வியாழன், 30 மே, 2019

பிடல் காஸ்ட்ரோவும், முருங்கைக் கீரையும்...

2010ஆம் ஆண்டு கியூபாவின் அண்டை நாடான ஹைட்டி தீவில் பெரும் பூகம்பம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதியில் நின்றார்கள். அப்போது பிடல் காஸ்ட்ரோ முதுமையின் காரணமாக அரசியலில் இருந்து விலகியிருந்தார். அப்படியிருந்தும் பூகம்பத்தால் பாதித்த மக்களுக்கு உதவ நினைத்தார். மருத்துவர்களையும், தன் னார்வ தொண்டர்களையும் அங்கே அனுப்பிவைத்தார்.


அவர்கள் ஹைட்டி தீவில் பூகம்பத்தால் அதிக மக்கள் இறந்துவிட்டார்கள் என்றும், அதோடு கூடவே காலரா நோய் வேகமாகப் பரவி வருகிறது என்றும் தெரிவித்தார்கள். பிடல் காஸ்ட்ரோ அப்போது அதிபராக இல்லாத போதும், உயர்மட்ட மருத்துவ குழுவினரை அழைத்துப் பேசினார். காலரா நோயை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? அதற்கு தீர்வு என்ன? என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, பின்லே இன்ஸ்டிடி யூட் மருத்துவ ஆராய்ச்சி மய்ய மருத்துவர் கெம்பா ஹெர்கோ, இந்தியாவிலுள்ள முருங்கை இலைக்கு காலராவை தடுக்கும் எதிர்ப்பு சக்தியும், விரைவான ஆற்றல் கொடுக்கின்ற திறனும் இருக்கிறது என்று கூறினார்.

உடனே ஹெர்கோ தலைமையில் ஒரு மருத்துவக் குழுவை காஸ்ட்ரோ இந்தியா விற்கு அனுப்பி வைத்தார். அந்தக் குழு முதலில் வந்த இடம் தமிழ்நாடு. முருங்கை சாகுபடி, அதன் மருத்துவ பயன்கள் போன்ற வற்றை கேட்டறிந்தார்கள். அதன்பின் கேரளா, ஆந்திராவுக்கு சுற்றுப்பயணம் சென்று மேலும் தகவல்கள் திரட்டினார்கள். ஹைட்டி மக்களுக்கு முருங்கைக் கீரையை இறக்குமதி செய்து கொடுத்தார்கள். கால ராவும் கட்டுக்குள் வந்தது. அதன்பின்னர் இந்திய முருங்கை மரங்களை வளர்த்து அதன் இலைகளை கீரையாய் செய்து சாப்பிடுங்கள் என்று காஸ்ட்ரோ அறிவுரை கூறினார்.

கியூபா அரசும் தனது மக்களை முருங்கை மரம் வளர்க்கச் சொல்லி அறிவு றுத்தியது. காஸ்ட்ரோ ஹவான்னாவில் உள்ள தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ஏராளமான முருங்கை மரங்களை வளர்த் தார். அவற்றை பராமரிக்கும் வேலையை யும் அவரே செய்தார். முருங்கைக்கீரையை தனது உணவில் தினமும் சேர்த்து வந்தார். தனது ஆரோக்கியம் மற்றும் சுறுசுறுப்புக்கு இந்திய முருங்கைக் கீரை காரணம் என்று அடிக்கடி சொல்லி வந்தார்.

தன்னுடைய தோட்டத்தில் மட்டுமல் லாது கியூபா முழுவதுமே முருங்கை மரங்கள் நடப்பட்டு, அதன் இலைகள், காய்கள், பூக்கள் ஆகியவற்றை மக்கள் உணவாக உட்கொண்டு வருகின்றனர். அதற்கு பிடல் காஸ்ட்ரோ மேற்கொண்ட முயற்சியே காரணம்.

- நன்றி: ஜனசக்தி மே 12-18, 2019

- விடுதலை ஞாயிறு மலர் 25. 5 .2019

புதன், 29 மே, 2019

எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் உணவுகள்

சில உணவுகள் ஆரோக்கியமானவை என்று தெரிந்தாலுமே சுவை பிடிக்காமல் தவிர்ப்போம். அப்படித் தவிர்க்கும் உணவுகளில் மருத்துவ குணங்கள் அபரிமிதமாக இருப்பதை உணர்ந்திருக்க மாட்டோம். எலும்புகளின் ஆரோக்கியம் காக்கும் சில உணவுகளைப் பார்ப்போமா?!

ஓட்ஸ்


இன்றைய எந்திர உலகில் பலருக்கும் ஆபத்பாந்தவனாக இருப்பது ஓட்ஸ். தயாரிப்பதும் சுலபம். இதில் வைட்டமின் பி6 மற்றும் பி12 சத்துகள் நிறைய உள்ளன. மூட்டுகளின் வீக்கத்துக்குக் காரணமான, ரத்தத்திலுள்ள ஹோமோ சிஸ்டைன் என்கிற அமினோ அமிலத்தின் அளவைக் குறைக்க வல்லவை. நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால் குடலில் சேரும் நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. ஓட்ஸைத் தேர்ந்தெடுப் பதில் கவனம் தேவை. ரீஃபைண்டு ஓட்ஸில் மேற்சொன்ன எந்தச் சத்துகளும் இருக்காது என்பதால் அவற்றைத் தவிர்ப்பது சிறந்தது.

சிட்ரஸ் பழங்கள்


ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி பிரதானமாக இருக்கும். உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும், இரும்புச் சத்து கிரகிக்கப்படுவதற்கும் வைட்டமின் சி அவசியம். தவிர இவை ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பிரச்சினையையும் தவிர்க்கக் கூடியவை. வீக்கத்தைக் குறைக்கக் கூடியவை.

உணவுகளில் அக்கறை செலுத்தும் அதே நேரம், உடற் பயிற்சியிலும் அக்கறை காட்ட வேண்டியது அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தில் உணவுகளுக்கு இணையாக உடற்பயிற்சிகளின் பங்கும் உள்ளது. நடைப்பயிற்சி, ஸ்கிப்பிங், சைக்கிள் ஓட்டுதல், மெது ஓட்டம் என ஏதேனும் ஒரு பயிற்சியை மிதமான வேகத்தில் தினமும் சிறிது நேரம் செய்வது நல்லது.

புரோக்கோலி


க்ரூசிஃபெரஸ் காய்கறி வகையைச் சேர்ந்தது இது. க்ரூசிஃபெரஸ் காய்களில் சல்போராபேன் என்கிற கலவை இருக்கும். இவை மூட்டுகளின் குறுத்தெலும்புகளின் ஆரோக் கியம் காப்பவை. மூட்டுப் பிரச்சினைகளுக்குக் காரணமான நொதிகளைத் தடுத்து, அதன் விளைவாக வீக்கத்தையும், வலியையும் குறைக்கும் குணம் கொண்டவை. தவிர புரோக்கோலியில் வைட்டமின் ஏ முதல் கே வரை அனைத்தும் உள்ளன. மக்னீசியம், துத்தநாகம், பாஸ்பரஸ் போன்ற சத்துகளும் உள்ளன. அதிகளவிலான கால்சியமும் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் தருபவை.

மீன்கள்


மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கக்கூடியது. முதுமை காரணமாக எலும்பு மற்றும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தைத் தவிர்க்கவும், மூட்டுப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு, உயவுத்தன்மை குறைவதையும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்  தவிர்க்கும்.

-  விடுதலை நாளேடு 27. 5 .2019

செவ்வாய், 21 மே, 2019

மருத்துவம் : முள்ளங்கியென்னும் முக்கிய உணவு


உணவில் சிறந்தது முள்ளங்கி. வெள்ளை, சிவப்பு ஆகிய இரு நிறங்களில் விளைச்சலாகின்றது. இதில் மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் பல நோய்களுக்கு மருந்தாகிறது. முள்ளங்கியில் ஒரு வித காரத்தன்மையும் நெடியும் இருக்கும். இத்தன்மை கந்தகச்சத்தால் உண்டாகிறது. இந்த கந்தக்க கூறுகளே அதன் மருத்துவத் தன்மைக்கு காரணமாகின்றன. முள்ளங்கியில் உள்ள நார் சத்து மலச்சிக்கலை நீக்கவல்லது. குடலில் தங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மூலம், பவுத்திரம் போன்ற நோய்களுக்கும் முள்ளங்கி சிறந்த மருந்தாகும். இதில் வைட்டமின் ஈ சத்து அதிகமுள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சிறந்த கிருமி நாசினியாகவும் உடல் வலிகளை நீக்கும் சக்தி கொண்டதாகவும் இருக்கிறது. புற்றுநோய் உள்ளவர்கள் முள்ளங்கியை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவேண்டும். சிறுநீரகத்தில் ஏற்படும் கற்களை கரைக்க உதவுகிறது. முள்ளங்கியில் உள்ள நீர் சத்தானது உடலுக்கு குளிர்ச்சியையும், வெப்பத்தை தாங்கும் தன்மையையும் அதிகரிக்கிறது. ஆஸ்துமா, மூச்சிரைப்பு, சைனஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு கபம் தோன்றும். அதனை முள்ளங்கி வெளியேற்றும். தொண்டைக் கட்டையும், மூக்கு தொண்டை பகுதியில் ஏற்படும் தொற்றுநோய்களையும் முள்ளங்கி குணப்படுத்தும். முள்ளங்கி சாறு 30 மில்லியுடன் சிறிது நீர் கலந்து அரை சிட்டிகை மிளகு தூளும் சேர்த்து பருகினால் கபம் வெளியேறும்.

நமது உடலில் முக்கிய பங்காற்றும் கல்லீரலுக்கு முள்ளங்கி சிறந்த நண்பன். இதிலுள்ள கந்தக சத்துக்கள் பித்த நீரை சீராக சுரக்கச் செய்யும். இதனால், கொழுப்பு மற்றும் மாவு சத்துகள் நன்றாக சீரனமாகும். பித்தப்பையில் கற்களும் தோன்றாது.

இரத்ததில் கெட்ட கொழுப்புகள் சேர்வதும் தடுக்கப்படும் இரத்தத்தில் பிராணவாயுவும் அதிகமாகும். ஜீரண தொந்தரவு இருப்பவர்கள் அடிக்கடி உணவில் முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளவேண்டும். சிறுநீரக செயல்பாட்டுக்கு முள்ளங்கி அவசியமானதொன்று. தினமும் 50 மி முள்ளங்கி சாற்றை சிறிது நீர் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் வெளியேறும். சிறுநீரக தொற்றும் நீங்கும். இதிலுள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரை அதிகப்படுத்தி வெளியேற்றும் அதனால் உடலில் உள்ள கழிவுகள் நீங்கும். வீக்கம், உடல் வலியும் போக்கும். இதில் போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கர்ப்பக்காலத்தில் உண்டாகும் இரத்த அழுத்தம் நீங்கும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவை மட்டுப்படுத்தி சர்க்கரை நோய் வராமல் தடுக்கிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள் முள்ளங்கியை ‘சாலட்’ செய்து சாப்பிடலாம். உடல் எடையை குறைக்க வேண்டியவர்கள் இதனை அதிகம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். சருமத்தை பொலிவாக்கி இளமையை பாதுகாக்கவும் செய்கிறது. எளிதில் வாங்கக்கூடிய இக்காயை வெயிலில் உழைக்கும் மக்கள் அதிகம் சாப்பிட்டு கோடைக்காலத்தில் வரும் நோயிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம் சிவப்பு முள்ளங்கியிலும் மேற்கண்ட அனைத்துச் சத்துகளும் இருக்கின்றன.

- உண்மை இதழ், 1-15.5.19

மருத்துவம் : செவ்வாழை


செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதுடன் ஆல்கலைன் நேச்சர் (Alkaline Nature) எனப்படும் காரத்தன்மை கொண்ட பழம் இவ்வாழைப் பழம். சிவப்பு நிறத்தில் இருப்பதால் ஆன்தோ சயானின்  (Antho Cyanin) என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்  (Anti Oxidant) நிறைந்தது. எனவே  ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பழமாக செவ்வாழைப் பழம் விளங்குகிறது. இப்பழத்தில் 4 சதவீதம் நார்ச்சத்து உள்ளதுடன், வைட்டமின் சி சத்தும் உள்ளது.

செவ்வாழை சர்க்கரை சத்தை மெதுவாக வெளியேற்றும் தன்மை கொண்டதால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் பாதுகாக்கிறது. இப்பழத்தில் உள்ள பீடா கெரெட்டின்  (Beta Carotene) வைட்டமின் பி-6 மற்றும் வைட்டமின் டி ஆகியவை இரத்த சிவப்பு அணுக்கள் (RBC) உற்பத்திக்கும், புரதச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது.  இப்பழத்தில் 11 தாது உப்புகளும், 6 வைட்டமின் சத்துக்களும் அதிக நார்ச்சத்தும் ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்தும் அதிகம் உள்ளதால் இப்பழத்தை சாப்பிட்ட உடன் நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு அதிக நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.

மருத்துவ குணங்கள்

செவ்வாழையில் வைட்டமின் சி சத்து உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுவதால் பிரி ராடிகல்ஸ்  (Free Radicals) என்னும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடுகிறது. மாரடைப்பு ( ஹார்ட் அட்டாக்) நோயையும் தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வளர்சிதை மாற்றத்திற்கும் பெரிதும் உதவுகிறது. வைட்டமின் சி தேவையான 16 சதவிகிதம் உள்ளது.

இப்பழத்தில் கொழுப்பு சத்தும் கிடையாது. எனவே உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது. டிரிப்டோபன் (Tryptophan) என்னும் அமினோ அமிலத்தை செரோடோனின்  (Serotonin) ஆக மாற்றுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டியுடன் செவ்வாழைப் பழத்தையும் கொடுத்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்.

பழத்தில் உள்ள ஆன்டாசிட் (Antacid) அடிக்கடி ஏற்படும் நெஞ்சு எரிச்சலைக் குணப்படுத்துகிறது. செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் எளிமையாகவும், இயற்கையாவும் மலச்சிக்கலையும் மூலநோயையும் தடுக்க முடியும். வாழைப்பழத்தை அப்படியே சாப்பிட்டால்தான் அதன் பலன் கிடைக்கும். தோலில் ஏற்படும் சுருக்கத்தையும் தடுத்து இளமைத் தோற்றத்தை வழங்குகிறது. இப்பழத்தில் 75 சதவீதம் தண்ணீர் உள்ளதால் தோல் காய்ந்து போவதையும், தோல் உரிவதையும் தடுத்து விடுகிறது.

செவ்வாழைப்பழம் வயிற்றில் அமில அளவைக் குறைத்து விடுவதால் வயிற்று எரிச்சலையும் குறைத்து விடுகிறது. வயிற்றின் உட்புறச் சுவரின் செல்கள் நன்றாக வளர்வதற்கு உதவுவதால் அமிலத் தன்மை ஏற்படுவதைத் தடுத்துவிடுகிறது. பழத்தில் உள்ள புரோட்டியேஸ்  (Protease) எதிர்ப்பு சக்தியின் காரணத்தால் வயிற்றில் புண்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டு விடுகிறது.

இப்பழத்தில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் கண் பார்வைக்கு சிறந்தது. இப்பழத்தில் உள்ள பீடா கெரோட்டீன் சத்து வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இந்த வைட்டமின் ஏஇன் சத்து கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வைக்கும் சிறந்தது.

குறிப்பு: சிறுநீரக நோயாளிகளும் கிட்னி பெயிலியர் (Kidney Failure) எனப்படும் சிறுநீரகம் சரியாக செயல்படாத நோயாளிகளும், பொட்டாசியம் கலந்த உணவை சாப்பிடக் கூடாது. எனவே இவ்வகை நோயாளிகள் செவ்வாழைப் பழத்தை சாப்பிடவே கூடாது என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.

- உண்மை இதழ், 16-31.5.19