ஞாயிறு, 13 டிசம்பர், 2015

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்


நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.
ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.
இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.
பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.
நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.
பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.
நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.
சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.
-விடுதலை,1.9.14

பற்களில் கறை போக்க...


என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.
பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (Pottasium Permanganate) (KMNO4)பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.
இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.
கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்
பல் வலியிலிருந்து நிவாரணம் பெற கோவைப்பழம் சாப்பிடலாம்.
மகிழம் இலையை கஷாயம் செய்து வாய்க் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் அண்டாது.
மாவிலையைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.
ஒரு துண்டு சுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால், பல்வலி நீங்கும்.
நந்தியாவட்டை வேரை மென்று துப்பினால், பல்வலி குணமாகும்.
-விடுதலை,1.9.14

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பேரிக்காய் - உடல் துப்புரவுத் தொழிலாளி பேரிக்காய்


உண்ணும் விஷயத்திலும் ஆப்பிளுக்கு இணையான சத்துக்களைக் கொண்டது பேரிக்காய். ஆனால் அதன் துவர்ப்பு சுவை காரணமாக பலரும் அதை விரும்புவது இல்லை.
பேரிக்காய் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த சித்த மருத்துவர் கூறியதாவது; நம் மக்கள் மறந்த கனிகளில் அதிக மருத்துவக் குணம் கொண்டது பேரிக்காய்தான்.
இது நம் உடலின் துப்புரவுத் தொழிற்சாலையைத் பழுதுபார்க்கும் ஆற்றல் கொண்டது. சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த கனி. சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரகச் செயல்பாட்டைச் சரிசெய்யவும், உடலின் அதிகப்படியான நீரை வெளியேற்றி சுத்தப்படுத்தவும் உதவுகிறது.
60 வயதைத் தாண்டும்போது இனப்பெருக்க மண்டலத்துக்குத் தொடர்புடைய ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடையும். இதனால் சிறுநீர் குழாயின் அளவு சுருங்கி, சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். சிறுநீர் கழிக்கவே பெரிதும் அவதிப்படுவார்கள்.
இந்தநிலையில் இவர்களுக்கு ப்ராஸ்டேட் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கிறது. அந்தக் குறைப்பாட்டைப் போக்கும் மிகச்சிறந்த மருந்து பேரிக்காய். உடல் எடையைக் குறைக்கும் ஆற்றலும் இதற்கு உள்ளது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க பேரிக்காய் மிகவும் சிறந்தது.
பேரிக்காய் தோலின் துவர்ப்புத் தன்மைதான் இதன் பலமே! பேரிக்காயைத் தோலுடன் சாப்பிடும்போது அது இதயநோயை கட்டுப்படுத்துகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் டைப் 2 சர்க்கரை  நோய்க்கான வாய்ப்பை குறைக்கிறது.
இதிலுள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ரசாயனங்கள் இன்சுலின் உணர்த்திறனை (சென்சிவிட்டி) மேம் படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் தொடர்பான நோய் களுக்கும், குடல் புண்ணுக்கும் இது சிறந்த மருந்து. அதேபோல செல்களின் வளர்ச்சியில் பேரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
-விடுதலை,2.3.15

புதன், 9 டிசம்பர், 2015

எள்-ரத்த விருத்திக்கு உதவும் எள்


இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு எனக் கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு எள்ளு தேவை என்பதே இதன் அர்த்தம். எள்ளின் பயன்களைப் பற்றி நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க, அயல் நாடுகளில் எள்ளுக்கு அதிக வரவேற்பு.
வெள்ளை எள்ளைக் காட்டிலும் நமது நாட்டில் விளையும் கறுப்பு எள்ளில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் தடுக்கும்.
பைட்டோஸ்டீரால்  எனப்படும் அரிய வகைச் சத்து இதில் இருக்கிறது. இது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். செஸமைன்,செஸமொலின் ஆகிய லிக்னன் வகை சத்துக்கள் எள்ளில் இருந்து பிரிக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க  விரும்புபவர்களுக்கு  மாத்திரை வடிவத்தில் அயல்நாடுகளில் கொடுக்கப்படுகிறது.
எள்ளில் இருக்கும் பைட்டிக் அமிலம் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. தாமிரம் மிக அதிக அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில், ஒரு நாளின் தேவையைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. இது ஆர்த்ரைட்டிஸ் முதலான முடக்குவாத நோய்களைத் தடுக்கும், எலும்புகளைப் பலப்படுத்தும்.
மது அருந்துவதால் உடலில் சேரும் நச்சுக்கள், கல்லீரலைச் சிதைக்கும். எள் சாப்பிட்டுவந்தால் நச்சுக்கள் வெளியேறி, கல்லீரல் சிதைவு தவிர்க்கப்படும். 25 கிராம் எள்ளில், ஒரு கிளாஸ் பாலைவிட அதிக அளவில் கால்சியம் உள்ளது. இதனால், குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் எடுத்துக் கொள்வது எலும்பு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.
தயமின் சத்து எள்ளில் அதிகம் இருப்பதால், எள் உணவுகளைச் சாப்பிட்டதும் நன்றாகத் தூக்கம் வரும்.
தூக்கத்தின்போது உடலில் வலிகள் நீங்கும், மகிழ்ச்சியைத் தூண்டும் செரட்டோனின் ஹார்மோன் அதிகம் சுரப்பதால், மன அழுத்தத்தைப் போக்கும் மருந்தாக இருக்கிறது எள்.   துத்தநாகத்தை அதிகம் கொண்டிருக்கக்கூடிய உணவு எள். இது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும்.
ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகம் இருப்பதால், கெட்ட கொழுப்பு குறையும். நல்ல கொழுப்பும் அதிகரிக்கும். பக்கவாதம் வருவத வற்கான வாய்ப்பு குறையும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்கும்.
நல்லெண்ணெய், சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதாகதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். நல்லெண்ணெயில் இருக்கும் துத்தநாகம், தோல் புற்றுநோயைத் தடுக்கும். மேலும், தோல் வறட்சியையும் தடுக்கும்.
உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். குழந்தைகளுக்கு நல்லெண்ணெய் மசாஜ் செய்வது, தோல் அரிப்புப் பிரச்சினையைத் தடுக்கும்.
-விடுதலை,9.11.15

சனி, 5 டிசம்பர், 2015

கோவைக்காய் - தோல் நோய்களுக்கு சிறந்தது கோவைக்காய்


காடுகளிலும், புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளருவது தான் கோவைக்காய். கோவைக்காய் கொடி வகையை சேர்ந்தது. கோவைக் காய் முழுவதும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்தது. எளிமையான கோவக்காய் இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.
கோவைக்காயின் கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல் நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.
நீரிழிவைக் கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.
பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்று சொல்லப்பட்டது.
நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக் காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண் டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.
வாய்ப்புண் குணமாகும்
கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக் காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த் தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக் காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக் காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.
தோல் நோய்களைக் குணமாக்கும்
இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.
கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.
வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்.
கோவைக்காய் மலிவான விலைக்கு கிடைக்கும் .கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்
-விடுதலை,10.9.12