செவ்வாய், 5 மார்ச், 2019

உடலை பாதுகாக்கும் பருப்புகள்உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாதவை. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரத சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிக புரதம் உள்ளது. சைவ உணவை பொறுத்தவரை பருப்பு வகைகளை தான் நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்றாடம் நம்முடைய உணவுடன் கலந்து இருக்கும் பருப்பு வகையில் உள்ள சத்துக்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

துவரம் பருப்பு: இதில் புரத சத்துடன், ஃபோலிக் அமிலம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், குடலியக்கம் சீராக இருந்து, மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படுவதை தடுக்கலாம்.

பாசிப்பருப்பு: விட்டமின் ஏ,பி,சி,ஈ, கனிமச் சத்துக்களான கால்சியம், இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடல் எடையை குறைக்க உதவும். இதில் உள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பு அளவை குறைக்க உதவும்.

பச்சைப் பயறு: புரோட்டீன், கால்சியம், பொட் டாசியம். பி காம்ப்ளக்ஸ், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. உணவினை எளிதில் செரிமானமடைய செய்யும். உடல் எடை மற்றும் கொழுப்பு சத்து  குறைய உதவியாக இருக்கும்.

கொண்டைக்கடலை: கொண்டைக்கடலையில் ஃபோலிக் அமிலம், மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிர சத்து அதிக அளவில் உள்ளன. எனவே கொழுப்பு குறைவதுடன், இருதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு. மேலும் இது உடல் சக்தியையும் அதிகரிக்கும்.

மைசூர் பருப்பு: இந்த பருப்பின் முக்கிய சிறப்பு இதில் உள்ள நார்ச்சத்து. உடலில் உள்ள அசுத்தங் களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய் தாக்கம் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலில் ரத்தத்தை அனைத்து உறுப்புகளுக்கும் சீராக கொண்டு செல்ல உதவும்.

சுண்டல்: கொண்டைக்கடலையில் ஒரு வகை தான். கருப்பு நிறத்தில் இருக்கும் இதனை பெரும்பாலும் சுண்டல் செய்வது வழக்கம். உணவில் இதனை சேர்த்துக் கொள்வதால், இதயம் ஆரோக் கியமாக இருக்கும். புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், விட்டமின்கள், இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால், கருப்பைக் குழாயில் பிரச்சினை ஏற்படுவது, ரத்த சோகை பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கும்.

கடலைப் பருப்பு: ஃபோலிக் அமிலம், மாங்கனீசு, இரும்புச்சத்து, தாமிர சத்து மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் மற்ற பருப்பு வகைகளை விட இரண்டு மடங்கு புரதம் அதிகம் நிறைந்து இருப்பதால், உடல் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு மற்றும்  இதய நோய் பிரச்சினை ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

சிவப்பு காராமணி: பி காம்ப்ளக்ஸ், விட்ட மின்கள் மற்றும் பல்வேறு கனிமச்சத்துக்கள் அடங்கி யுள்ளது. புற்றுநோய், கொலஸ்ட்ரால் ஏற்படுவதை தடுக்கும். இதிலுள்ள விட்டமின்கள் மூளையின் செயல் பாட்டை சீராக வைக்கும். எலும்புகளை வலுவோடு வைக்க பெரிதும் உதவுகிறது.

தட்டைப் பயறு: தட்டைப் பயறு குழம்பின் சுவைக்கு ஈடு இணை இல்லை. இதிலுள்ள நார்ச்சத்து, இதய நோய் ஏற்படுவதை தடுக்கிறது. பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் துத்தநாகம் நிறைந்திருப்பதால், தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

உளுத்தம் பருப்பு: இட்லிக்கும், தாளிப்பதற்கும் பயன்படுத்தும் உளுத்தம் பருப்பில், கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து அதிக முள்ளது. அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த பருப்பு பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்தும் தன்மையுடையது.

- விடுதலை நாளேடு, 4.3.19

வெள்ளி, 1 மார்ச், 2019

கற்பூரவல்லி கைகண்ட மருந்து!மனதுக்கு உற்சாகத்தை அளித்து, வாசனையின் மூலமே பாதி நோய்களை விரட்டும் பேராற்றல்மிக்க மூலிகை இது.

இதிலுள்ள வேதிப்பொருட்கள்


பிளக்ட்ராந்தஸ் அம்போய்னிகஸ் (Plectranthus amboinicus) எனும் தாவரவியல் பெயர் கொண்ட கற்பூர வள்ளி, லாமியேசியே (Lamiaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. சதைப்பற்றுள்ள இதன் இலைகளில் வாசனைக்குக் குறைவிருக்காது. இலையின் விளிம்பு, கூர்மையற்ற பற்கள் போல் காட்சி தரும். மெல்லிய ரோம வளரிகள் தாவரம் முழுவதும் உண்டு. மலர்களின் நிறம் ஊதா. நறுமண எண்ணெய்கள் (Volatile oils), கார்வாக்ரால் (Carvacrol), காரீன்(Carene), கொமாரிக் அமிலம் (Coumaric acid) போன்ற வேதிப்பொருட்களைக் கொண்டது.

தீர்க்கும் நோய்கள்


மழை, குளிர் காலத்தில் அனைவரது சமையல் அறைகளிலும் கோழையகற்றி செய்கையுடைய கற்பூர வள்ளியின் மண-மிருந்தால், நுரையீரல் பாதை தொடர்பான நோய்களுக்கு அஞ்ச வேண்டியிருக்காது. வாழைக்காய், மிளகாய் பஜ்ஜி போல, இதன் இலைகளால் செய்யப்படும் கற்பூர வள்ளி பஜ்ஜி, மழைக்காலத்திற்கு உகந்தது!

இலையை அவியல் செய்து சாறு பிழிந்து அல்லது இலைச்சாற்றைச் சட்டியிலிட்டு சுண்டச் செய்து, கப நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம். அசைவ உணவு வகைகளைச் சமைக்கும்போது, இதன் இலைகளைச் சேர்த்துக் கொள்ள, செரிமானம் துரிதப்படுவதுடன், உணவின் சுவையும் மணமும் கூடும் என்பது சமையல் நுணுக்கம். கற்பூர வள்ளியோடு, தேங்காய், பருப்பு, கொத்துமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து சட்னியாகச் செய்து சாப்பிடலாம்.

இதன் வாலடைல் எண்ணெய்யில் உள்ள பி-சைமீன்(p-cymene),  தைமால்(thymol) ஆகிய வேதிப் பொருட்கள், நோய்க் கிருமிகளை அழிப்பதாக ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. இதிலிருக்கும் வேதிப் பொருட்கள் நுரையீரல் பாதையை விரிவடையச் செய்து, சுவாசம் முறையாக நடைபெற வழிவகுக்கும். அதிகக் கதிரியக்கத்தால் டி.என்.ஏ.வுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் திறன் கொண்டது இது என்று கூறப்படுகிறது.

இதன் இலையிலிருந்து எடுக்கப்படும் சத்துக்கு, காயங்களை விரைவாகக் குணமாக்கும் தன்மை இருக்கிறது. இதில் உள்ள தைமால் எனும் வேதிப்பொருட்களுக்கு, பற்சிதைவை உண்டாக்கக்கூடிய பாக்டீரியாவை அழிக்கும் வன்மை இருப்பதால், பல்வேறு பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது.

கற்பூர வள்ளியின் கழறிலை நற்பாலர் நோயெல்லாம் நாசமாயகலுமே எனும் தேரையர் காப்பியப் பாடல், குழந்தைகளுக்கான மூலிகை இது என்பதை எடுத்துரைக்கிறது. கற்பூர வள்ளி இலைச் சாற்றைச் சிறிதளவு தாய்ப்பாலில் கலந்து கொடுக்க, குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், இருமல் மற்றும் சளி தொந்தரவுகள் குறையும். வயிறு உப்பி, மலம் சரியாக வெளியேறாமல் இருக்கும் குழந்தைகளுக்கு, இதன் இலைச் சாற்றை வெது வெதுப்பான நீரில் கலந்து கொடுக்கலாம்.

தைலம்


கற்பூர வள்ளி, ஏலம், கிராம்பு ஆகியவற்றை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து கஷாயமாக்கி இயற்கையான தேன் சேர்த்துப் பருக, செயற்கை இருமல் டானிக்குகளின் தேவையிருக்காது. காலை எழுந்ததும் அடுக்கடுக்கான தும்மலுடன், மூக்கில் நீர் வடிந்தால், இதன் சாற்றை நல்லெண்ணெய்யோடு சேர்த்துக் காய்ச்சி தலைக்குத் தேய்க்கலாம்.

பானம்


இதன் இலைகளை நறுக்கி, நீரிலிட்டுக் கொதிக்க வைத்து, காலையிலும் மாலையிலும் கற்பூர வள்ளித் தேநீராகப் பருக, தொண்டைக்கு இதம் கிடைக்கும். தொண்டை கரகரக்கும் போதே, சிறிதளவு இலையை மென்று சாப்பிட, தொண்டையில் கட்டிய கபம் இளகும். உண்ட உணவு செரிக்காமல் வயிற்றுக்குள் ஏற்படும் தொல்லைகளைத் தடுக்க, கற்பூர வள்ளிச் சாற்றை, நீரில் கலந்து பருகலாம்.

தண்ணீரில் கற்பூர வள்ளி இலைகளைச் சிதைத்துப் போட்டு, ஆவி பிடிக்கலாம். குழந்தைகளுக்குச் சளி, இருமல் இருக்கும்போது கற்பூர வள்ளி இலைச் சாற்றைக் குழந்தைகளின் மார்புப் பகுதியில் தடவலாம். கொசுக்கள் வராமல் தடுக்கும் மூலிகைகளுள் கற்பூர வள்ளியும் ஒன்று. ஸீ

-  உண்மை இதழ், 16-30.11.18