வியாழன், 15 நவம்பர், 2018

நொச்சி



மார்பிலுள்ள கபத்தை அகற்றும் ஆற்றல் உடையது நொச்சி. ஆவி (வேது) பிடிக்க, ஒற்றடமிட, பற்றுப் போட, உள்மருந்தாகக் கொடுக்க எனப் பல்வேறு பரிமாணங்களில் நொச்சியைப் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத் தத்துவப் புரிதலின்படி, கபம் மற்றும் வாதத்தின் அத்துமீறலைத் தட்டிக்கேட்கும் தாவரம், நொச்சி.

இதிலுள்ள வேதிப்பொருட்கள்: லுடியோலி (Luteolin), வைடெக்ஸிகார்பின் (Vitexicarpin), யுர்சோலிக் அமிலம் (Ursolic acid), பீட்டா சைடோஸ்டீரால் (Beta – sitosterol), நிஷிடைன் (Nishindine), இரிடாய்ட் கிளைக்கோசைடு (Iridoid glycoside) ஆகிய தாவர வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.

பயன்கள்: முறையற்ற மாதவிடாயைச் சீராக்க, நொச்சி இலைகள், மிளகு, கீழாநெல்லி சேர்ந்த மருத்துவ நுணுக்கம் சித்த மருத்துவத்தில் கையாளப்படுகிறது. ஹார்மோன் அளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி மாதவிடாயை முறைப்படுத்தும். இதன் இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடிக்க, இருமலின் தீவிரம் குறையும். குளிர்சுரம் ஏற்படும்போது நொச்சி இலைகளோடு மிளகுக் கூட்டி குடிநீரிட்டு உட்கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்துக்கு (மாந்தம் என்பது உடல் முதல் உள பாதிப்புகளுக்கான அடிப்படை) பொடுதலை, உத்தாமணி, நொச்சி, நுணா போன்ற மூலிகைகளின் கூட்டு மருந்து அற்புதமான பலன்களைக் கொடுக்கும். இவற்றை வதக்கிச் சாறு பிழிந்து, சிறிதளவு குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கத்தைக் கிராமங்களில் இன்றும் காணலாம். மழையின் தீவிரம் அதிகரிக்கும்-போது, மூச்சிரைப்பும் அதிகரிக்கிறதா? கவலை வேண்டாம். நொச்சி, மிளகு, பூண்டு, திப்பிலி, கிராம்பு அரைத்து சிறிதளவாய் வாயில் அடக்கிக்கொள்ள சிரமம் மறையும்.

மருந்தாக: கொசுக்கள், பூச்சிகளை விரட்ட இதன் இலைகளைப் பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ப்ரோஸ்டாகிலான்டின் (Prostaglandin inhibiton) உற்பத்தியைத் தடுப்பதன் மூலம், தன்னுடைய வீக்கமுறுக்கி, வலி நிவாரணிச் செய்கையை நிலைநிறுத்துகிறது. இதிலிருக்கும் பாலிஃபீனால்கள், எதிர்-ஆக்ஸிகரனி செயல்பாட்டை வெளிப்-படுத்துகின்றன. பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை இதன் வேருக்கு இருப்பதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

இதன் இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாகக் காய்ச்சிக் குளிக்க, களைப்பினால் உண்டாகும் உடல் வலி மறையும். தலை, பாரமாக இருக்கும்போது, நொச்சியிலைகளை கொதிநீரில் போட்டு வேதுபிடிக்க, ஆவியோடு ஆவியாகப் பாரம் இலகுவாவதை உணர முடியும். உடலில் தோன்றும் வலி, சோர்வை வழியனுப்பி வைக்க, விளக்கெண்ணெயில் இதன் இலைகளை லேசாக வதக்கிவிட்டு, ஒரு துணியில் முடிந்து ஒற்றடமிடலாம். நொச்சி இலைகளைத் தலையணைக்குள் புதைத்துப் பயன்படுத்த, தலைவலி குறைந்து ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.

தைலம்: நல்லெண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் நொச்சித் தைலத்தை, தலைக்குத் தேய்த்துக் குளிக்க பீனிச நோய்கள், ஒற்றைத் தலைவலி ஆகியவை மறையும். குழந்தை ஈன்ற தாய்மார்களைக் குளிப்பாட்டும் நீரில், நொச்சி இலைகளைச் சேர்க்க, சோர்வை நீக்கி, குறைந்திருக்கும் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும். கொசுக்கள் ஆற்றலை அட்டகாசம் செய்யும்போது, உலர்ந்த நொச்சி இலைகளையும் வேப்பிலைகளையும் சேர்த்துப் புகை போடலாம். மண்ணீரலில் உண்டாகும் நோய்களுக்கு, நொச்சியைப் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.

நம் நலம் காக்க வந்த நம் நொச்சியை, நாளும் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.

-  உண்மை இதழ், 1-15.11.18

திங்கள், 12 நவம்பர், 2018

நுரையீரல் நோய்களை குணமாக்கும் இஞ்சி



இஞ்சித் துவையலை ருசி பார்க்காதவர்கள் மிகவும் குறைவு. தவிர சமையலிலும் இஞ்சியை தாரளமாக பயன்படுத்திக் கொள்கிறேம். பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க்கிறர்கள்.

இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றலும் கபம், வாதம், சிலேத்துமம் ஆகியவற்றை போக்குகிறது. பசியைத் தூண்டும். உடலுக்குப் பலத்தை யும், வீய விருத்தியையும் தரும்.

ஞாபக சக்தியை வளர்க்கும். கல்லீலைச் சுத்தப்படுத்தும். வயிற்றில் சேர்ந்த வாயுவைப் நீக்கி பஞ்சு போல ஆக்கும். பிறகு அதிலுள்ள தீயப் பொருட்களையும், கிருமிகளையும் நீக்கி கபத்தால் உண்டாகும் எல்லா விதமான நோய்களையும் தடுக்கும்.

எலுமிச்சம் பழரசம் இந்துப்பு இரண்டையும் சேர்த்துப் போட்ட இஞ்சி ஊறுகாய் கபத்தையும், வாதத்தையும் போக்கும்.

முகம், மூக்கு தொண்டைகளைப் பற்றிய நோய்களையும், குன்மம், ஆஸ்துமா, பாண்டு நோய் ஆகியவற்றையும் இஞ்சி போக்கும்.

நுரையீரல் நோய்களைக் கூட இஞ்சி குணப் படுத்துகிறது. அதனால் தினந்தோறும் கொஞ்சம் இஞ்சியை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஆனால் ஒரு எச்சாக்கை. இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் தொண்டை கம்மி விடும். அதற்கு சர்க்கரையும், தேனும் மாற்றுப் பொருட்களாகும்.

-  விடுதலை நாளேடு, 12.11.18

அதிமதுரம் எனும் அருமருந்து



இனிப்பு, புளிப்பு என அறுசுவைகளின் பிரிவுகளைச் சுவை மொட்டுக்கள் நமக்கு அறிவித்திருக்கும். அதையும் தாண்டி அந்தச் சுவைகளுக்குள் இருக்கும் பிரிவு களை உணர்ந்திருக்கிறீர்களா..? நாவூறச் செய்யும் இனிப்புச் சுவையின் பிரிவை அறிந்துகொள்ள, அதிமதுரத்தைச் சுவைத்துப் பாருங்கள். இனிப்புச் சுவையிலும் வெவ்வேறு பரிமாணங்கள் இருப்பது தெரியவரும்.

இதன் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

தனது பெயரிலிலேயே இனிப்பைக் கொண் டிருக்கும் அதிமதுரம், மானிடர்களுக்காக இயற்கை உயிர்கொடுத்த மதுரப் பெட்டகம்! குரலில் சிறிதும் பிசிறு இல்லாமல், மதுரமான ஒலியை வழங்க உதவும் அதிமதுரம், பித்த, கப நோய்களுக்கான கசப்பில்லா இன்சுவை மருந்து! சீன மருத்துவத்தில் முதன்மை மருந்து எனும் அந்தஸ்து அதிமதுரத்துக்கு உண்டு!

பெயர்க் காரணம்: அதிங்கம், மதுகம், அட்டி ஆகியவை இதன் வேறுபெயர்கள். இனிப்புச் சுவை அதிகம் இருப்பதால், அதிமதுரம், மதுகம் போன்ற பெயர்களும் உண்டு இதற்கு! இனிப்பு வேர் என்பதைக் குறிக்கும் விதமாக, லிகோரைஸ் எனும் பெயர் இதன் வேருக்கு உண்டு.

உணவாக: அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க் குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப் பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.

மருந்தாக: அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது ஆய்வு. இரைப்பு நோயாளர்களில் சுருங்கி யிருக்கும் மூச்சுக் குழாய்த் தசைகளை விரிவடையச் செய்யும் செய்கை இதன் வேதிப்பொருளுக்கு இருக்கிறது.

செல்களின் ஆரோக்கியத்தை மேம் படுத்துவதோடு, சில வைரஸ்களின் வீரியத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் அதிமதுரத்துக்கு இருப்பதாக ஆராய்ச்சி முன்மொழிகிறது. வலிப்பு நோய்க்கான மருந்தாக இதைப் பயன்படுத்தும் ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வீட்டு மருந்தாக: அதிமதுரம், அக்கரகாரம், சுக்கு, மிளகு, திப்பிலி, இலவங்கம் ஆகிய வற்றைப் பொடித்து நாட்டுச் சர்க்கரை, தேன்  கலந்து செய்யப்படும் அதிமதுர ரசாயனம் பருவமழைக் காலத்துக்கே உரித்தான மருந்து. கீச்கீச் எனக் குரலுடைந்து பேசுபவர்களுக்கும் கம்பீரக் குரலை விரைவில் வழங்கும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதி மதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.

அதிமதுரப் பால், அதிமதுரச் சூரணம் ஆகியவை சித்த மருத்துவத்தில் முக்கியமான மருந்துகள். கசப்புச் சுவைமிக்கக் கூட்டு மருந்துகளில் இனிப்பைக் கொடுக்கவும், சுவை தத்துவ அடிப்படையிலும், அதிமதுரம் சேர்க்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் இதன் வேரை அய்ந்து நிமிடம் ஊறவைத்து, அதில் எலுமிச்சைச் சாறு அல்லது தேன் கலந்து சுவைமிக்க பானத்தைப் பருகலாம்.

கண்ணோய் உன்மாதம் விக்கல்வலி வெண்குட்டம் எனும் அதிமதுரத்துக்குச் சொந்தமான பாடல், மன நோய்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம் எனும் குறிப்பை வழங்குகிறது. வேர் ஊறிய நீரில் வாய்க்கொப்பளிக்க, வாய்ப்புண் மறையும்.

குளிர்ச்சித்தன்மை கொண்ட அதி மதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இள நரையையும் கட்டுப்படுத்தும் என்பதை அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும் எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது.

இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும்.

சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.

- விடுதலை நாளேடு, 12.11.18