திங்கள், 3 நவம்பர், 2014

இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட பூண்டு


உள்ளிப் பூண்டு
கடுமையான வாசனையின் காரணமாக பூண்டு எல்லோருக்கும் பிடிப்பதில்லை. பூண்டு அற்புத மான மருந்துப் பொருள் என்பது அவர்களுக்குத் தெரியாது.  இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.
பூண்டின் மருத்துவக் குணங்களால் ஸ்பெயின்,  இத்தாலி, சீனா போன்ற நாடுகளில் எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துகளும் இருக்கின்றன. பூண்டின் மணத்துக்குக் காரணம் அதில் உள்ள சல்பரே.
நாள்தோறும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள் வோருக்கு பலவித நோய்கள் விலகிச் செல்கின்றன என்கிறார் பிரபல சமையல் கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத். பூண்டின் மகத்துவங்களைப் பட்டியலிட்டபடியே, பூண்டை வைத்து அசத்தலான மூன்று உணவுகளையும் செய்து காட்டுகிறார் அவர்.
நோய் எதிர்ப்புத் திறனைக் கொண்டிருக்கும் உணவுகளில் பூண்டு முதன்மை இடம் வகிப்பது. சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்தும். பூண்டு இருக்கும் போது பாக்டீரியாக்கள் சீக்கிரம் பெருகாது. இது விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் உண்ணும்போது செரிமான சக்தியைத் தூண்டும். வாயு சுலபமாக வெளியேற உதவி புரியும். மலச்சிக்கல் வராது. இது வெப்பத்தைக் கொடுக்கும் என்பதால் அளவுடன் சாப்பிடவேண்டும். பச்சையாக சாப்பிடும்போது அதிக பலன்களைப் பெறலாம்.
இதன் தோலில் அல்லிசின் என்ற வேதிப் பொருள் உள்ளது. தோலை உரிக்காமல் லேசாக சிதைத்து போடும் போது நமக்கு முழுமையான பலனைத்  தரும். கொழுப் பினால் அடர்த்தியான ரத்தத்தை அதனுடைய தன்மைக்கு கொண்டு வருவதில் இதற்கு இணையான உணவே இல்லை எனலாம். அதனால் இதய நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
ஆஸ்துமா மட்டுமின்றி நமது நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும். ஆயுர்வேதம், யுனானி, சித்தா போன்றவற்றில் கஷாயம், லேகியம், மாத்திரை, மருந்துகள் மட்டுமின்றி விஞ்ஞான முறைப்படியும்  இதனுடைய நற்குணங்களைக் கண்டு மாத்திரை வடிவில் சுலபமாக எங்கும் எடுத்துச் செல்லும் படியும் கிடைக்கிறது.


Read more: http://www.viduthalai.in/page-7/90445.html#ixzz3I4RFmLgo

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக