செவ்வாய், 9 மே, 2017

என்றூம் இளமை காக்கும் “இ”- வைட்டமின்!வைட்டமின்_ஏ மற்றும் ‘டி’யைப் போல இந்த ‘இ’ வைட்டமினும் கொழுப்பில் கரையும் தன்மை உடையது. கொழுப்பில் கரைந்த பின்னர் பித்தநீரும் சேரும்போதுதான் இது சிறுகுடலில் நன்கு உறிஞ்சப்படும்.

சிகப்பு அணுக்களின் உற்பத்திக்கு இந்த வைட்டமின் மிகவும் தேவை. அகச் சுரப்புகளில் முக்கியமாக பிட்யூட்டரி, அட்ரினல், இனப்பெருக்க ஹார்மோன்கள் நன்கு வேலை செய்ய, நன்றாக சரியானபடி சுரப்பதற்கு இந்த வைட்டமினும் சரிவர பெறப்பட வேண்டும். நமது உடல் இந்த வைட்டமினையும் ஒரு சில நாட்கள் கொழுப்பில் சேமித்து வைக்க இயலும்.

மாதவிடாய் நிற்கும் காலங்களில் இந்த வைட்டமின் சற்றே அதிகம் தேவை. மாதவிடாய் நின்ற பிறகு பலப்பல ஹார்மோன்களின் சுரப்பு குறையும்போது இந்த வைட்டமினும் உறிஞ்சப்படுவது குறையலாம்.

வைட்டமின் _ ‘இ’ நமது ஒரு நாளையத் தேவை மிகவும் குறைவுதான். ஆண்களுக்கு 10 மில்லி கிராமும், பெண்களுக்கு 8 மில்லி கிராமும்தான் தேவை. கர்ப்பமான காலங்களில் பெண்களுக்கு இன்னமும் 2 மில்லி கிராம் கூடுதலாகத் தேவை. பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 மில்லி கிராம் கூடுதலாகத் தேவை.

வயதாகும்போது கூடுதலாக இந்த வைட்டமினைப் பெற்றால் சீக்கிரமாக முதுமையடையாமல் இருக்கச் செய்யும்.

வைட்டமின்_இ சரியாக எடுத்துக் கொள்பவர்களது நடை, பாவனை எல்லாவற்றிலும் ஒரு நளினம், கம்பீரம் கிடைக்கும். எண்ணெய் வகைகளில் இந்த வைட்டமின் இருந்தாலும் அதை சூடு செய்தால் முழுவதும் அழிக்கப்படும். நமது உடலுக்குத் தேவையான பலனைத் தராது.

ஒரு சிலருக்கு மிகச் சீக்கிரமாகவே மாதவிடாய் நின்றுவிடும். அப்படி ஏற்படாமல் இருக்க இந்த வைட்டமினை மாத்திரை வடிவில் தினமும் உட்கொள்ளலாம்.

நமது உடலில் தசைகள், தசை நார்களின் பலத்திற்கும் வளரும் வயதில் தசைகள் ஆரோக்கியமாக உருவாக வைட்டமின்_இ உதவி புரிகிறது. வயதான பிறகு ஆடி ஆடிப் பலரும்  நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஏற்படாமல் கம்பீரமாக நடக்க தசைகளில் வலி ஏற்படாமல் இருக்க தினமும் இந்த வைட்டமின் உறுதுணை புரியும்.

இந்த வைட்டமினை நாம் உணவின் மூலம் சுலபமாகப் பெற இயலும். முழுத் தானியங்கள், பயறு வகைகள், வேர்க்கடலை, எள், அக்ரோட் போன்றவை மூலம் சுலபமாகப் பெறலாம். பயறை முளைகட்டும்போது பலப்பல என்சைம்கள் உற்பத்தி ஆகும். அதோடு அதில் உள்ள இந்த வைட்டமினும் நன்கு உறிஞ்சப்பட உதவும்.

இந்த வைட்டமினை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் இருந்து பெற இயலாது. எண்ணெய் வித்துக்கள், கொட்டை வகைகள் போன்றவையும் நமக்கு தினமும் சிறிதளவாவது தேவை.

மாதவிடாய் நின்ற பின்னர் இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் கால் மரத்துப் போவதைப் போன்ற உணர்ச்சி, பாதங்களில் குத்தும் வலி, நடக்கும்போது சிறிதே தடுமாற்றம் போன்றவை ஏற்படலாம். தொடர்ந்து மாத்திரை வடிவில் உட்கொண்டால் வலி குறையும். வலி குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் பலவிதமாக பாதிப்பும் ஏற்படும். பக்க விளைவுகளும் இருக்கும். அளவிற்கு அதிகமாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இப்பொழுது பலரும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்தான் உபயோகிக்கின்றோம். அந்த எண்ணெயில் இருந்து வைட்டமின்_‘இ’யைப் பெற இயலாது. இயற்கையான முறையில் செக்கில் ஆட்டிய எண்ணெயில் இருந்து பெற இயலும். இந்த வைட்டமினை மற்ற கொழுப்பில் கரையும் வைட்டமினைப் போல மீன், மீன் எண்ணெயில் இருந்து பெற இயலாது.

இந்த ‘ணி’ வைட்டமினைப் 
பெறும் வழிகள்:

1. முளைப்பயறு வேர்க்கடலை சாலட்

தேவையான பொருட்கள்: முளைவந்த பச்சைப்பயறு _ அரை கப், வேகவைத்த வேர்க்கடலை _ கால் கப், கேரட் துருவல் _ கால் கப், மாங்காய்த் துருவல் _ 1 டேபிள் ஸ்பூன், வெள்ளரிக்காய் அரிந்தது _ 1, உதிர்த்த மாதுளை முத்துக்கள் _ விரும்பும் அளவு, உப்பு _ தகுந்த அளவு, பச்சைமிளகாய் விழுது _ 1 டீஸ்பூன், எலுமிச்சம் பழம்_1, எண்ணெய்_1 ஸ்பூன், கடுகு, வெந்தயம் _கால் டீஸ்பூன் (தாளிக்க), பொடியாக அரிந்த கொத்துமல்லி _ சிறிதளவு, வறுத்த வெள்ளரி விதை _ 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: முளைவந்த பச்சைப்பயறுடன் மற்ற காய்கறிகள், மாதுளை முத்துகள், வேர்க்கடலை சேர்த்து நன்கு குலுக்கி வைக்கவும், அதோடு எண்ணெயில் கடுகு, வெந்தயம், தாளித்துச் சேர்த்த பின்னர் தகுந்த உப்பு, பச்சைமிளகாய் விழுது, எலுமிச்சையைப் பிழிந்து சேர்த்து குலுக்கி விடவும். பரிமாறும் கிண்ணத்தில் தேவையான அளவு போட்ட பின்னர் வறுத்த வெள்ளரி விதை தூவி பரிமாறலாம்.

2. முளை வெந்தய சாலட்

தேவையான பொருட்கள்: முளைத்த வெந்தயம் _1 கப், பொடியாக அரிந்த அக்ரோட் பருப்பு _ சிறிதளவு, வறுத்த எள் _ 1 டேபிள் ஸ்பூன், பொடியாக அரிந்த பேரீச்சம் பழம் _ 5, அரிந்த பாதாம் _ 6, தேங்காய்த் துருவல் _ கைப்பிடி அளவு.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உடனே பரிமாறலாம். இதற்கு உப்பு, காரம் தேவை இல்லை. அப்படியே மெதுவாக மென்று சாப்பிட்டால் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்.

3. மக்காச் சோள ‘சாட்’

தேவையான பொருட்கள்: வேகவைத்த மக்காச் சோள மணிகள் _ விரும்பும் அளவு, மிகப் பொடியாக அரிந்த குடமிளகாய் _ 100 கிராம், (மூன்று கலர் குட மிளகாயும் போடலாம்) அரிந்த கேரட் _ 100 கிராம் மிகப் பொடியாக அரிந்த முட்டைக் கோஸ் _ 50 கிராம், உப்பு _ தகுந்த அளவு, அரிந்த மாங்காய், வெள்ளரிக்காய் _ விரும்பும் அளவு, புதினா சட்னி _ 1 டேபிள் ஸ்பூன், பேரீச்சம் பழ இனிப்புச் சட்னி _ சிறிதளவு, ஓமப்பொடி _ மேலே தூவ, பொடியாக அரிந்த வெங்காயம் _ சிறிதளவு, ‘சாட்’ மசாலாத் தூள் _ அரை டீஸ்பூன்.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு அகலப் பாத்திரத்தில் சேர்த்து குலுக்கி விட்டு மேலே ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

அடிக்கடி சுண்டல் சாப்பிடுவதும் நமக்கு இந்த வைட்டமினைப் பெறச் செய்யும். ராஜ்மா, கொண்டைக்கடலை, முழு பச்சைப்பயறு, காராமணி போன்றவைகளை உபயோகித்து அடிக்கடி கிரேவி செய்யலாம். குழம்பிலும் போடலாம். பொரியல் செய்யும்போது காய்கறிகளுடன் சுண்டல் வகையையும் சேர்த்து செய்தால் இந்த வைட்டமினை சுலபமாகப் பெறலாம். தினமும் முளைகட்டிய ஏதாவது ஒரு பயறைப் பச்சையாக ‘சாலட்’ ஆக சாப்பிட்டாலே போதும். 

-உண்மை இதழ்,16-30.4.17

இயற்கை உணவின் வழி ஆன்ட்டி பயாடிக்ஸ் பெறும் வழிகள்!சளி, சுரம், தலைவலி போன்றவற்றிற்கு மருந்துகள் எடுக்கிறோம். இவை உடலில் பக்க விளைவுகளை உண்டாக்கும். இதைத் தவிர்க்க இயற்கையான உணவு உண்பதன் முலம் நோய்களைத் தவிர்க்கலாம்.

மஞ்சள்மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. இதில் உள்ள குர்குமின், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள மஞ்சள், இருமலுக்குச் சிறந்த மருந்து. சளி, இருமலினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால், தேனுடன் மஞ்சள் தூள் கலந்து சாப்பிடலாம். ஆயுர்வேத பாரம்பர்யத்தில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் சிறந்த பொருளாக மஞ்சள் கருதப்படுகிறது.

பூண்டு

தினசரி பூண்டு எடுத்துக்கொள்வது அனைத்து வகையான பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். நோய்க் கிருமிகளை மட்டும் அல்ல. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கும் தன்மை பூண்டுக்கு உண்டு. சளி, ஃப்ளூ, பல் வலி போன்றவற்றுக்கும் நிவாரணம் அளிக்கும். உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால், பூண்டின் முழுப் பலனும் கிடைத்து விடாது. எனவே, தினசரி ஒன்றிரண்டு பூண்டைத் தோல் உரித்து, சாலட், சூப் போன்றவற்றில் போட்டுச் சாப்பிடுவது நல்லது. பூண்டைப் போலவே, வெங்காயமும் சிறந்த ஆன்டிபயாட்டிக் உணவு.

இஞ்சி

இஞ்சியில், ‘ஜிஞ்சரால்’ எனும் வேதிப்-பொருள் உள்ளது. இது ஆன்டி-ஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. மாரடைப்பைத் தடுக்கிறது. மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. குழந்தைகளின் தொப்புளைச் சுற்றி இஞ்சிச் சாற்றைப் பற்றுப் போடுவதன் மூலம் அவர்களின் அஜீரணத்தைச் சரிப்படுத்தலாம்.

அன்னாசிப் பழகம்

ஆன்டிஃபங்கஸ் தன்மை கொண்டது. அன்னாசிப் பழத்தில் வைட்டமின் பி, புரோமலின் சத்து அதிகமாக உள்ளன. புரோமெலின், கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். ஜீரண மண்டல உறுப்புகளை வலுவாக்கும். அன்னாசிப் பழகத்தில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட தாது உப்புகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

எலுமிச்சைப் பழம்

இதில் உள்ள சிட்ரிக் அமிலம், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. ரத்தத்தைச் சுத்திகரித்து, நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சைச் சாற்றில் மருதாணி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து, காலில் தடவுவதன் மூலம் பாதவெடிப்புகள் சரியாகும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, முகப்பொலிவைத் தரும். பருக்களை நீக்கும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் உள்ள கந்தகம், கிருமிகளை அழிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இவை மட்டும் இன்றி, பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பினை முட்டைகோஸ் ஈடுசெய்யும். அல்சரைக் குணப்படுத்தும் குளூட்டமைன் சத்தும் இதில் உள்ளது.

செம்பருத்தி

செம்பருத்திப் பூவில் பாலிஃபீனால், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். புற்றுநோய் செல்களைத் தடுக்கும். ஃப்ரீரேடிக்கல்ஸைக் கட்டுப்படுத்தும். இதன் இலையைத் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்டி குடிநீருக்குப் பதிலாக எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் வெப்பம் இயல்புநிலையில் இருக்கும். செம்பருத்தி, முடி வளர்ச்சியை அதிகரித்து நரைமுடிப் பிரச்சினையைக் குணமாக்கும். காய்ந்த மொட்டுகளை ஊறவைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துத் தலையில் தடவினால், கூந்தல் கறுப்பாகும். மாதவிடாய் சரியாக வருவதற்கு அரைத்த செம்பருத்தி விழுதை வெறும் வயிற்றில் உண்ணலாம்.

தேன்

தேனில் உள்ள ஆன்டடிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. இதில், 17 முதல் 70 சதவிகிதம் வரை நீர்ச்சத்து உள்ளது. தேனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டால், உடல் இளைக்கும்; உடல் உறுதியாகும். ஆஸ்துமா பிரச்சினைக்குத் தேன், முட்டை மற்றும் பால் சேர்த்துப் பருகலாம். வாந்தி, ஜலதோஷம் போன்றவற்றுக்குத் தேனுடன் எலுமிச்சைப் பழச் சாறு கலந்து பருகலாம். மிதமான சூட்டில், பாலோடு தேன் சேர்த்து பருகும்போது ரத்தச்சோகையும் சரியாகும்.

தயிர்

தயிரில், ‘புரோபயாட்டிக்’ எனப்படும் நல்ல பாக்டீரியா நிறைந்துள்ளது. இது, உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை நீக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகின்றன. மேலும், இதில் உள்ள லேக்டோபேசியல் (லிணீநீtஷீதீணீநீவீறீ) செரிமானத்தைத் தூண்டி, வயிற்று உபாதைகளைச் சரிசெய்துவிடும்.

மாதுளம் பழம்

மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்-கள் ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த உற்பத்தியையும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகின்றன. மாதுளைச் சாற்றில் தேன் கலந்து பருகும்போது, இதயம் பலம்பெறும்; நரம்புத் தளர்ச்சி மற்றும் ஜீரணப் பிரச்சினைகள் நீங்கும். பித்தப் பிரச்சினைகள் சரியாக, மாதுளைச் சாற்றோடு கற்கண்டுப் பொடி கலந்து பருகலாம். மாதுளம் பழம் சாப்பிட்டால் இதயத்துக்கும் மூளைக்கும் சக்தி கிடைக்கும்.

மிளகு

சளி, சுரம், ஒவ்வாமை போன்றவற்றை மிளகு தடுக்கும். தினம் 5 மிளகு மென்றுச் சாப்பிட்டால் உடல் நலமாய் இருக்கும். பூச்சிக்கடியால் வரும் பாதிப்பு நீங்கும்.

துளசி

தினம் 10 துளசி இலைகளை மென்று தின்றால் சளி, ஒவ்வாமை நீங்கும். 
-உண்மை இதழ்,16-30.4.17

மாதவிலக்கின்போது வாந்தி, வயிற்றுவலி - எளிய தீர்வு!


13 முதல் 14 வயதில் பெண்கள் பருவம் அடைவர். அதாவது முதல் மாதவிலக்கு வருவதையே நாம் பருவம் அடைதல் என்கிறோம்.

ஆனால், தற்போது இரசாயனம் கலந்த பாக்கெட் உணவுகள், மைதா, பரோட்டா, செயற்கை பானங்கள் சாப்பிடுவதால், பெண் பிள்ளைகள் 10 வயதிலேயே பருவம் அடையும் அவலம்! எட்டு வயதில் பருவம் அடையும் அதிர்ச்சியான நிகழ்வுகளும் நிகழ்கின்றன.

எனவே, பாரம்பரிய உணவுகளை உண்டு, செயற்கை உணவுகளை விலக்குவதே இந்த அவலங்கள் அகல ஒரே வழி.

மாதவிலக்கின்போது சில பெண்களுக்கு வயிற்றுவலி கடுமையாக இருக்கும்! சாப்பிட முடியாது, நடக்க முடியாது. வாந்தியும் வரும்; வயிற்றைப் புரட்டும்.

இரண்டு நாள்கள்கூட இது நீடிக்கும். இதற்கு ஆங்கில மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு நிவாரணம் பெறுகின்றனர். இது மிக மிகத் தவறு. ஆங்கில மருத்து சாப்பிடுவது பல பாதகமான பக்க விளைவுகளை உண்டாக்கும்.

இவ்வாறு வலியும் வாந்தியும் வருவது திருமணம் ஆனபின் பெரும்பாலும் நீங்கி விடும்.

சரியான தீர்வு என்ன?

மாதவிலக்கின்போது வயிற்றுவலி, வாந்தி, அசதி வந்து, சாப்பிட முடியாத நிலை தொடங்கும்போதே,

நற்சீரகத்தை பொன்வறுவலாக வறுத்து, அதைத் தேவையான அளவுத் தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சினால் கஷாயம் கிடைக்கும். அதில் எலுமிச்சைச் சாற்றை லு தேக்கரண்டி கலந்து லு டம்ளர் குடித்தால் உடனே குணமாகும். மீண்டும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ரு டம்ளர் அளவு பருகினால் உடல் நலமாகும். இதனால் பக்க விளைவுகள் ஏதும் வராது. உடல் நலம் பெறும். பொதுவாகப் பெண்கள் பத்து வயது முதலே, சோற்றுக் கற்றாழைச் சோற்றை எடுத்து ஏழுமுறைத் தண்ணீரில் அலசியபின், அத்துடன் தேவையான அளவு தேன் சேர்த்து, தினம் அய்ந்தாறு துண்டுகள் சாப்பிட்டால் பெண்களுக்கு பலப் பிரச்சினைகள் வராது காக்கும்.

பெண்கள் உளுந்து வடை, களி, இட்லி இவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

கறிவேப்பிலையைப் பொடியாகவோ, துவையலாகவோ நிறையச் சாப்பிட வேண்டும். விதையில்லாப் பழங்களைத் தவிர்த்து, விதையுள்ள நாட்டுப் பழங்களைச் சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை, முருங்கைக்காய் வாரம் மூன்றுமுறை சாப்பிட வேண்டும்.

எள் சேர்த்த இனிப்பு உருண்டை சாப்பிடுவது பெண்களுக்கு மிகவும் நல்லது.

கீரைகள், பேரீச்சம்பழம் நிறையச் சாப்பிட்டு இரத்தச் சோகை வராமல் தடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் உடல்நலம் பெறுவதோடு, குழந்தையின்மை என்ற சிக்கல் வராது.

செயற்கை உணவுகள் உண்டால் குழந்தை உருவாகும் வாய்ப்பு பெருமளவு குறையும். எனவே, மேற்கண்ட பாரம்பரிய உணவுகளைத் தவறாது உண்டு, செயற்கை உணவுகளை விலக்கி, வளமோடு வாழுங்கள்!   
-உண்மை இதழ்,1.15.4.17