வாழைக்கும் தமிழர்களுக்குமான உறவு, வாழையடி வாழையாகத் தொடந்துக்கொண்டே இருக்கிறது.. இலை, தண்டு, பூ, காய், பழம் என ஒவ்வொரு பாகத்திலும் மருத்துவப் பலன்களைப் பொதித்து வைத்திருக்கும் அற்புதமான தாவரம் வாழை. இவை ஒவ்வொன்றின் சத்துக்கள் பற்றியும் யார் யார் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் சென்னை சித்த மருத்துவர் பத்மபிரியா விளக்குகிறார்.
வாழைப்பூ
வாழைப்பூவுக்குத் தசைகளை உறுதிப்படுத்தும் தன்மை உண்டு. இதைத் தொடர்ந்து உண்டுவந்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கைத் தடுக்கலாம். வாரம் இரு முறையாவது வாழைப்பூவை அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டும். ஆனால் செரிமானக் கோளாறு இருக்கும் போது, வாழைப்பூ உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
வாழைக்காய்: உடல் எடையை அதிகரிக்க நினைப் பவர்கள் வாழைக்காயை அவியல் செய்து சாப்பிடலாம். இதில், மாவுச்சத்து அதிகம் இருப்பதால், வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். வாழைக்காயை மசித்து சிறிதளவு உப்பு போட்டு வேகவைத்து சூப்பாகவும் அருந்தலாம்.
வாழைக்காய் வறுவல், வாழைக்காய் சிப்ஸ் போன்றவற்றை மிகக் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். இல்லையெனில் வயிறு மந்தமாகிவிடும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள், மூட்டு வலி இருப்பவர்கள், உடல் பருமனானவர்கள் வாழைக்காயைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழம்: அதிக கலோரி மற்றும் பொட்டாசியம் கொண்டது. உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற சோடியம் உப்பை நீக்கி, உடல் சோர்ந்து போகாமல் இருக்கத் தேவையான பொட்டாசியம் உப்பை சேமித்து வைக்கிறது. உடலில் நீர்ச்சத்து குறையும்போது இயற்கையான குளுக்கோஸாக வாழைப்பழம் பயன்படுகிறது.
குடலை சுத்தம் செய்வது மட்டுமின்றி மலச்சிக்கலுக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது. தினமும் காலை எழுந்தவுடன் ஒரு வாழைப்பழம், இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேரம் கழித்து ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும். சிலர் வாழைப் பழத்தை பால், தயிருடன் சேர்த்து மில்க்ஷேக் ஆக குடிக்கிறார்கள். இது தவறு. வாழைப்பழத்தை எந்தப் பொருளுடனும் கலந்து உண்ணக் கூடாது.
ஆஸ்துமா மற்றும் சர்க்கரை நோயாளிகள் தவிர அனைவருமே வாழைப்பழத்தை தினமும் உண்ணலாம். வாழைத்தண்டு: உடலில் தேவையற்ற உப்பை சிறுநீர் மூலமாக வெளியேற்றுவதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை. சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கவும், அதிகப்படியான கால்சியத்தை வெளியேற்றவும் இது உதவுகிறது.
வாரத்துக்கு நான்கு முறையாவது வாழைத்தண்டைக் கட்டாயம் சாறாகவோ, பொரியலாகவோ அல்லது அவியலாகவோ சமைத்து உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். வாழைத் தண்டு சூப்பை கடைகளில் வாங்கிக் குடிப்பதை முடிந்த வரையில் தவிர்ப்பது நல்லது. உப்பு குறைவாக சேர்த்துக் கொண்டு மிளகு அல்லது சீரகத்தூள் சேர்த்து, வீட்டிலேயே வாழைத்தண்டு சூப் வைத்து அருந்தலாம்.
உடல் மெலிய விரும்புபவர்கள் நார்ச்சத்து மிக்க வாழைத் தண்டைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உப்பு சேர்க்காமல் வாழைத் தண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வாழை இலை: வாழை இலை பச்சையம் நிறைந்தது. இரும்பு, மக்னீசியம் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. இதனால் வாழை இலையில் உணவை வைத்து உண்ணுமாறு பரிந்துரைக்கிறது சித்த மருத்துவம். வாழை இலையில் சூடான உணவுப்பொருளை வைத்து உண்ணும் போது வாழை இலையில் இருக்கும் சத்துக்களும் நமது உடம்பில் சேர்கின்றன.
மேலும், இதில் பாலிபீனால் இருப்பதால் நமது உணவுக்கு இயற்கையாகவே கூடுதல் சுவை கிடைக்கிறது. எவர்சில்வர் தட்டுகளைத் தவிர்த்து, தினமும் வாழை இலையில் உண்ணுவது சிறந்தது.
இரத்த விருத்தி தரும் கனி
அக்கால கட்டங்களில் நமது ஊரில் திருவிழா கடைகளில் மட்டுமே பேரிச்சம்பழம் எனும் ரத்த விருத்தி ஏற்படுத்தும் கனியை விதவிதமான அலங்கார குவியலுடன் காண இயலும். குறிப்பிட்ட பெரிய பல சரக்கு கடைகளில் கண்ணாடி பொருத்தப்பட்ட டின்களில் நம் கண்ணில் படும் படியாக விற்பனைக்கு வைத்திருப்பதையும் கண்டு வாங்கி சுவைத்து மகிழ்ந்துள்ளோம்.
இன்றோ அனைத்து விற்பனை கூடங் களிலும் நமக்கு கிட்டுகிறது இந்த ரத்த சுத்திகரிப்பை அதி கரிக்கும் பேரிச்சம்பழம். இந்த பழத்திற்கு ரத்த வளத்தை மேம்படுத்தும் இயல்பு கூட உண்டு. வைட்டமின் சத்து ஏ மிகுந்து காணப்படும பேரிச்சம்பழத்தில் பி வைட்டமின், பி2, பி5, இ வைட்டமின், இரும்புசத்தும் விகிதாசாரத்தில் உண்டு. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட ஒரு நாளைக்கு இரண்டு.
மூன்று பேரிச்சம்பழத்தை பாலுடன் கலந்து அருந்தலாம் என மருத்துவம் கூறுகிறது. தசை வளர்ச்சி, உடல் வலிமை தரும் பேரிச்சம்பழம் நம் நாட்டில் அதிகமாக விளைவதில்லை. ஆப்பிரிக்கா, எகிப்து மற்றும் வளைகுடா நாடுகளிலேயே அதிகம் விளைகின்றது. பேரிச்சம்பழம் இயற்கை நிலையில் பதப்படுத்தப்பட்டே கனிகளாக விற்பனைக்கு வருகிறது.
இச்சுவை மிக்க இனிப்புக் கொண்ட பழத்தினால் லட்டு, அல்வா, பாயாசம் என விதவிதமானவற்றை நாம் தயாரிக்க பழகி வருகிறோம். காசநோயாளிகளுக்கு தரப்பட்டு வரும் சத்தான உணவு வகையில் இப்பழத்திற்கு பெரும் பங்கு உண்டு. இப்பழத்தை தினமும் 2 எண்ணிக்கையில் உண்டு, பசும்பாலும் பருகி வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தால் உடல் நல்ல வளம், வலிமை உள்ளதாக திகழும்.
-viduthalai,20.7.15