ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

தோல்நோயை குணப்படுத்தும் வல்லாரை!




வல்லாரையில் இரும்புச்சத்து, சுன்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் நிறைந்து காணப்படுகின்றது. இது இரத்தத்திற்கு தேவையான அனைத்து சத்துக்களையும் சரிவிகித அளவில் கொண்டுள்ளது.


தோல் வியாதி உள்ளவர்கள் வல்லாரை மிக சிறந்த மருந்து. இக் கீரையை வாரம் ஒருமுறை சாப்பிட்டு வர தோல் சம்பந்தமான வியாதி குறையும்.


வல்லாரை கீரையை பச்சையாக சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்படையும். மாலைக்கண் நோய் குணமாக வல்லாரை கீரையோடு பசும்பால் சேர்த்து உண்டு வர மாலைக்கண் நோய் மறையும்.


வல்லாரை ஞாபகசக்தியை வளர்க்கும் வல்லமை கொண்டது. வல்லாரை சாப்பிடுவதால் ஞாபகசக்தி பெருகும். புத்தி கூர்மையாகும். நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை சாப்பிடுவது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.


வல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து, சாதாரணமாகக் கீரைச் சாம்பார் செய்யும் முறையில் சாம்பார் செய்து, வாரம் இரண்டு முறைகள் சாப்பிட நரம்புகள் பலமடையும். வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும். வல்லாரை இலைச்சாற்றைப் பிழிந்து, சம அளவு நெய் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாகும்.
-  விடுதலை நாளேடு, 23.4.18


புதன், 11 ஏப்ரல், 2018

உடலுக்கு பலத்தை தரும் இஞ்சி




இஞ்சித் துவையலை ருசி பார்க்காதவர்கள் மிகவும் குறைவு. தவிர சமையலிலும் இஞ்சியை தாரளமாக பயன் படுத்திக் கொள்கிறோம்.

பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க் கிறார்கள். இஞ்சிக்கு உஷ்ணப் படுத்தும் குணம் உண்டு. பசியைத் தூண்டும். உடலுக்குப் பலத்தை தரும். ஞாபக சக்தியை வளர்க்கும்.

கல்லீரலைச் சுத்தப் படுத்தும். வயிற்றில் சேர்ந்த வாயுவை நீக்கி பஞ்சு போல ஆக்கும். பிறகு அதிலுள்ள தீயப் பொருட்களையும், கிருமிகளையும் நீக்கி கபத்தால் உண்டாகும் எல்லா விதமான நோய் களையும் தடுக்கும்.

முகம், மூக்கு தொண்டைகளைப் பற்றிய நோய் களையும், குன்மம், ஆஸ்துமா, பாண்டு நோய் ஆகியவற்றையும் இஞ்சி போக்கும். நுரையீரல் நோய்களைக் கூட இஞ்சி குணப்படுத்துகிறது. அதனால் தினந்தோறும் கொஞ்சம் இஞ்சியை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

ஆனால் ஓர் எச்சரிக்கை. இஞ்சியை அதிகமாக சாப்பிட்டால் தொண்டை கம்மி விடும். அதற்கு சர்க்கரையும், தேனும் மாற்றுப் பொருட்களாகும்.

- விடுதலை நாளேடு, 9.4.18

வாரம் ஒரு முறை காலி ஃபிளவரும் சாப்பிடுங்க!


கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளி களுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும். இவை எல்லாம் காலி பிளவரின் குணங்கள்.

வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சேலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம்.

காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.

- விடுதலை நாளேடு, 9.4.18