ஞாயிறு, 16 அக்டோபர், 2016

மலச்சிக்கலை தீர்க்கும் பாகற்காய்


மூலத்தினால் உண்டாகும் எரிச்சல் மற்றும் ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடியதும், மலச்சிக்கலை தீர்க்கவல்லதும், வயிற்று புழுக்களை வெளியேற்ற கூடியதும், சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்தாக  விளங்கு வதுமான பாகற்காயின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட பாகற்காய் மிகுந்த கசப்பு சுவை உடையது. கசப்பாக இருந்தாலும் உடலுக்கு நன்மை தரக்கூடியது. பாகற்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நார்ச்சத்து கிடைக்கிறது. மலச்சிக்கலை போக்க கூடியதாக அமைகிறது. உடலில் எங்கும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. பாகற்காய் உடலுக்கு பலம் கொடுக்க கூடிய தன்மை கொண்டது. நோயுற்றவர்கள் உடலை தேற்றுவதற்கு பாகற்காய் பயன் படுகிறது. மலச்சிக்கலை போக்கும் பாகற்காய் தேநீர் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: பாகற்காய், பனங்கற்கண்டு. பாகற்காயை துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டாமல் பாவற்காயுடன் சேர்த்து குடிக்கவும். பாகற்காய் தேநீர் குடித்துவர மலச்சிக்கல் சரியாகும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டுக்கு பதிலாக மிளகு, சீரகம், உப்பு சேர்த்து பாகற்காய் தேநீர் தயாரிக்கலாம்.
பாகற்காய் இலையை பயன்படுத்தி மூலத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தயிர், பாகற்காய் இலை. ஒரு ஸ்பூன் புளிப்பில்லாத தயிருடன், ஒரு ஸ்பூன் பாகற்காய் இலை பசையை சேர்த்து நன்றாக கலந்து சாப்பிட்டு வந்தால் உள் மற்றும் வெளி மூலத்தால் உண்டாகும் எரிச்சல், ரத்தப்போக்கு குறையும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருந்தாக பாகற்காய் இலை விளங்குகிறது. அரை ஸ்பூன் பாகற்காய் இலை பசை, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலந்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டுவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும்.
5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கால் ஸ்பூன் பாகற்காய் இலை பசை, தேன் சேர்த்து கொடுக்கலாம். பாகற்காய் இலை மேல்பூச்சு மருந்தாக பயன்படுகிறது. உள் மருந்தாகி பூச்சிகளை வெளியேற்றுகிறது. பாகற்காய் உணவாகி சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.
கை, கால்களில் ஏற்படும் வலி, குடைச்சலுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். வீட்டில் இருக்க கூடிய இஞ்சி நல்ல மருந்தாகிறது. நீலகிரி தைலத்தோடு சிறிது இஞ்சி சாறு கலந்து மேல் பற்றாக போடும் போது கைகால் வலி, மூட்டுவலி, முழங்கால் வலி, கழுத்து வலி உள்ளிட்டவை வெகு விரைவில் விலக்கிப்போகும்.
-விடுதலை,29.8.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக