திங்கள், 10 டிசம்பர், 2018

நிலவேம்பு குடிநீரின் மருத்துவப் பயன்கள்



டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று பீதி கிளம்பும்போதெல்லாம் நிலவேம்பு பற்றிய பேச்சும் வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது நிலவேம்பு. காய்ச்சலைத் தடுக்கும், குணப்படுத்தும் மருந்தாக இருப்பதுடன் வேறு பல நன்மைகளைச் செய்யும் திறனும் கொண்டது நிலவேம்பு என்று புகழ்கிறார்கள் மாற்று மருத்துவர்கள்.

* கைப்பிடி அளவு நிலவேம்புப் பொடியை 500 மி.லி. தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, 2 ஏலக்காய், 2 கிராம்பு போன்றவற்றையும் வாசனைக்காக சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிட வேண்டும். கருப்பட்டி, பனங்கற்கண்டு, வெல்லம் என ஏதாவது இனிப்பு சேர்த்துக் கொள்ளலாம். அது பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும். (வெள்ளை சர்க்கரை பயன்பாட்டை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அதுவே ஆரோக்கியத்துக்கு உகந்தது.) காய்ச்சிய பிறகு, 13 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் 15 மிலியும், பெரியவர்கள் 30 மிலியும் சாப்பிடலாம்.

* எந்த விஷக்காய்ச்சலாக இருந்தாலும் நில வேம்பு குடிநீருக்குக் கட்டுப்பட்டுவிடும். காய்ச்சலின் போது உடலில் இருக்கும் வைரசையும் முழுமை யாக அழித்துவிடுவதால் காய்ச்சலுடன் மூட்டு வலியும் காணாமல் போய்விடும்.

* நிலவேம்பு குடிநீரால் எந்த பக்க விளைவுகளும் கிடையாது. காய்ச்சலுக்காக ஏற்கெனவெ ஆங்கில மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தாலும், நிலவேம்பு குடிநீரும் எடுத்துக் கொள்வது உங் களுடைய ஆரோக்கியத்தை விரைவில் உறுதி செய்து நோயிலிருந்து விடுதலை தரும். காய்ச்சலால் ஏற்படும் உடல் சோர்வும் சரியாகிவிடும்.

* வாத மிகுதியால் ஏற்பட்ட காய்ச்சல், தலை நீரேற்றம், உடல்வலி ஆகியன போகும். பல்வேறு வகையான காய்ச்சலோடு அது தொடர்பான தொல்லைகளையும் காத தூரம் ஓட்டிவிடும்.

* குழந்தைகளின் வயிறு தொடர்பான கோளாறுகள், மண்ணீரல் வீக்கம், சுவாசப் பாதையில் உண்டாகும் தொற்றுநோய்கள் ஆகிய பிரச்சினை களுக்கும் தீர்வு தருகிறது நிலவேம்பு.

* நிலவேம்பு மனித சமூகத்துக்கு மிகவும் அச்சுறுத்தலாக விளங்கும் எச்.அய்.வி. என்ற மூன் றெழுத்தால் குறிப்பிடப் பெறும் மிக மோசமான உடலையும் உள்ளத்தையும் கெடுத்து உயிருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பால்வினை நோய்க்கு பலமான எதிரியாகச் செயல்பட்டு எதிர்த்து நின்று போராடி குணம் தரவல்லது.

* டெங்கு காய்ச்சல் மனித உடலில் உள்ள தட்டணுக்களை குறைத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிதைக்கிறது. நிலவேம்பு குடிநீர் நோய் எதிர்ப்பு மண்டலத்தை காத்து உடலிலுள்ள நீர்சத்து குறைபாட்டை சரிசெய்து உடலை காக்கிறது.

* பொதுவாக நாம் பயன்படுத்தும் நிலவேம்பு குடிநீர்   என்ற நீர்ம வடிவத்தில் வைரஸ் எதிர்ப்பு பொருளாக செயல்படுகிறது. உடலின் செயல்பாடுகள் மாறாமல் நோயிலிருந்து காத்து உடலை நல்ல நிலையில் வைப்பது இதன் சிறப்பம்சம்.

* நிலவேம்பினால் மலட்டுத்தன்மை, ஆண்மைக் குறைவு ஏற்படும் என்பதெல்லாம் எந்தவித ஆதார மும் இல்லாத வதந்திதான். நிலவேம்புக்கு தற்போது கிடைத்திருக்கும் அங்கீகாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் கிளப்பும் வீண்வம்பு அது. அரசு பல்வேறு ஆராய்ச்சிகளை செய்த பிறகே நிலவேம் பினை பரிந்துரை செய்துள்ளது. இதனால் அச்ச மின்றி பொதுமக்கள் நிலவேம்பு குடிநீரைப் பயன் படுத்தலாம்.

எலும்பை பலப்படுத்தும்


பிரண்டை


பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகப் பயன்படுகிறது. எலும்பு பலவீனமான வர்கள், எலும்பு முறிவு உள்ளவர்கள் பிரண்டையை தொடர்ந்து பயன்படுத்தலாம். வாய்வு பிடிப்பு, கை கால் குடைச்சல் உள்ளவர்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது. வயிற்றுப் பொருமல் ஏற்படும் போது பிரண்டையை சூப்பாக செய்து சாப்பிட்டால், அந்த பிரச்சினையைத் தீர்க்கும் தக்க மருந்தாக அமையும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக் கிறது. பிரண்டையில் உடலுக்குத் தேவையான முழுமையான கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. இது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

-  விடுதலை நாளேடு, 10.12.18

வியாழன், 15 நவம்பர், 2018

நொச்சி



மார்பிலுள்ள கபத்தை அகற்றும் ஆற்றல் உடையது நொச்சி. ஆவி (வேது) பிடிக்க, ஒற்றடமிட, பற்றுப் போட, உள்மருந்தாகக் கொடுக்க எனப் பல்வேறு பரிமாணங்களில் நொச்சியைப் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத் தத்துவப் புரிதலின்படி, கபம் மற்றும் வாதத்தின் அத்துமீறலைத் தட்டிக்கேட்கும் தாவரம், நொச்சி.

இதிலுள்ள வேதிப்பொருட்கள்: லுடியோலி (Luteolin), வைடெக்ஸிகார்பின் (Vitexicarpin), யுர்சோலிக் அமிலம் (Ursolic acid), பீட்டா சைடோஸ்டீரால் (Beta – sitosterol), நிஷிடைன் (Nishindine), இரிடாய்ட் கிளைக்கோசைடு (Iridoid glycoside) ஆகிய தாவர வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

பயன்கள்: முறையற்ற மாதவிடாயைச் சீராக்க, நொச்சி இலைகள், மிளகு, கீழாநெல்லி சேர்ந்த மருத்துவ நுணுக்கம் சித்த மருத்துவத்தில் கையாளப்படுகிறது. ஹார்மோன் அளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி மாதவிடாயை முறைப்படுத்தும். இதன் இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடிக்க, இருமலின் தீவிரம் குறையும். குளிர்சுரம் ஏற்படும்போது நொச்சி இலைகளோடு மிளகுக் கூட்டி குடிநீரிட்டு உட்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்துக்கு (மாந்தம் என்பது உடல் முதல் உள பாதிப்புகளுக்கான அடிப்படை) பொடுதலை, உத்தாமணி, நொச்சி, நுணா போன்ற மூலிகைகளின் கூட்டு மருந்து அற்புதமான பலன்களைக் கொடுக்கும். இவற்றை வதக்கிச் சாறு பிழிந்து, சிறிதளவு குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கத்தைக் கிராமங்களில் இன்றும் காணலாம். மழையின் தீவிரம் அதிகரிக்கும்-போது, மூச்சிரைப்பும் அதிகரிக்கிறதா? கவலை வேண்டாம். நொச்சி, மிளகு, பூண்டு, திப்பிலி, கிராம்பு அரைத்து சிறிதளவாய் வாயில் அடக்கிக்கொள்ள சிரமம் மறையும்.

மருந்தாக: கொசுக்கள், பூச்சிகளை விரட்ட இதன் இலைகளைப் பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ப்ரோஸ்டாகிலான்டின் (Prostaglandin inhibiton) உற்பத்தியைத் தடுப்பதன் மூலம், தன்னுடைய வீக்கமுறுக்கி, வலி நிவாரணிச் செய்கையை நிலைநிறுத்துகிறது. இதிலிருக்கும் பாலிஃபீனால்கள், எதிர்-ஆக்ஸிகரனி செயல்பாட்டை வெளிப்-படுத்துகின்றன. பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை இதன் வேருக்கு இருப்பதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

இதன் இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாகக் காய்ச்சிக் குளிக்க, களைப்பினால் உண்டாகும் உடல் வலி மறையும். தலை, பாரமாக இருக்கும்போது, நொச்சியிலைகளை கொதிநீரில் போட்டு வேதுபிடிக்க, ஆவியோடு ஆவியாகப் பாரம் இலகுவாவதை உணர முடியும். உடலில் தோன்றும் வலி, சோர்வை வழியனுப்பி வைக்க, விளக்கெண்ணெயில் இதன் இலைகளை லேசாக வதக்கிவிட்டு, ஒரு துணியில் முடிந்து ஒற்றடமிடலாம். நொச்சி இலைகளைத் தலையணைக்குள் புதைத்துப் பயன்படுத்த, தலைவலி குறைந்து ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

தைலம்: நல்லெண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் நொச்சித் தைலத்தை, தலைக்குத் தேய்த்துக் குளிக்க பீனிச நோய்கள், ஒற்றைத் தலைவலி ஆகியவை மறையும். குழந்தை ஈன்ற தாய்மார்களைக் குளிப்பாட்டும் நீரில், நொச்சி இலைகளைச் சேர்க்க, சோர்வை நீக்கி, குறைந்திருக்கும் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும். கொசுக்கள் ஆற்றலை அட்டகாசம் செய்யும்போது, உலர்ந்த நொச்சி இலைகளையும் வேப்பிலைகளையும் சேர்த்துப் புகை போடலாம். மண்ணீரலில் உண்டாகும் நோய்களுக்கு, நொச்சியைப் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.

நம் நலம் காக்க வந்த நம் நொச்சியை, நாளும் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.

-  உண்மை இதழ், 1-15.11.18

திங்கள், 12 நவம்பர், 2018

நுரையீரல் நோய்களை குணமாக்கும் இஞ்சி



இஞ்சித் துவையலை ருசி பார்க்காதவர்கள் மிகவும் குறைவு. தவிர சமையலிலும் இஞ்சியை தாரளமாக பயன்படுத்திக் கொள்கிறேம். பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க்கிறர்கள்.

இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றலும் கபம், வாதம், சிலேத்துமம் ஆகியவற்றை போக்குகிறது. பசியைத் தூண்டும். உடலுக்குப் பலத்தை யும், வீய விருத்தியையும் தரும்.

ஞாபக சக்தியை வளர்க்கும். கல்லீலைச் சுத்தப்படுத்தும். வயிற்றில் சேர்ந்த வாயுவைப் நீக்கி பஞ்சு போல ஆக்கும். பிறகு அதிலுள்ள தீயப் பொருட்களையும், கிருமிகளையும் நீக்கி கபத்தால் உண்டாகும் எல்லா விதமான நோய்களையும் தடுக்கும்.

எலுமிச்சம் பழரசம் இந்துப்பு இரண்டையும் சேர்த்துப் போட்ட இஞ்சி ஊறுகாய் கபத்தையும், வாதத்தையும் போக்கும்.

முகம், மூக்கு தொண்டைகளைப் பற்றிய நோய்களையும், குன்மம், ஆஸ்துமா, பாண்டு நோய் ஆகியவற்றையும் இஞ்சி போக்கும்.

நுரையீரல் நோய்களைக் கூட இஞ்சி குணப் படுத்துகிறது. அதனால் தினந்தோறும் கொஞ்சம் இஞ்சியை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஆனால் ஒரு எச்சாக்கை. இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் தொண்டை கம்மி விடும். அதற்கு சர்க்கரையும், தேனும் மாற்றுப் பொருட்களாகும்.

-  விடுதலை நாளேடு, 12.11.18

அதிமதுரம் எனும் அருமருந்து



இனிப்பு, புளிப்பு என அறுசுவைகளின் பிரிவுகளைச் சுவை மொட்டுக்கள் நமக்கு அறிவித்திருக்கும். அதையும் தாண்டி அந்தச் சுவைகளுக்குள் இருக்கும் பிரிவு களை உணர்ந்திருக்கிறீர்களா..? நாவூறச் செய்யும் இனிப்புச் சுவையின் பிரிவை அறிந்துகொள்ள, அதிமதுரத்தைச் சுவைத்துப் பாருங்கள். இனிப்புச் சுவையிலும் வெவ்வேறு பரிமாணங்கள் இருப்பது தெரியவரும்.

இதன் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

தனது பெயரிலிலேயே இனிப்பைக் கொண் டிருக்கும் அதிமதுரம், மானிடர்களுக்காக இயற்கை உயிர்கொடுத்த மதுரப் பெட்டகம்! குரலில் சிறிதும் பிசிறு இல்லாமல், மதுரமான ஒலியை வழங்க உதவும் அதிமதுரம், பித்த, கப நோய்களுக்கான கசப்பில்லா இன்சுவை மருந்து! சீன மருத்துவத்தில் முதன்மை மருந்து எனும் அந்தஸ்து அதிமதுரத்துக்கு உண்டு!

பெயர்க் காரணம்: அதிங்கம், மதுகம், அட்டி ஆகியவை இதன் வேறுபெயர்கள். இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், அதிமதுரம், மதுகம் போன்ற பெயர்களும் உண்டு இதற்கு! இனிப்பு வேர் என்பதைக் குறிக்கும் விதமாக, லிகோரைஸ் எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு.

உணவாக: அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க் குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப் பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.

மருந்தாக: அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது ஆய்வு. இரைப்பு நோயாளர்களில் சுருங்கி யிருக்கும் மூச்சுக் குழாய்த் தசைகளை விரிவடையச் செய்யும் செய்கை இதன் வேதிப்பொருளுக்கு இருக்கிறது.

செல்களின் ஆரோக்கியத்தை மேம் படுத்துவதோடு, சில வைரஸ்களின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதிமதுரத்துக்கு இருப்பதாக ஆராய்ச்சி முன்மொழிகிறது. வலிப்பு நோய்க்கான மருந்தாக இதைப் பயன்படுத்தும் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வீட்டு மருந்தாக: அதிமதுரம், அக்கரகாரம், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம் ஆகிய வற்றைப் பொடித்து நாட்டுச் சர்க்கரை, தேன்  கலந்து செய்யப்படும் அதிமதுர ரசாயனம் பருவமழைக் காலத்துக்கே உரித்தான மருந்து. கீச்கீச் எனக் குரலுடைந்து பேசுபவர்களுக்கும் கம்பீரக் குரலை விரைவில் வழங்கும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதி மதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.

அதிமதுரப் பால், அதிமதுரச் சூரணம் ஆகியவை சித்த மருத்துவத்தில் முக்கியமான மருந்துகள். கசப்புச் சுவைமிக்கக் கூட்டு மருந்துகளில் இனிப்பைக் கொடுக்கவும், சுவை தத்துவ அடிப்படையிலும், அதிமதுரம் சேர்க்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் இதன் வேரை அய்ந்து நிமிடம் ஊறவைத்து, அதில் எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து சுவைமிக்க பானத்தைப் பருகலாம்.

கண்ணோய் உன்மாதம் விக்கல்வலி வெண்குட்டம் எனும் அதிமதுரத்துக்குச் சொந்தமான பாடல், மன நோய்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம் எனும் குறிப்பை வழங்குகிறது. வேர் ஊறிய நீரில் வாய்க்கொப்பளிக்க, வாய்ப்புண் மறையும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட அதி மதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இள நரையையும் கட்டுப்படுத்தும் என்பதை அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும் எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது.

இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும்.

சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

- விடுதலை நாளேடு, 12.11.18

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் திராட்சை



திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.  நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு.

திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளி வடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும்.

உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும்.

இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசிய மானது.

* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, அய்ந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.

* ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

* திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக் களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி திராட்சை சாறு குடிப்பது நல்லது!

* ஒரு கிளாஸ் திராட்சை சாறில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை “டயட்”டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக் கலாம்.

* “ரெஸ்வெரட்ரால்” எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் திராட்சை சாறில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்து

கிறது.

* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை திராட்சை சாறு  கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க் கான அபாயம் குறைக்கப்படுகிறது.

ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமாக இருக்கலாம்.

- விடுதலை நாளேடு, 24.9.18

ஆரஞ்சுப் பழத்தின் மருத்துவக் குணங்கள்



பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக் களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.

ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.

ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், அய்ஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிக மாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்து கிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இரு முறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சி யும் உடல் திசுக்களை புதுப் பிக்கின்றன.

ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உட லுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக் காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம்.

கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.

ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. சளி உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் சளி பிடிப்பது குணமாகும்.

மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்

நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண் ணாம்புச் சத்து குணப்படுத்தும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.

ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.

ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக் களும் உள்ளடங்கியுள்ளது.என்றும் இளமை யுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

- விடுதலை நாளேடு, 24.9.18

புத்திக் கூர்மையை அதிகரிக்கும் வெண்டைக்காய்



வெண்டைக்காயில் உள்ள உயர்தரமான பாஸ் பரஸ் புத்திக் கூர்மையை அதிகரிக்கச் செய் கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடிய ஒருவித மான தாவர பசைப் பொருளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப் பட்டு சக்தியாக மாறும் மாவுச்சத்தும் வெண்டைக் காயில் உள்ளன.

வெண்டைக்காயின் தாவரவிஞ்ஞானப்பெயர், ஹைபிஸ்கஸ் எஸ்குலேன்ட்டஸ்.  வெண்டைக்காய் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்னும் நார்ப்பொருளும் இதில் இருக்கிறது; இதயத்துடிப்பைச் சீராக்கும் மக்னீசியம் என்னும் பொருளும் இருக்கிறது. 100 கிராம் வெண்டைக்காயில் கிடைக்கும் கலோரி 66 ஆகும். இத்தகைய காரணங்களால் வெண்டைக்காய் முக்கியமான காய்கறியாகத் திகழ்கிறது.

வெண்டையின் சிறப்பான குணமே வழவழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் வழவழப்பை உண்டாக்குகின்றது. நறுக்கும் போது இந்த அமிலங் கள் வெளியே வருகின்றன. சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங் கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி சுத்தமான பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழகொழ திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும்.

வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பி யவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரால் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய் நாற்றம் அகலும். வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப் பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தி னால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும். சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச் சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கிறது.

நன்மை தரும் பாக்டீரியா

இதில் நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன. தயிரில் உள்ளதைப்போல இந்த பாக்டீரியாக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன. இதில் வைட்டமின் பி காணப் படுகிறது. வெண்டைக்காயை குழந்தைகளுக்கு வதக்கி உணவில் சேர்த்து தரலாம்.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதி கரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- விடுதலை நாளேடு, 24.9.18

புதன், 12 செப்டம்பர், 2018

உடலுக்கு நன்மை பயக்கும் சாத்துக்குடி



மனித உடலுக்கு நேரடியாக சத்துகளை கொடுப் பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமா வதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது


தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த காலங்களில் அதிகம் விளையும் பழங் உடலை களைச் சாப்பிட்டால் நல்லது. பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி


நோயின்றி காக்கின்றன.


மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகை யைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.


நோயுற்றவர்களுக்கு


நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.


ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர் களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.


இரத்த விருத்திக்கு


சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.


இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தி யாகும். உடல் அசதி நீங்கும்.


இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோ பின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகை யால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.


எலும்புகள் வலுவடைய


சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.


மலச்சிக்கல் தீர


மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம்.  எனவே மலச்சிக்கல் ஏற்ப டாமல் இருக்க பழங்களே சிறந்த மருந்தாகிறது. மலச் சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.


நன்கு பசியைத் தூண்ட


பசியில்லாமல் சிலர் அவதியுறு வார்கள். இவர் களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.


குழந்தைகளுக்கு


ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்துதான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.


பெண்களுக்கு


நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும் புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.


முதியோருக்கு


வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.


- விடுதலை நாளேடு, 10.9.18