நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருளான இஞ்சி பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை, பெரும்பாலான வீடுகளில் பித்தம், மந்தம் போன்ற பிரச்சினைகளுக்கு சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரீதியாக இஞ்சிக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதைக் கூறுங்கள் என்று ஆயுர்வேத மருத்துவர் அசோக்குமாரிடம் கேட்டோம்.
பசியின்மை, வாந்தி உணர்வு, வயிறு உப்புசம், மூச்சுத்திணறல், பெருவயிறு(வயிறு வீக்கம்) முடக்குவாதம், இதய சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றை உஷ்ண தன்மை கொண்ட இஞ்சி குணப்படுத்தும் சக்தி உடையது. பெரு வயிறு பாதிப்பு உடையவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி, வயிற்றின் மேல் பகுதியில் இஞ்சியை அரைத்து தடவி வரலாம். மேலும், சுவை உணர்வு, பாலுணர்வு ஆகியவற்றையும் இஞ்சி அதிகப்படுத்தும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சியை லேகியம் மற்றும் சூரணமாக கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இஞ்சியை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் லேகியத்துக்கு ஆர்த்ரக்க ரசாயனம்( என்பது இஞ்சியின் சமஸ்கிருதப் பெயர்) எனவும், சூரணத்துக்குத் திரிகடுக சூரணம் எனவும் பெயர்.
இஞ்சியைக் காய வைத்து, சுக்காக மாற்றி சவுபாக்கிய லேகியம் தயாரிக்கிறோம். ஆர்த்ரக்க ரசாயனத்தில் இஞ்சியுடன் வெல்லம், லவங்கப் பட்டை, பச்சிலை(மூலிகை) குருவேர், கோரைக்கிழங்கு, தணியா, தேன் மற்றும் நெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.
இஞ்சியை முக்கிய பொருளாக வைத்து தயாரிக்கப்படும் எல்லா மருந்துகளும் கார சுவை கொண்டவை. ஆகவே, இஞ்சி, சுக்கு போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து சாப்பிடக் கூடாது. முக்கியமாக, அல்சரால் அவதிப்படுபவர்கள் சாப்பாட்டுக்குப் பிறகே இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகளை சாப்பிட வேண்டும்.
-விடுதலை,20.2.17