புதன், 22 ஆகஸ்ட், 2018

செவ்வாழையின் மருத்துவ குணங்கள்

இதில் பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், வைட்டமின்-சி, ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணத்தைத் தருகிறது. தொற்றுநோய் கிருமிகளைக் கொல்லும் ஆற்றலை கொண்டது. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.

செவ்வாழை அவசியம் சாப்பிடக் கூடியவர்கள் மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ் வாழை சிறந்த மருந்தாகும். இதை தினம் ஒன்று சாப்பிட பார்வை தெளிவாகும். மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு உணவுக்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும். மேலும் பல் வலி, பல்லசைவு போன்ற பல் சார்ந்த பிரச்சினைகளை செவ்வாழைப்பழம் குணமாக்கும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடும் ஏற்படும். எனவே, இப்பாதிப்பு உள்ளவர்கள் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி குணமடையும்.

- விடுதலை நாளேடு, 20.8.18

புற்றுநோயை ஒழிக்கும் தேயிலை!

புற்றுநோய் ஒழிப்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. அவற்றில் பல நம்பிக்கை அளிக்கும் விதமாகவும் முடிவுகளை வெளியிட்டு வருவது புற்றுநோய் அச்சத்தில் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடவைப்பதாகவே இருக்கிறது.

அந்த வகையில், தேயிலையை அடிப்படையாகக் கொண்டு புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு இந்த நல்ல செய்தியினை அளித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

தேயிலையில் உள்ள நானோ துகள்கள் மற்றும் சில வேதிப் பெருட்களின் சேர்க்கையின் மூலம் குவாண்டம் துகள்களை உருவாக்கி அதன்மூலம் நுரையீரல் புற்றுநோய் செல்களை 80% அளவுக்கு அழிக்க முடியும் என்று இந்தியா மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர். பிரிட்டனின் ஸ்வான்சி பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இந்த ஆராய்ச்சி முடிவை வெளியிட்டுள்ளனர்.

குவாண்டம் துகள்களைக் கொண்டு நுரையீரல் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும். இந்தத் துகள்களை செயற்கையாக உருவாக்க பொருளாதாரரீதியாக அதிக செலவு ஆகும். அதேநேரத்தில் அதில் பக்க விளைவுகளும் அதிகம். இந்த நிலையில் தேயிலையில் உள்ள இயற்கையான நானோ துகள்களில் சில வேதிப்பொருட்களைச் சேர்த்து இயற்கையான முறையில் குவாண்டம்  துகள்களை உருவாக்க முடியும் என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல இதன் செலவும் மிகக் குறைவு என்கிறார் இந்த ஆய்வுக்குத் தலைமை வகித்த ஸ்வான்சி பல்கலைக்கழக விஞ்ஞானி சுதாகர் பிச்சைமுத்து

- விடுதலை நாளேடு, 20.8.18