மூலிகை மருத்துவம் நேற்று, இன்று, நாளை
- டாக்டர் சு. நரேந்திரன்
ஆதிமனிதன் உடல்நலக் குறைவிற்கான காரணங்களை அறிய முயன்றான். நோய்களில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் விலங்குகளைக் கூர்ந்து கவனித்தான். அதன் பயனாய் விலங்குகளிடமிருந்து மூலிகை மருத்துவ அறிவினைக் கற்றான். இந்நோய் தீர்க்கும் கலை நூற்றாண்டுகள் செல்லச் செல்ல மென்மேலும் முன்னேற்றம் பெற்றது. இதன் பயனாய் மனிதனுக்குத் தேவையான உணவு முதல் மருந்து வரை தாவரத்தில் இருக்கின்றது என்ற நுட்பம் வெளிப்பட்டது. இக்கருத்தையே மூலிகை மருத்துவத்திற்கான ஆரம்பமாகக் கொள்ளலாம்.
மூலிகை தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் 70-80 விழுக்காடு, குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் முதன்மை மருத்துவமாகப் பயன்பாட்டில் உள்ளது. இதற்குக் காரணமாகக் கருதப்படுவது இதில் பக்க விளைவுகள் கிடையாது, விலை குறைந்தது, தான் வசிக்கும் இடத்திலேயே எளிதில் கிடைக்கக்கூடியது ஆகியவையாகும். உலகில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு மற்ற வகை மருந்துகளின் பயன்பாடுகளைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக உலக சுகாதாரக் கழகம் கணக்கிட்டுள்ளது. இன்றைய ஆங்கில மருத்துவம்கூட கடந்த நூற்றாண்டுக்கு முன்னர் மூலிகையை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பமாகி உள்ளது. எ.கா.: ஆஸ்பிரின், வில்லோ பட்டையிலிருந்தும், டிஜாக்சின் பாக்ஸ் கிளவ் என்ற கையுறை போன்ற செடியிலிருந்தும், குயினைன், சின்கோனா பட்டையிலிருந்தும், மார்பியா கசகசா செடியின் காயிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
மருத்துவ வரலாறு என்பது நோயைக் குணமாக்க மூலிகையிலிருந்து தொடங்குகிறது. ஆனால், தொழிற்புரட்சிக்குப் பின் சுகாதாரக் கேடுகள் மலிந்த நிலையில் அலோபதி மருத்துவம் தோன்றியது. அதன் பின்னர் மூலிகை மருத்துவம் ஒரு சிறந்த அரிய நோய் தீர்க்கும் மருத்துவமாக இருப்பினும் ஆங்கில மருத்துவ மோகத்தால் ஆர்வம் குறைந்து இதன் பயன்பாடும் 20ஆம் நூற்றாண்டில் குறைந்தது.
ஏனெனில், மூலிகை மருத்துவத்தினால் பயன் இல்லை அல்லது நோயைத் தீர்க்காது என்பதல்லாது, நவீன மருத்துவத்தினால் அதிக வருமானம் கிடைக்கிறது என்பதனாலும், தடுப்பு மருத்துவம் மற்றும் உடன் தீர்க்கவல்ல சில மருந்துகள் மேலை மருந்தில் கண்டுபிடிக்கப்பட்டதும் ஆகும்.
19ஆம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி மென்மேலும் வளர்ச்சிபெற்ற நிலையில் மூலிகை மருத்துவமானது போலி மருத்துவம் அல்லது அரைகுறை மருத்துவம் என்று ஒதுக்கித் தள்ளப்பட்டது. ஆனாலும், 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு நவீன மருந்துகளால் ஏற்படும் பக்க, நச்சு விளைவுகளைக் கண்டு கவலை கொண்டு, பயந்து இதற்கு மாற்று வழியான இயற்கை மருத்துவமான மூலிகை மருத்துவமே சிறந்தது என்று மூலிகை மருத்துவத்திற்-கு ஒரு புதிய வேகம் தோன்றி, பயன்பாடு அதிகரித்தது. இதன் காரணமாக மாற்று மருத்துவ முறை என்று அமெரிக்காவில்கூட 1992ஆம் ஆண்டு தேசிய நலக் கழகத்தில் ஏற்படுத்தப்பட்டது. மேலும், உலக சுகாதார நிறுவனம் வளரும் நாடுகளில் நவீன மருத்துவத்தால் தரமுடியாத, பெறமுடியாத நிலையில் மருத்துவத்தை மூலிகை மருத்துவத்தின் மூலம் பெற ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தியது.
இதன் காரணமாக நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் இதன் தேவை அதிகரித்து, பயன்பாடும் மிகுந்து வருகிறது. ஏனெனில், இம்மருந்துகளுக்கான தயாரிப்புச் செலவு குறைவு. தங்கள் கலாச்சாரத்திற்கு ஒத்துவருவது, உடலுக்குக் கேடு விளைவிக்காதது என்பதால் ஆகும். இருப்பினும், அண்மைக் காலங்களில் எல்லா மூலிகை மருந்துகளும் உடலுக்குக் கேடு விளைவிக்காது என்று சொல்வதற்கில்லை.
இன்று பயன்பாட்டில் உள்ள பல மூலிகை மருந்துகள் அவற்றின் தரத்தையும் தீங்கின்மையையும், செயல் திறனையும் ஆய்வு மூலம் நிரூபிக்கத் தவறிவிட்டது. இவற்றை மனதில் கொண்டே நவீன மருத்துவத்திற்கு மூலிகை மருத்துவம் ஒரு மாற்றுமுறை மருந்தாகவோ அல்லது நவீன மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோய்களைத் தீர்க்க வல்லதாகவோ அமைய அறிவியல்பூர்வமான மருத்துவச் சோதனைகளைச் செய்து அதன் தீங்கின்மையையும், செயல்திறனையும் நிலைநிறுத்தி, தமிழர்களின் மூலிகை மருத்துவம் தரமுடன் பயமின்றிப் பயன்பாட்டிற்கு வர அதற்கான காப்புரிமை பெற்று உலகறிய தமிழ் மரபு, தமிழ் மருத்துவம் தழைக்க வேண்டும். மூலிகை மருத்துவத்தின் இன்றைய பயன்கள் நம்முடைய பரம்பரைத் தமிழ் மருத்துவத்தில் மூலிகையுடன் அரிய உலோகங்களும் மற்றும் கரிமப் பொருட்களும் சேர்ந்தே தயாரிக்கப்படுகின்றன. ஆனால், மூலிகை மருத்துவம் என்பது மருத்துவ குணமுள்ள தாவரங்களிலிருந்து முதன்மையாக மருந்து உற்பத்தி செய்ய பயன்படுகிறது. மூலிகை மருத்துவம் தோன்றிய காலத்தை அறிய ஆவணங்களைத் தேடும்போது 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியா, சீனா, எகிப்து, கிரீஸ், ரோம், சிரியா ஆகிய நாட்டுக் குறிப்புகளில் பதிவுகள் கிடைக்கப் பெறுகின்றன.
இந்திய முறைகளில் ரிக் வேதம், அதர்வண வேதம், சரகசம்ஹிதா, சுசுருத சம்ஹிதாவிலிருந்தும், தமிழகத்தில் அகத்தியர் முதலான பல நூறு சித்தர்களிடமிருந்தும் மருத்துவச் செய்திகளைப் பெற முடிகிறது. ஆகவே, வரலாறு படைத்தவர்கள் நாம் என்பதில் எந்தவித அய்யமுமில்லை.
மூலிகைகளுக்கும் நவீன மருந்துகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்
முக்கியமான மூன்று வேறுபாடுகள் உண்டு.
முழு மூலிகைப் பயன்பாடு
மூலிகைகளில் உள்ள எந்தப் பொருள் இந்த நோய் தீர்க்கப் பயன்படுகிறது என்பதைப் பிரித்துணராது மூலிகையை முழுவதுமாக அதில் உள்ள அத்தனைப் பொருள்களும் ஒரே நேரத்தில் பயன்பாட்டிற்கு வரும், ஒத்துவேலை செய்யும், நல்ல பயனை, பலனைத் தரும் என்றே பயன்படுத்தப்படுகிறது. இதற்கு மாறாக அதிலுள்ள மூலக்கூறுகளை உபயோகிப்பதற்குப் பதிலாக இதனால் அம்மூலிகையில் உள்ள முழு மூலிகைகளைப் பயன்படுத்தும்போது நச்சு விளைவுகளும் மிகவும் குறைவாகிறது.
கூட்டு மூலிகை மருத்துவம்
சில மருத்துவர் ஒரு நோய்க்குப் பலவிதங்களில், அதாவது மூலிகைகளைக் குறைத்தோ அல்லது அளவைக் கூட்டியோ குறைத்தோ செய்வதும் உண்டு. இவை நோயாளிகளுக்கு ஏற்றதாகவே அமையும் என்று அவர்கள் தங்கள் அனுபவத்தில் கூறுவதும் பரம்பரையாய் நடந்து வரும் செயல். இவற்றினால் மூலிகையில் பொருட்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து நல்ல கூட்டுப் பலனைச் சேர்ந்து பல நல் விளைவுகளை அளிக்கும் என்றும் கூறுவது வழக்கம்.
பல மூலிகைகள் ஒரு நோய்க்குக் கொடுக்கப்படும்பொழுது அதில் இருக்கும் பொருள்கள் சேர்ந்து வேலை செய்து கேடுள்ள விளைவுகளைச் சமநிலைப்படுத்தி நல்ல பயன்பாட்டையும், பக்க விளைவுகளைத் தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும் என பரம்பரை மூலிகை மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும், இதைப் பொதுவாகத் தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
நோயறிதல்
மூலிகை மருத்துவர்கள் பலவகை முறைகளைத் தங்களுடைய நோய் தீர்க்கும் முறையில் கையாள்வது உண்டு. எ.கா.: மூட்டுவலிக்கு இதன் காரணம் வளர்சிதை மாற்றத்தினால் ஏற்படும் உடலில் தேங்கும் தேவையற்ற பொருள்கள் என்று முடிவு செய்து, அதற்கு சிறுநீர்போக்கி, பேதி மருந்து, பித்தம் குறைப்பது போன்றவற்றிற்கு மருந்துகளும் கொடுத்து அத்துடன் மூலநோயான மூட்டு வலியைக் குறைக்க மருந்தும் கொடுப்பது வழக்கமாகக்கூட உள்ளது.
மூலிகை மருத்துவத்திற்கான மோகம் அதிகரித்து வருவதற்கான காரணம்
மூலிகை மருந்துகளைப் பயன்படுத்தும் நோயாளிகள் தங்களை மாற்றிக் கொண்டதற்கான காரணமாகச் சொல்லப்படுவது இது மனநிறைவை அளிக்கிறது. இதன் காரணமாக நாள்பட்ட அல்லது குணப்படுத்த முடியாத நோய்களை, எடுத்துக்காட்டாக நீரிழிவு, புற்றுநோய், மூட்டுவலி, மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட்ட நிலையில் நவீன மருத்துவம் பயனற்றது என்ற எண்ணம் பெரிதும் வலுப்பெறும் நிலையிலும் இம்மூலிகை மருத்துவம் உதவும் என்பதாகும்.
- தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக