சனி, 21 மார்ச், 2015

அன்னாசி-பித்தக்கோளாறைப் போக்கும்அன்னாசி


இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங் களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப் பட்டுள்ளது.
அன்னாசி பெரும்பாலும் வெப்ப மான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது.
அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ஃப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதி கரிக்கும்.
இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் உள்ள இதர பிற வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.இது சோர்வின்றி செயல்பட ஏதுவாகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி நிறைய சாப்பிடலாம் என்கின்றனர் டாக்டர்கள்.
அன்னாசி பழத்தில் விட்டமின் பி உயிர்ச்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு, பல நோய்களை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர் களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்தாகும்.
நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப் பிட்டு வரவேண்டும்.
இதனால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப் பழத்தை, தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர, அனைத்து விதமான உடல் உபாதை களும் தீரும். இதைத் தொடர்ந்து ஜூஸ்சாகவும் குடித்து வர, ஆண்களின் முக அழகு பொலிவு பெருகும்.
ஒரு நாளைக்கு தேவையான மாங்கனீஸ் உப்பைப் பெற ஒரு கப் பழத் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் போதும் அல்லது அரைப்பழம் சாப்பிட்டால் போதும். பழம் புதிய பழமாக இருக்க வேண்டும். பொட்டாசியம், கால்சியம் போல உடல் நலத்திற்குத் தேவையான உப்பு குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது. இளம்பெண்கள் உட்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.
ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்க விடவும்.இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறு நாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
 -விடுதலை,21.3.15

வெள்ளி, 20 மார்ச், 2015

வசம்பு - விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு


இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழா நெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக்  என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப் பது இந்த வசம்பைத் தான்.
கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப் பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்று நோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப் பான் என்று கூறப்படுகிறது.
·         சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத் தலாம்.
·         வசம்பை தூள் செய்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
·         இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று தேக்கரண்டி கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
·         கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
·         பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

                   -விடுதலை ஞாயிறு மலர்,14.3.15 பக்கம்-2

ஞாயிறு, 1 மார்ச், 2015

கற்றாழை - குளிர்ச்சி தரும் கற்றாழை



கற்றாழை என்பது ஒரு சிறு கள்ளி வகையைச் சார்ந்தது கற்றாழை கொத்தாக வளரும் அடிப்பாகம் நாற்சதுரமாகவும் வளர, வளர நுனி சிறுத்தும் மூங்கில் போத்துப் போல வளரும், சாம்பல், சிவப்பு நிறம் கலந்து, பசுமையாக வளர்ந்திருக்கும். சுமார் இரண்டடி உயரம் வரை வளரும். வறட்சியைத் தாங்கும்.
நுனியிலும் பக்கங்களிலும் சிறிய பூக்கள் பூக்கும். இயற்கையான சிறு குன்றுகளில் ஒட்டுப் பாறைகளின் ஓரங்களில் அதிகம் காணப்படும். ஆதி வாசிகள்  மலையில் நடக்கும்போது தண்ணீர் தாகம் ஏற்பட்டால் இதன் தண்டைச் சாப்பிடுவார்கள். இது கைப்பு, கார்ப்பு, புளிப்பு கலந்த ஒரு சுவை இருக்கும்.  இதன் இனப் பெருக்கம் வேர், பக்கக்கன்றுகள் அல்லது தண்டுகள் மூலம் நடைபெறும்.
கற்றாழை உமிழ் நீரைப் பெருக்கும், பசியைத் தூண்டும், குளிர்ச்சியை உண்டாக்கும். செரிமானத்தை விரைவு படுத்தும், உடலை உரம் பெற வைக்கும்.  குமட்டல் வாந்தியை நிறுத்தும், நாவின் சுவையுணர்வை ஒழுங்குப் படுத்தும், நீர் வேட்கையை அடக்கும்.
துவையல்: இதை சிறு துண்டுகளாக நறுக்கி  நெய் விட்டு வதக்கி, உளுந்து, இஞ்சி, கொத்துமல்லி, மிளகு, சீரகம், புளி, வைத்துத் துவையலாக  அரைத்து வாரம் ஒருமுறை உணவில் உட்கொள்ள மேற்கண்ட பயனைப் பெறலாம். வாந்தி, நீர் ஊறல் நிற்கும், உடல் வெப்பம் குறையும், உடல்  நலம் பெறும்.
பித்த குன்மம், குடல் வாய்வுக்கு மருந்து செய்வோர் இதனைச் சேர்த்துச் செய்வார்கள். மேலை நாடுகளில் கற்றாழையின் தன்மையை ஆராய்ச்சி செய்து அது உடல் பருமனை குறைக்கும் மற்றும் சர்க்கரை நோயைக் குணமாக்கும் என்று கண்டுபிடித்து  மேலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள். இது தற்போது தமிழ்நாட்டில் வியாபாரப் பயிராகச் செய்கிறார்கள்.
கற்றாழையின் மெல்லிய தண்டை நீரில் சுத்தம் செய்து மூன்று அங்குலத் தண்டுகள் இரண்டு நாள்கள் அதிகாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்  சர்க்கரை வியாதிகள் குணமாகும் என்பதை தற்போது அறிந்துள்ளார்கள்.

-விடுதலை,9.2.15

பல நோய்களை தீர்க்க உதவும் அதிமதுரம்


அதிமதுரம் கொடி வகையை சேர்ந்தது. காடுகளில் புதர் செடியாக வளரும் கூட்டிலைகளை கொண்டது. கணுக்களில் சிறிய மஞ்சள் கலந்த ஊதா நிறபூக்கள் நிரம்பியதாக இருக்கும். இதன் வேர்கள், இலைகள் மருத்துவத்திற்கு பயன்படுகிறது. வேர் கடை சரக்காக நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். மலச்சிக்கலை போக்கும் உணவு மண்டலத்தை சீராக இயங்கவைக்கும்.
ஊட்டசத்து நிரம்பியது. சிறுநீர் புண்களை ஆற்றும், கல்லடைப்பை நீக்க பயன்படும். அதிங்கம், அஷ்டி, மதூகம், மதூரம் என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் அதிமதுரம் உலகத்தின் அனைத்து மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதை எளிய முறையில் பயன் படுத்தி பல்வேறு நோய்களையும் தீர்க்கமுடியும்.
பித்தம், வாதம். ரத்ததோசம், வீக்கம், வாந்தி, நாவறட்சியை போக்கும். தாகம், அசதி, கண்நோய்கள், விக்கல், எலும்பு நோய்கள், மஞ்சள்காமாலை, இருமல், தலை நோய்கள் ஆகியவற்றை குணமாக்கும். வேர்கள் இனிப்புச்சுவையும் குளிர்ச்சித்தன்மையும் கொண்ட வையாக இருக்கும்.
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளம்வறுப்பாய் வறுத்து சூரணம் செய்து வைத்து கொண்டு சூட்டினால் ஏற்படும் இருமலுக்கு 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட தீரும்.
சிலர் உடல் உறுப்புகளில் புண் ஏற்பட்டு ரத்தவாந்தி எடுப்பார்கள். இவர்கள் அதிமதுரப்பொடி, சந்தனத்தூள் சமஅளவாக கலந்து அதில் 1 கிராம் அளவில் அளவில் பாலில் கலந்து குடிக்க ரத்தவாந்தி நிற்கும். புண்கள் ஆறும்.
போதுமான அளவில் தாய்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அளவில் அதிமதுர சூரணத்தைப்பாலில் கலந்து அதனுடன் இனிப்பு சிறிது சேர்த்து சாப்பிட்டால் தாய்பால் நன்கு சுரக்கும். அதிமதுரத்தை நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் இளநரை ஏற்படாது. முடி உதிர்தலும் நிற்கும். அதிமதுரத்தை சூரணமாக்கி காற்றுபுகாத பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தொண்டைக்கட்டு, இருமல், சளி உள்ளவர்கள் 1 முதல் 2 கிராம்வரை எடுத்து தேனில் குழைத்து காலை மாலை சாப்பிட தீரும். 1முதல் 2 கிராம் அளவில் அதிமதுரப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வர மார்பு, ஈரல், இரைப்பை, தொண்டை ஆகியவற்றில் உள்ள வறட்சி நீங்கி நலம் உண்டாகும். இருமல், மூலம், தொண்டைகரகரப்பு, நரம்புதளர்ச்சி தீரும்.

-விடுதலை,23.2.15பக்கம்-7

.