாப் பழம் மட்டுமல்லாமல் கொய்யாவின் இலையும் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. கொய்யாப் பழத்தில் இருக்கும் எண்பது சதவீத நீர்ச்சத்து மனிதத் தோலை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

கொய்யாப் பழம்

அளிக்கும் நன்மைகள்

ஜீரணத்துக்கு உதவுகிறது

கொய்யாப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. அதனால், அன்றாடம் கொய்யாப் பழத்தைச் சாப்பிட்டுவருவது ஜீரண மண்டலத்தைச் சீராக்குவதுடன், மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கொய்யாப் பழத்தில் அன்றாடம் எடுத்துக்கொள்ள வேண்டிய 12 சதவீத நார்ச்சத்து உள்ளது.

குறையும் ரத்தச்

சர்க்கரை அளவு

கொய்யாப் பழம் சாப்பிடுவதால் ரத்தச் சர்க்கரை அளவு குறைவதாகப் பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கொய்யாப் பழ இலைத் தேநீர் அருந்துவது நீண்டகால அடிப்படையில் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், கொய்யாப் பழத்தையும் கொய்யா இலைத் தேநீரையும் தொடர்ந்து அருந்தலாம்.

மாதவிடாய் வலியைக் குறைக்கிறது

மாதவிடாயின் போது பல பெண்கள் வயிற்று வலியை எதிர்கொள்கின்றனர். கொய்யாப்பழம் மாதவிடாயின்போது ஏற்படும் வலியைக் குறைக்கிறது. மாதவிடாயின் போது கொய்யாப் பழ இலைகளை உட்கொண்ட பெண்கள், மாதவிடாய் வயிற்றுவலியிலிருந்து பேரளவு நிவாரணம் பெற்றதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பேறுகாலத்துக்கு நல்லது

கொய்யாப் பழத்தில் இருக்கும் ஃபோலேட் ஊட்டச்சத்து பேறுகாலத்துக்கு அத்தியாவசியமானது. இந்த ஊட்டச்சத்து வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை, தண்டுவட வளர்ச்சிக்கு உதவுகிறது.

இதய நலம்

கொய்யாப் பழத்தில் இருக்கும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள், வைட்டமின்கள் இதயம் பாதிக்கப்படாமல் தடுக்க உதவுகிறது. அத்துடன், கொய்யாவில் அதிக அளவில் இருக்கும் பொட்டாசியம்,

கரையும் நார்ச்சத்து ஆகியவை இதய நலனைப் பேணுகின்றன. ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, கொழுப்புச் சத்தைக் குறைத்து இதய நோய்கள் உருவாவதிலிருந்து இந்தப் பழம் தடுக்கிறது.

மன அழுத்தத்தைக் குறைக்கும்

கொய்யாப் பழத்தில் இருக்கும் மக்னீசியம், உடலில் இருக்கும் நரம்புகள், தசைகளைத் தளர்த்துவதற்கு உதவுகிறது.

இது மன அழுத்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்துகிறது. மக்னீசியம் மன அழுத்தத்தைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.

தோல் நலன்

கொய்யாப் பழத்தில் இருக்கும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள் மனிதத் தோல் பாதிப்படைவதிலிருந்து தடுக்கின்றன. அத்துடன், வயதான தோற்றத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தப் பழம் உதவுகிறது.

கொய்யாப் பழ இலைகளை அரைத்து முகத்தில் தடவி வந்தால், பருக்களைக் குணப்படுத்த உதவும். பருக்களை உருவாக்கும் பாக்டீரியாவைக் கொய்யாப் பழ இலைகள் கட்டுப்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நோய் எதிர்ப்பு ஆற்றலை

அதிகரிக்கிறது

வைட்டமின் சி ஊட்டச்சத்து குறைவாக இருப்பதால் தொற்றுகளும் நோய்களும் ஏற்படுகின்றன. வைட்டமின்  சியை எடுத்துகொள்வதற்குச் சிறந்த வழியாகக் கொய்யாப் பழம் இருக்கிறது.

ஒரு கொய்யாப் பழம், அன்றாடத் தேவைக்கான வைட்டமின் சி சத்தை வழங்குகிறது. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி அளவைவிட இரண்டு மடங்கு கூடுதலான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் இருக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்குவதில் வைட்டமின் சி முக்கியமான பங்கை வகிக்கிறது.

 - விடுதலை நாளேடு 9 3 20

செவ்வாய், 3 மார்ச், 2020

நினைவுத் திறனை அதிகரிக்கும் மாதுளை

வைட்டமின்கள் சி, பி, பொட்டாசியம், ஃபோலிக் அமிலம், இரும்புச் சத்து, நார்ச்சத்து என மாதுளம் பழத்தில் முக்கியமான சத்துகள் நிரம்பியிருக்கின்றன. மாதுளம் பழச் சாற்றில் 100-க்கும் மேற்பட்ட பைட்டோகெமிக்கல் வகைகள் இருக்கின்றன.

மாதுளம் பழம் தரும் நன்மைகளில் சில:

மாதுளை முத்துகள் சிவப்பு நிறத்தில் இருப்பதற்குக் காரணம், அதிலிருக்கும் பாலிபீனால்கள். மாதுளம் பழச் சாற்றில் பாலிபீனால்கள் நிரம்பியிருப்பதால், அது நினைவுத் திறனை அதிகரிக்க உதவுகிறது. அன்றாடம் மாதுளம் பழச் சாற்றை அருந்தி வந்தவர்களின் நினைவுத்திறன் மற்றவர்களைவிடக் கூடுதலாக இருந்தது ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. அன்றாடம் காலையில் ஒரு கப் மாதுளம் பழச் சாறை அருந்துவது நினைவுத்திறனை அதிகரிக்கும்.

ரத்த அழுத்தம், இதய நோய்களைத் தடுக்கும்

மாதுளம் பழச் சாறு, இதய நலனைப் பாதுகாப்பதற்கான சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இதயத்தின் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, ரத்த குழாய்கள் இறுகாமல் பார்த்துக்கொள்ள மாதுளைச் சாறு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது. ஆனால், ரத்த அழுத்தம், கொழுப்பைக் குறைக்க மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு மாதுளைச் சாறு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதனால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகு, மாதுளம் பழச் சாற்றைப் பருகலாம். ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க மாதுளை உதவுகிறது.

புற்றுநோய்களைத் தடுக்கும்

மாதுளம் பழம் சில வகைப் புற்றுநோய்கள் உருவாவதைத் தடுக்கிறது. இந்தப் பழத்தில் வீக்கத்தை எதிர்க்கும் பண்புகள் அதிகமாக இருப்பதாலும், அதிகமான பாலிபீனால்கள் இருப்பதாலும், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியைக் குறைக்கிறது. அத்துடன், புற்றுநோய் பரவாமலும் தடுக்கிறது.

மார்பக, நுரையீரல், ஆண்மைச்சுரப்பி புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராடும் தன்மை மாதுளம் பழத்தில் இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

மூட்டுவீக்கம், மூட்டு வலி நிவாரணம்

மாதுளையில் இருக்கும் வீக்கத்தை எதிர்க்கும் பண்புகள் மூட்டுவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுடன், மூட்டு வலியிலி ருந்தும் பாதுகாக்கின்றன. மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும் அடைப்பு என்சைம்களை நீக்குவதற்கு மாதுளைச் சாறு உதவுகிறது. அத்துடன், மாதுளையில் அதிகமாக இருக்கும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்களால், வீக்கத்தை எதிர்க்கும் வலிமையான பண்பைக் கொண்டிருக்கிறது. அதனால், உடல் வீக்கத்தைக் குறைக்க இந்தப் பழம் உதவுகிறது.

எலும்புகளின் ஆரோக்கியம்

எலும்புகளின் தேய்மானத்தைக் குறைக்கவும் மாதுளம் பழம் உதவுவதாக 2013இ-ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதற்கும் மாதுளம் பழத்தில் இருக்கும் வலிமையான ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள்தாம் காரணம்.

- விடுதலை நாளேடு, 2.3.20

ஆரஞ்சு பழம் தரும் நன்மைகள்

வைட்டமின்கள், கனிமங்கள் அதிக அளவில் நிறைந்த பழங்களில் ஒன்று ஆரஞ்சு. இந்தப் பழம் உலகில் எல்லாப் பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி ஊட்டச்சத்து, செல்கள் பாதிப் படைவதிலிருந்து பாதுகாக்கிறது. ஆரஞ்சுப் பழத்தில் நார்ச்சத்து, பி வைட்டமின்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பொட்டாசியம் ஆகியவை நிரம்பியிருக்கின்றன.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது ஆரஞ்சுப் பழங்களில் தயமின், ரிபோஃபிளேவின், நியாசின், வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்டவை இருக்கின்றன. ஆரஞ்சுப் பழங்களில் அதிகமாக இருக்கும் வைட்டமின் சி ஊட்டச்சத்து உங்கள் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது.கண்களுக்குச் சிறந்தது

கண்களுக்குச் சிறந்தது

ஆரஞ்சுப் பழங்களில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் ஆகியவை கண்களுக்குச் சிறந்தவை. தோலைப் பாதுகாப்பது போல் ஆரஞ்சுப் பழங்கள் கண்களையும் பாதுகாக் கின்றன. அன்றாடம் ஓர் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால், உங்கள் பார்வையில் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளும்.

தோலுக்கு நல்லது

வயதாக வயதாக உடலின் மற்ற பாகங்களைப் போல் தோலும் பாதிப்படையத் தொடங்கும். உலோகங்கள் காற்றுப் பட்டவுடன் துருப்பிடிப்பதைப் போன்றதுதான் இது. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள், வைட்டமின் சி ஆகியவை தோல் சுருங்காமல் பாதுகாக்கின்றன.

மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது

ஆரஞ்சுப் பழத்தில் நிரம்பியிருக்கும் ஃபோலேட், ஃபோலிக் அமிலம் ஆகியவை மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மூளையைச் சீரான நிலையில் வைத் திருக்க இவை உதவுகின்றன. இந்த ஊட்டச்சத்துகள் நிரம்பியிருப்பதால் கர்ப்பிணிப் பெண்களும் இந்தப் பழத்தை உட்கொள்ளலாம். வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு நரம்புக் குறைபாடுகள் ஏற்படாமல் இது தடுக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்

ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் டி  லிமோனின், நுரையீரல், மார்பக, தோல் புற்றுநோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. அத்துடன், ஆக்சிஜனேற்றத் தடுப்பான்கள், வைட்டமின் சி ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட வைக்கிறது.

எடையைக் குறைக்க உதவும்

ஒரு கப் ஆரஞ்சு சாறில் வெறும் 85 கலோரிகள்தாம் இருக்கின்றன. ஊட்டச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும் சிறந்த பழங்களில் ஒன்று ஆரஞ்சு. அத்துடன், ஒரு கப் ஆரஞ்சில் 4.3 கிராம் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. அதனால், இது செரிமான மண்டலத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. அத்துடன், இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நீண்ட நேரம் உங்கள் வயிறு நிரம்பியிருக்கும்.

இதய நோய்களைத் தடுக்கும்

ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை, சக்கை உணவை அதிகமாக உட்கொள்வதால், இதயத்தின் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, இதய நோய்கள் உருவாகின்றன. ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் ஃபிளேவனாய்ட், ஹெஸ்பெரிடின் ஆகியவை கொழுப்புச் சத்தைக் குறைத்து, ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கின்றன. மாரடைப்பு, மற்ற இதய நோய்கள் வராமல் பாதுகாக்கவும் ஆரஞ்சுப் பழம் உதவுகிறது.

முடி உதிர்தலைத் தடுக்கிறது

ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி ஊட்டச்சத்து, கொலஜன் புரத உற்பத்திக்கு உதவு கிறது. இந்தப் புரதம்தான் முடி வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. உங்கள் கூந்தல் ஆரோக் கியமாக இருக்க வேண்டுமானால், அன்றாடம் ஒரு ஆரஞ்சு பழத்தை உட்கொள்வது சிறந்தது.

- விடுதலை நாளேடு, 2.3. 20

ஞாயிறு, 1 மார்ச், 2020

உடலை பாதுகாக்கும் இஞ்சி

உடலில் சேரும் வாயுவை வெளியேற்றும்.

* உமிழ்நீரைப் பெருக்கி, பசியைத் தூண்டி, செரிமானத்திற்கு அடித்தளமாய் அமைய உதவும்.

* இஞ்சித் தேன் சரும சுருக்கங்களை போக்கும்.

* மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வு உள்ளபோது, இஞ்சியை பாலில் தட்டிப் போட்டு, சிறிது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகலாம்.

* தொண்டை கரகரப்பு நீங்க, இஞ்சியை மென்று சாப்பிடலாம்.

* மாதுளம்பழச்சாறோடு இஞ்சி சேர்த்து பருக வாந்தி கட்டுப்படும்.

* இஞ்சிச் சாற்றில் இழைந்து பற்றுப்போட, நீர் இறங்கி, தலைபாரம் குறையும்.

 - விடுதலை நாளேடு 17 2 20

நலத்தின் தோழன் காளான்

காளானை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய், கொலஸ்ட் ரால் மற்றும் எடை குறைய உதவுகிறது.

* நோய் எதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்கிறது.

* காளானில் இருக்கும் உயர் லினோலிக் அமிலம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மேலும் இதி லுள்ள பீட்டா குளுக்கன்ஸ் புரோஸ் டேட் புற்றுநோயை வளரவிடாமல் தடுக்கிறது.

* இதில் உள்ள செலினிய சத்து எலும்பு, நகம், பல் மற்றும் முடிகளை வலுப்படுத்த உதவுகிறது.

* காளானில் நார்ச்சத்து மற்றும் சில முக்கிய என்சைம்கள் உள்ளன. இதில் இருக்கும் மிக உயர்ந்த லீன்புரதம் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பை எரிக்க உதவுகிறது.

* காளான் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது.

- விடுதலை நாளேடு 17 2 20