புதன், 30 நவம்பர், 2016

இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் பிரண்டை!

பிரண்டை இந்தியா, இலங்கை, வங்க தேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடி இனத் தாவரமாகும். ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பலவகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது ஒரு காயகல்பம். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

தமிழில் பிரண்டை எனச் சொல்லப்படும் இந்த மூலிகையை ஆங்கிலத்தில் போன்-செட்டர் (Bone Setter) என்கிறார்கள். சிலர் உடல்மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள்.

இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையலாகச் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு தேறும்.

வாயுத் தொல்லை மட்டுப்படும். சுவை-யின்மையைப் போக்கிப் பசியைத் தூண்டும்.

பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை இரு வேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் மாறி, மூலநோயால் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

வாயு சம்மந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் செரிமான சக்தியைத் தூண்டும். செரியாமையை போக்கும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின்மீது வைத்துக் கட்டியும், பிரண்டையைத் துவையலாகவும் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். முறிந்த எலும்புகள் விரைவில் இணைந்து பலம் பெறும்.

ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இதயத்திற்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்படும்.

இப்படிப்பட்ட கோளாறுக்கும் பிரண்டைத் துவையலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகி இதயம் பலம் பெறும். பெண்களுக்கு ஏற்படும் சூதக வலியும், முதுகு வலி, இடுப்பு வலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.

பிரண்டை உடலிலுள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகளில்-கூட பிரண்டை சேர்க்கப்படுகிறது.

பிரண்டையின் வேறு பெயர்கள், கிரண்டை அரிசினி, வச்சிரவல்லி.

தாவரப் பெயர்: VITTIS Gvandrangularis.

தாவரக் குடும்பம்: VITACEAE.

 -உண்மை இதழ்,1-15.11.16ஞாயிறு, 27 நவம்பர், 2016

மருத்துவ தன்மை கொண்ட கொண்டைக்கடலை


தென் தமிழ்நாட்டில் மட்டுமல்ல...வட இந்தியரும் அதிகம் உபயோகிக்கும் முழுப் பயறுகளில் முக்கியமானது கொண்டைக்கடலை. இதில் வெள்ளையாக உள்ளது ஹிந்தியில் சன்னா என்றும், ஆங்கிலத்தில் பெங்கால் கிராம் என்றும் அழைக்கப்படுகிறது.
வங்காளத்தில் அதிகம் விளை வதால் இந்தப் பெயராக இருக்கலாம். அங்கு சென்றபோது அவர்கள் அதை பச்சையாகவும் சுட்டும் சாப்பிடுவதைப் பார்க்க நேர்ந்தது. உலர வைப்பதற்கு முன் பட்டாணியைப் போல பச்சை நிறத்தில் இருக்கிறது. அதை வேர்க்கடலையை வறுப்பது போல வண்டிகளில் வறுத்து விற்கிறார்கள். தமிழ்நாட்டில் நமக்கு பச்சையாக கிடைப்பது இல்லை.
உணவு உண்பவர்களுக்கு புரதத்தை நாம் பருப்பு, பயறு வகைகள், தானியங்கள், பால் மற்றும் பால் பொருட்களில்  இருந்து பெறவேண்டும். மற்ற நாடுகளில் நமது நாட்டைப் போல பலவிதமான பருப்புகள், பயறு வகைகள் இருக்காது.
பொதுவாக தானியங்களுடன் பருப்பு அல்லது பயறு வகைகள் 5:1 என்ற விகிதத்தில் சேரும்போது எல்லா முக்கிய அமினோ  அமிலங்களும் சேர்ந்த முழுமையான புரதமாகப் பெற இயலும் என்பதை விஞ்ஞானம் கூறுகிறது.
இதையே நமது முன்னோர்கள் இட்லி, தோசை, பொங்கல் என்று பல டிபன் வகைகளில் மட்டுமன்றி, மதிய உணவில்,  சாதத்துடன் கூட்டு, பொரியல், சாம்பார் என பலவற்றிலும் ஒவ்வொரு விதமான பருப்பு வகைகளை சேர்ப்பதின் மூலம் பெற  இயலும் என்பதை மெய்ஞ்ஞானத்தின் மூலமே உணர்த் தினார்கள்.
மற்ற பயறு வகைகளைவிட கொண்டைக் கடலையை அதிகம்  விரும்புகிறோம். கொண்டைக்கடலை காற்றில் உள்ள ஹைட்ரஜனை உள்ளிழுப்பதால் செடியாக இருக்கும்போது மண்ணின்  சத்துகள் அதிகரிக்கும்.
கொண்டைக்கடலையை வேக வைக்கும் போது ஒரு சிலர் சீக்கிரம் வேக வேண்டும் என்பதற்காக சமையல் சோடா சேர்ப்பது  உண்டு. இந்த சோடாவை சேர்த்தால் முக்கிய மான தயாமின் என்னும் வைட்டமினை அழித்துவிடும். சிலருக்கு முழுப்பயறுகள்  உண்ணும்போது வாயுத் தொல்லை ஏற்படும். ஊறவைத்த தண்ணீரை மாற்றி நல்ல தண்ணீர் ஊற்றி வேக வைத்தால் வாயு  பிரச்சினை குறையும்.
மேல் தோல் வெடிக்கும் வரை நன்கு மெத்தென்று வேக வைத்தால் வாயுத்தொல்லை அதிகம் வராது.  வேகும்போதே ஒரு சிறு துண்டு இஞ்சி சேர்க்கலாம்.
பிரவுன் கொண்டைக் கடலையில் வெள்ளை கொண் டைக் கடலையைவிட சத்துகள் அதிகம். ஒருசில சத்துகள் வெள்ளைக்  கடலையில் இல்லை. பயறு வகைகளிலேயே கொண்டைக்கடலையில்தான் நல்ல புரதம் கிடைக்கும்.
-விடுதலை,4.5.15

தேவையற்ற சதையை குறைக்கும் சோம்பு கீர்

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் பெரும் பிரச்சினையாக இருப்பது உடல் பருமன் அல்லது  ஊளைச்சதை. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது, பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது.  வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கி சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்ற வையாகும்.
பெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி போதுமான சத்தான உணவு இல்லாததும், ஒரு  காரணமாக இருக்கிறது. இது தவிர அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகல் அதிக நேரம் தூங்குவது  போன்றவையும் காரணமாக உள்ளன. இது போன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்று  பார்ப்போம்.
சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச்சதை  குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிக மாக சேர்த்து வந்தால் உடலில் உள்ள  தேவையற்ற  கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.
பப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல்  மெலியும். இது தவிர மந்தாரை வேரை நீர் விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும்.  அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.
சுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச்சதை குறையும் மேலும் சதை போடுவதைச் தடுக்க  வேண்டுமென்றால் தேநீரில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து காலையில் குடித்து வர வேண்டும்.
இது தவிர வாழைத்தண்டு சாறு,  அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது  எல்லாவற்றுக்கும் மேலாக காலையில் அரைமணி நேர நடைப்பயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும் உடல் எடையும்  குறையும். புத்துணர்வாகவும் இருக்கும்.
-விடுதலை,4.5.15

திங்கள், 21 நவம்பர், 2016

பழங்களைத் தோலோடு சாப்பிடுவது நல்லதா?

பழங்களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள். ஆனால், பழங்களை வாங்கியதும் நாம் செய்யும் முதல் வேலை தோலை நீக்குவதுதான். இது சரியா?

தோல்கள் என்றாலே அவை தேவை யற்றவை என்று நாம் மனதில் பதிந்து போன தன் விளைவு இது. பல பழங்களில் அவற்றின் உட்பகுதியைவிட தோலில்தான் அதிக சத் துக்கள் இருக்கும். குறிப்பாக சப்போட்டா, மாம்பழம், திராட்சை, கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி போன்ற பழங்களின் தோலில் அதிக நார்ச்சத்து இருக்கிறது. இவற்றைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. பழங் களைப் பிழிந்து, வடிகட்டி, சாற்றை மட்டும் குடிக்கும்போது நார்ச்சத்து இழக்கப்படும்.

ஆப்பிள் தோலில் கால்சியம், பொட்டாசி யம் தாதுக்களும் வைட்டமின் ஏ, சி சத்துக் களும் நார்ச்சத்தும் அதிகம். இந்தச் சத்துக்கள் இதய நோயாளிகளுக்கும் நீரிழிவு நோயாளி களுக்கும் மிகவும் தேவைப்படுகின்றன. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்தும் நம் தேவைக்கு உள்ளது. இது புற்றுநோயைத் தடுக்கும் குணம்கொண்டது. ஆகவே, ஆப்பிள் பழத்தைத் தோலோடு சாப்பிட்டால் தான் இந்த சத்துக்கள் கிடைக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் உடனே அதி கரித்துவிடாது. ஆப்பிளைச் சாறு பிழிந்து சாப்பிடும்போது, மேற்சொன்ன சத்துக்கள் கிடைப்பதில்லை என்பதோடு, ரத்தச் சர்க் கரை உடனே அதிகரிக்கும் தீமையையும் ஏற்படுத்தும்.

தோலுள்ள ஆப்பிளில் உள்ள சத்துக்கள் விவரம்: நார்ச்சத்து 5 கி., கால்சியம் 13 மி.கி., பொட்டாசியம் 239 மி.கி.; தோல் நீக்கப்பட்ட பழத்தில் உள்ள சத்துக்கள்: நார்ச்சத்து 3 கி., கால்சியம் 11 மி.கி. பொட்டாசியம் 194 மி.கி.

கொய்யாப் பழத்தோலில் சருமத்தைக் காக்கும் வைட்டமின்கள் பல உள்ளன. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்குச் சருமத்தில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படு கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக் கும் குணம் மாம்பழத் தோலுக்கு உண்டு.

சப்போட்டா பழத் தோலில் உடலில் காயங் களை விரைந்து ஆற்றும் குணமுள்ள வேதிப் பொருட்கள் நிரம்பியுள்ளன. உடலில் தீங்கு செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கும் குண மும் இவற்றுக்கு உண்டு. எனவே, உடலில் ஆறாத புண் உள்ளவர்கள் இதைத் தினமும் சாப்பிட்டுவந்தால் புண்கள் விரைவில் ஆறும். நீரிழிவு நோயாளிகள் ரத்தச் சர்க்கரையை நன்றாகக் கட்டுப்படுத்திக்கொண்டு மருத்து வரின் யோசனைப்படி அளவோடு சாப்பிடலாம்.

வாழைப்பழத் தோலில் கால்சியமும் யூரிக் அமிலத்தைச் சமப்படுத்தும் ஆற்றல் உள்ள செலினியம் போன்ற தாதுக்களும் உள்ளன.

வயதானவர்களுக்குக் கால்சியம் குறைவதால் மூட்டுவலி ஏற்படுவது வழக்கம். சிலருக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிக ரித்தும் இந்தப் பிரச்சினையை உண்டு பண்ணும். இவர்கள் வாழைப்பழத்தைத் தோலோடு சாப்பிட்டால், மூட்டுவலி கட்டுப் படும். இதில் நார்ச்சத்தும் உள்ளது. இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வாழைப் பழத் தோல் சிறிது கசப்புத் தன்மை உடையது. நீரிழிவு நோய் இல்லாதவர்கள் வாழைப்பழத் தோலில் சிறிது தேனைத் தடவிச் சாப்பிடலாம்.

இப்போது விளையும் தக்காளிப் பழத்தில் தோல் தடிமனாக இருப்பதால், பலரும் தோலை எடுத்துவிட்டுச் சமைக்கின்றனர். இது தவறு. தக்காளித் தோலில் வைட்டமின் - ஏ, சி, மற் றும் கால்சியம் சத்துக்கள் மிகுந் துள்ளன. எனவே, தக்காளிப் பழத்தைத் தோல் எடுக் காமல் சாப்பிடுவதும் சமைப்பதும் மிகுந்த ஆற்றலைக் கொடுக்கும். இதுபோல் திராட் சையைத் தோலுடன் சாப்பிடும்போது அதி லுள்ள சத்துக்கள் முழுவதுமாகக் கிடைக் கும். அதே வேளையில் திராட்சையைச் சாறு பிழிந்து குடித்தால், பல சத்துக்கள் குறைந்து விடும்.

தவிர பழங்களைச் சாறாக்கி, பால், சர்க் கரை, குளுக்கோஸ் சேர்த்துக் குடிக்கும் போது, அதில் சேர்க்கப்படும் சர்க்கரையும் பாலும் பழத்தில் இருக்கிற சத்துகளின் இயல் பையே குலைத்துவிடும். செரிமானக் கோளா றையும் ஏற்படுத்திவிடும். எனவே, பழங் களைத் தோலோடு சாப்பிடுவதுதான் நல்லது. அதே நேரம், எந்தப் பழம் என்றாலும் தண் ணீரில் நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்த பிறகே சாப்பிடவும் சமைக்கவும் செய்ய வேண்டும்.

ஆர்கானிக் பழங்களே நல்லவை!

இந்தியாவில் விற்கப்படும் உள்நாட்டுப் பழங்களானாலும் சரி, வெளிநாட்டுப் பழங் களானாலும் சரி, செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தி விளைவிக்கப் படுகின்றன. இப்பழங்களில் இந்த வேதி நச்சுகள் இறங்கிவிடுகின்றன. மேலும், இவை சந்தையில் விற்பனைக்கு வரும்போது நீண்ட காலம் கெட்டுப்போகாமல் இருக்கவும், சில பழங்கள் விரைவில் பழுத்துவிடாமல் இருக் கவும், பழங்களின் தோலில் பலதரப்பட்ட வேதிப்பொருட்களைத் தடவுகிறார்கள்.

இவை நம் ஆரோக்கியத்துக்குக் கேடு செய்கின்றன. இவற்றைக் கழுவினாலும் இந்த வேதிப்பொருட்கள் முழுவதுமாக நீங்க வழியில்லை என்றே அறிவியலாளர்கள் கருது கிறார்கள். எனவே, பழங்களைத் தோலோடு சாப்பிட விரும்புபவர்கள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் வகைப் பழங்களைப் பருவத்துக்கு ஏற்பச் சாப்பிடு வதே நல்லது.
-விடுதலை,21.11.16

வியாழன், 3 நவம்பர், 2016

மாதவிலக்கு கோளாறை தீர்க்கும் பண்ணை கீரை


பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபோக்கு, மாதவிலக்கு, ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னைகளை தீர்க்கும் பண்ணை கீரையின் அனைத்து பாகங்களும் மருந்தாகப் பயன்படுகிறது. இதன் பூக்கள் கோழியின் கொண்டையை போன்ற உரு வத்தை உடையது. பண்ணை கீரை ரத்தக்கசிவை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்கவல்லது.
வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது. வயிற்றுபோக்கை கட்டுப் படுத்த கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது.
பண்ணை கீரையின் பூக்களை பயன்படுத்தி வெள்ளை படுதல் பிரச்னைக்கான மருந்து தயாரிக்கலாம்.  பண்ணை கீரையின் 4 பூக்களை துண்டுகளாகி, இதனுடன் பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வெள்ளைபோக்கு சரியாகிறது. கருப்பையில் ஏற்படும் புண்கள் ஆறும். மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகளவிலான ரத்தப் போக்கை கட்டுப்படுத்துகிறது.
பண்ணை கீரையை பயன்படுத்தி ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பண்ணை கீரை, பூண்டு, பட்டை, லவங்கம், மிளகுப் பொடி, நல்லெண்ணெய், உப்பு. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணய் விடவும். எண்ணெய் சூடானதும் பட்டை, லவங்கம் சேர்க்கவும். சிறிது பூண்டு தட்டிபோடவும். இதனுடன் பண்னை கீரை, மிளகுப்பொடி, உப்பு சேர்க்கவும்.
பின்னர், தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும்.  இதை குடித்துவர கை,கால் வலி குணமாகும். கால்சியம், இரும்பு சத்து குறைபாடு நீங்கும். வயிற்றுகோளாறுக்கு மருந்தாகிறது. அதிக உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது.  அதிக நன்மைகளை கொண்ட பண்ணை கீரையானது, ரத்த கசிவை கட்டுப்படுத்த கூடியது. இதில் கால்சியம், புரதச்சத்து உள்ளது. மலச்சிக்கலை சரிசெய்கிறது.
இந்த கீரையை அளவாக சாப்பிட வேண்டும். பண்ணை கீரையை பயன் படுத்தி முகப்பருவை போக்கும் மருந்து தயாரிக்கலாம். பண்ணை கீரையை பசையாக அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து முகப் பருவுக்கு மேல் போட்டால் பருக்கள் மறையும்.
கட்டிகளுக்கு மேல்பூச்சாக போடுவதன் மூலம் கட்டிகள் சீழ் பிடிக்காமல் குணமாகும். பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் வெள்ளைப்போக்கு, மாதவிலக்கு பிரச்னைகளுக்கு பண்ணை கீரை மருந்தாகிறது. உடலுக்கு பலத்தை கொடுக்கிறது. பண் ணை கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கற்கள் கரையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

கல்லீரலை பலப்படுத்தும் பீர்க்கன்காய்

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க கூடியதும், உடலுக்கு குளிர்ச்சி தரவல்லதும், இளநரையை போக்க கூடியதும், அல்சரை குணப்படுத்த கூடியதுமான பீர்க்கன்காயின் மருத்துவ குணங்களை நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.

கோடைகாலத்தில் எளிதாக கிடைக்க கூடியது பீர்க்கன் காய். பல்வேறு நன்மைகளை கொண்ட இது, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேல்பூச்சு மருந்தாகவும் பயன் படுகிறது. நச்சுக்களை வெளியேற்றுவதுடன், கல்லீரலுக்கு பலத்தை கொடுக்கிறது. பீர்க்கன்காயில் நீர்ச்சத்து உள்ளது. இதை பயன்படுத்தி மஞ்சள் காமாலைக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பீர்க்கன்காய், சீரகம். தோல் சீவிய பீர்க்கன்காய் துண்டுகள் 50 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் வீட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கல்லீரல் பலப்படும். இது மஞ்சள் காமலை வராமல் தடுக்கிறது. ஈரல் வீக்கத்தை சரிசெய்கிறது. பித்தத்தை குறைப்பதுடன் உடல் சூட்டை தணிக்கிறது. பீர்க்கன்காயை தோலுடன் பசையாக அரைத்து தலையில் பூசி சுமார் 10 நிமிடங்கள் வரை ஊறவைத்து குளித்தால் இளநரை சரியாகும். பீர்க்கன்காயை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
வேகவைத்த பீர்க்கன் காய் துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு, புளிப்பில் லாத தயிர் சேர்த்து கலக்கி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் சூடானதும் கடுகு, சீரகம், வரமிளகாய் துண்டு, சிறிது உளுந்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும். இதை பீர்க்கன்காயுடன் சேர்த்து சாப்பிட்டுவர அல்சர் குணமாகும். கோடைகாலத்தில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும். வயிற்றுப்போக்கு வராமல் தடுக்கும். வயிற்று எரிச்சல், வலி போகும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும். உடலுக்கு ஆரோக்கியம், பலம் தருகிறது.
பீர்க்கன்காய் தோலில் மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்குகிறது. செரி மானத்தை தூண்டுகிறது. பீர்க்கன்காய் தோலை பயன்படுத்தி துவையல் தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும்.
எண்ணெய் சூடானதும் உளுந்தம் பருப்பு, சீரகம், பூண்டு, வரமிளக்காய், வெங்காயம், சிறிதளவு புளி, பீர்க் கன்காய் தோல், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பீர்க்கன்காய் தோலின் நிறம் மாறும்போது எடுத்து ஆறவைத்து அரைத்து எடுக் கவும். இதை தாளித்து மதிய உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால், மலச் சிக்கல் பிரச்சினை சரியாகிறது. இது நச்சுக்களை வெளி யேற்றும் தன்மை கொண்டதால் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
-விடுதலை,13.6.16

மருத்துவ குணம் கொண்ட புளி


நோய் எதிர்ப்பு சக்தி உடையதும், புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டதும், வலி மற்றும் வீக்கத்தை குறைக்க கூடியதுமான புளியின் மருத்துவ குணங்கள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம்.
இல்லத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருட்களில் புளியும் ஒன்று. இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் உள்ளன. வைட்டமின் சி சத்து கொண்ட புளியானது நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மலச்சிக்கலை போக்குகிறது.
புளியை பயன்படுத்தி முகப்பொலிவு தரும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, எலுமிச்சை, தேன். 2 ஸ்பூன் புளி கரைசலுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் போடும்போது வறட்சி மாறி பொலிவு ஏற்படும்.
தோலுக்கு வண்ணத்தை தருகிறது. கரும்புள்ளிகளை மறைய செய்கிறது. புளிய மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்தருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய புளியை பயன்படுத்தி புண்களை கழுவுவதற்கான மருந்து தயாரிக்கலாம். புளிய இலைகளுடன் வேப்பிலை சேர்க்கவும்.
இதில் தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி எடுத்து புண்களை கழுவும்போது ரத்தகசிவு கட்டுப்படும். தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது. சீல் பிடிக்காமல் புண் சீக்கிரம் ஆறும்.புளிய மரத்தின் இலை ரத்தத்தை தடுத்து நிறுத்தும் தன்மை கொண்டது. இலைகளை அரைத்து அடிபட்ட இடத்தில் பூசும்போது உடனடியாக ரத்தக்கசிவு நின்றுபோகும். காயங்கள் விரைவில் ஆறும்.
புளியம்பழத்தை பயன்படுத்தி செரிமான கோளாறை போக்கும் மருந்து தயாரிக்கலாம். புளியம் பழத்தின் ஓடுகளை நீக்கிவிட்டு பழத்தை எடுக்கவும். இதனுடன் தனியா பொடி, 2 கிராம்பூ, 2 ஏலக்காய், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்துவர பித்தத்தை சமன்படுத்தி பசியை தூண்டுகிறது. கொழுப்பை குறைப்பதுடன் ஈரலுக்கு பலம் தருகிறது. மலச்சிக்கல் பிரச்னை சரியாகிறது. வாந்தி, குமட்டல், வயிறு உப்புசம், பசியின்மைக்கு புளியம்பழம் தேனீர் மருந்தாகிறது.
புளியமரத்தின் இலையை பயன்படுத்தி மூட்டு வலி, வீக்கம், ரத்தக்கட்டுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயுடன் சிறிது புளியம் இலைகளை சேர்த்து வதக்கவும். ரத்த கட்டு, வலி, வீக்கம் உள்ள இடத்தில் கட்டி வைத்தால் குணமாகும். மூட்டுவலிக்கு மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட புளி பித்தசமனியாகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. மலச்சிக்கலை சரிசெய்கிறது. தோலுக்கு நல்ல வண்ணத்தை தருகிறது.
-விடுதலை,6.6.16

படர்தாமரையை குணமாக்கும் சரக்கொன்றை

கோடைகாலத்தில் சாலையோரத்தில் சரம் சரமாக பூத்து குலுங் குவது சரக்கொன்றை மரம். பல்வேறு நன்மைகளை கொண்ட இது, நோய்களை விரட்டும் மூலிகையாக விளங்கு கிறது. இதன் காய்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சரக் கொன்றை மரத்தின் இலை, பட்டை ஆகியவை மருந்தாகிறது.
சரக்கொன்றை மரத்தின் இலையை பயன்படுத்தி படர்தா மரைக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலையை பசையாக அரைத்து சாறு எடுக்கவும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். படர்தாமரை உள்ள இடத்தில் இதை பூசும்போது குணமாகும். சரக்கொன்றையின் இலை, பூ ஆகியவை மருத்துவ குணங்களை கொண்டது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது.
வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளது.   சரக்கொன்றை மரத்தின் காய்க்குள் இருக்கும் புளியை பயன்படுத்தி வயிற்றை சுத்தப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். நெல்லிக்காய் அளவுக்கு சரக்கொன்றை புளியை எடுத்துக் கொள்ளவும். இதனுடன், அரை ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடிக்கும்போது, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி வயிற்றை சுத்தம் செய்யும். அதிக வயிற்றுபோக்கு இருக்கும்போது மோரில் உப்பு போட்டு குடித்தால் சரியாகும். வயிறு சுத்தமாவதால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
சரக்கொன்றை பூக்களை பயன்படுத்தி வெள்ளைப்போக்கு, காமாலைக்கான மருந்து தயாரிக்கலாம். 10 சரக்கொன்றை பூக்கள், துளிர் இலைகளை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி காய்ச்சிய பால் சேர்த்து குடித்துவர வெள்ளைபோக்கு, காமாலை சரியாகும்.
சரக்கொன்றை அற்புதமான மருந்தாகிறது. மரத்தின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக விளங்குகிறது. இதன் பூக்கள், இலைகளை தேனீராக்கி குடிப்பதன் மூலம் நோய் நீக்கியாக விளங்குகிறது. புற்றுநோயை தடுக்கிறது. கொழுப்புசத்தை நீக்குகிறது.
காய்ச்சல், சளிக்கு மருந்தாகிறது.சரக்கொன்றை பூக்களை பயன்படுத்தி மலச்சிக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம். சரக்கொன்றை பூக்களின் மென்மையான இதழ்களை மட்டும் தனியாக எடுக்கவும். இதனுடன் தேன் சேர்த்து இதழ்களை நன்றாக ஊற வைக்கவும். இதன்மீது ஒரு மெல்லிய துணி கட்டி 4 நாட்கள் வரை வெயிலில் காயவைக்கவும். பின்னர் இதை நெல்லிக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும்.
-விடுதலை,6.6.16