சனி, 15 ஆகஸ்ட், 2015

நோய்களை தீர்க்கும் கீரைகள்..


காய்கறிகளில் மிகவும் சத்தானவை கீரை வகைகள்:
ஒரு கிலோ முளைக்கீரையில், 70 கிலோ வாழைப்பழத்திற்கு நிகரான வைட்டமின் ஏ சத்து உள்ளது.
ஒரு கிலோ அகத்திக்கீரையில் உள்ள சுண்ணாம்பு சத்தைப் பெற 113 கிலோ ஆப்பிள்களை சாப்பிட வேண்டும். ஒரு கிலோ அரைக்கீரையில் சுமார் 32 கிலோ அன்னாசிப்பழத்திற்கு நிகரான சத்து நிறைந்துள்ளது.
இதேபோல் 100 கிராம் முருங்கை கீரையில் சுண் ணாம்புச் சத்து, மணிச்சத்து, மாங்கனீசிய சத்து, சாம்பல் சத்து உள்ளிட்டவை நிறைந்து காணப்படுகின்றன. தண்டுக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கணிகண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை உள்ளிட்டவற்றில் சுண்ணாம்பு சத்து அதிகமாக உள்ளன.
முளைக்கீரை, அரைக்கீரை, பசலைக்கீரை, வல்லா ரைக்கீரை உள்ளிட்டவற்றில் இரும்புச்சத்து அதிகமாக காணப்படுகின்றன. இத்தனை நற்குணங்களை கொண்ட கீரைகளை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால், கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றிற்கு பயன் கிடைக்கும்.
இதேபோல் வாய்ப்புண், மூலநோய், குடல் அழற்சி, அல்சர் போன்ற நோய்களுக்கும் கீரை சிறந்த மருந்தாக உள்ளது.

நலம் தரும் நல்லெண்ணெய்
தென்னிந்தியாவில் சமையலுக்கு அதிகம் பயன்படுத்தப் படும் எண்ணெய் உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் என்ற பொருள் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது. இதில் உள்ள லினோலிக்  அமிலம் ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு கிருமி நாசினியாகவும்  உடலுக்குப் பயன்படுகிறது. வெறும் வயிற்றில் சிறிது நல்லெண்ணெய் குடிப்பது குடலுக்கு நல்லது. நல்லெண்ணெயை இயற்கை நமக்கு அளித்த  கொடை என்று கூறலாம். இதற்கு அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே காரணம்.

எளிய உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் (தொடர்ச்சி)
மிக எளிய உணவு பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களால் உடலில் உண்டாகும் பல்வேறு நோய்கள் தீர்க்கின்றன.
75. கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
76. மிளகுபொடி, சுக்குப்பொடி, தண்ணீர் போட்டு கஷாயமாக்கி பாலும், வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்பு வலி தீரும்.
77. சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் ஒரு கரண்டி இஞ்சிச் சாற்றை கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு சளித் தொல்லை இருக்காது.
78. ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி வகைக்கு 5 கிராம் எடுத்து இளவறுப்பாக வறுத்து அம்மியில் வைத்து பெரும் பருக்கையாக உடைத்து வைத்துக்கொண்டு காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு சமப்படும்.
79. நிம்மதியான உறக்கத்தைப் பெற ஒரு தேக்கரண்டி கசகசாவை எடுத்து இரண்டு முந்திரி பருப்பு சேர்த்து அரைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி சிறிது கற்கண்டும் சேர்த்து பருகினால் நிம்மதியான உறக்கத்தைப் பெறலாம்.
80. சூட்டினால் ஏற்படும் வலியாக இருந்தால் தொப்புளைச்சுற்றி ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தடவி தொப்புளுக்குள்ளும் விடலாம்.
81.  சுக்குத்தூளை கரும்புச் சாற்றுடன் கலந்து சாப்பிட, வயிற்று எரிச்சல் தீரும்.
82. தொண்டைக்கட்டு ஜலதோஷத்தினால் தொண்டை கட்டிக் கொண்டால் மிளகைப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் நெய்யை சூடு செய்து அதில மிளகுப் பொடியை சேர்த்துக் குடித்தால் தொண்டைக் கட்டு விலகும்.
83. வெள்ளரிக்காய் விதையை அரைத்து அத்துடன் அய்ந்து பங்கு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நீரடைப்பு, நீர் எரிச்சல் ஆகியவை போகும். பசி கொடுக்கும் ஆற்றலும் வெள்ளரிக் காய்க்கு உண்டு.
84. பெருங்காயத்தை நீரில் கரைத்து ஒரு சங்களவு எடுத்து சிறிது ஓமத்தையும் சேர்த்துக் கொடுக்க குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிற்றுப் பொருமல் போகும்.
85. மிளகையும் எருக்கம்பூவையும் சம எடை எடுத்து நன்றாக அரைத்து பனை வெல்லம் கூட்டி சிறு குளிகை செய்து சாப்பிட்டால் இழுப்பு நோய் குணமாகும்.
86. சீரகத்துடன் மிளகைச் சேர்த்துச் சாப்பிட அஜீரணம் போகும். சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாற்றுடன் கலந்துகொடுக்க கர்ப்பிணிகளின் வாந்தி நிற்கும். சுண்ணாம்பில் ஊற வைத்த, பொடித்த சீரகம், வயிற்று ஜீரண நீரைச் சீர்படுத்தி அல்சர் நோயைக் கட்டுப்படுத்தும்.
87. வெங்காயத்தை உப்புடன் கூட்டிச் சாப்பிட வயிற்று வலி நீங்கும். வெங்காயத்துடன் சிறிது ஓமத்தைச் சேர்த்து வேக வைத்து குடிநீர் செய்து குடிக்க நீர்த்தாரை சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும்.
88. மஞ்சள் நீரை அருந்த காமாலை கட்டுப்படும். மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெள்ளைத் துணியை நனைத்து நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு கண் நோய் உள்ளவர்கள் கண்களை துடைத்துக் கொண்டால் கண் சிவப்பு, கண் அருகல், கண்வலி, கண்ணில் நீர் கோர்த்தல் ஆகியவை தணியும். சிறந்த கிருமிக் கொல்லி, மணத்திற்காகவும் நிறத்திற்காகவும் உணவில் சேர்க்கப்படுகிறது.
89. ஏலக்காய் ஏல விதையை பனை வெல்லத்துடன் சேர்த்து இடித்துச் சாப்பிட்டால் வாயில் நீர் ஊறுதல், தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, மிகுந்த வறட்சி, கபம் முதலியன கட்டுப்படும். ஏலக்காய் எண்ணெய்யை தலைவலி மருந்துடன் சேர்த்து சுளுக்கு, அடிபட்டவீக்கம் முதலான வற்றின் மீது தேய்க்க வலி நீங்கும்.
90. இலவங்கத்தை நீர் விட்டு அரைத்து நெற்றியிலும், மூக்கின் மீதும் இட்டால் தலை பாரம் குணமாகும். இதை அனலில் வதக்கி வாயில் இட்டு சுவைத்தால் தொண்டைப் புண் ஆறும். பற்களின் ஈறு கெட்டிப்படும். தேனில் இழைத்துச் சாப்பிட்டால் உடல் வெப்பத்தைத் தடுக்கும். புண்ணில் சீழ் பிடிப்பதையும் கை, கால் நடுக்கத்தையும் இலவங்க எண்ணெய் தீர்க்கும்.
91. சோம்பு (பெருஞ்சீரகம்) லேசாக வறுத்து பொடித்து இரண்டு கிராம் அளவில் எடுத்து சர்க்கரை சேர்த்து தினம் இரண்டு வேளை சாப்பிட வயிற்று வலி, வயிற்று உப்புசம், செரியாமை, இரைப்பு முதலியன நீங்கும். இதன் சூரணம் வியர்வையை உண்டாக்கி சிறு நீரை அதிகப்படுத்தும்.
92. அரிசி அல்லது ஜவ்வரிசிக் கஞ்சியுடன் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். வெந்தயத்தை ஊர வைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் தலை முடி நன்றாக வளரும். வெந்தயக் கீரை அஜீரணக் கோளாறை நீக்கும். தினமும் இரவில் ஒரு கைப்பிடி வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப் பாட்டுக்குள் வரும்.
93. வயிறு இதமாக புழுங்கலரிசி நொய்க்கஞ்சியுடன் வெந்தயம் கால் ஸ்பூன் சேர்த்து, மோருடன் கலந்து காலையில் 2 கப் குடித்தால் வயிறு இதமாகும்.
94. பன்னீரில் ஏலக்காய், தேன் கலந்து குடிப்பது மூளைக்குப் புத்துணர்ச்சி தரும்.
95. வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், மோர், நீராகாரம், லெமன், ஜூஸ் ஆகியவை சிறுநீரகத்தை குளுமைப்படுத்தும்.
96. சிறுநீர் எரிச்சல் நீங்க ஜீரகத்தையும், கற்கண்டையும் சுவைத்துச் சாப்பிடுதல் நல்ல பயன் தரும்.

ஆஸ்துமாவை விரட்டும் தக்காளி

தக்காளி இல்லாத சமையலா, அது ருசிக்காது என்பது பலரது கருத்து. தக்காளி இல்லாமல் பெரும்பாலான பெண்கள் சமையல் செய்வது இல்லை என்பதும் உண்மை. சமையலில் காயாகவும் பழமாகவும் பயன்படுகிறது இந்த தக்காளி. இது ஒரு காய்கறி செடியினமாகும். இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ அல்லது நிழல்சேர் செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இது அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தாயகம் தென் அமெரிக்கா. குறிப்பாக பெரு, மெக்சிகோவில் இருந்து அர்ஜென்டினா வரையான பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. தக்காளியின் பயன்கள் வருமாறு:-
தக்காளியில் வைட்டமின் ஏ, சி, ஈ மட்டுமல்லாமல், பொட் டாசியம், கால்சியம் மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன. புற்றுநோய், இருதய நோய் போன்ற வியாதிகளால் தாக்கப்படுவதைக் குறைப்பதற்காகப் பரிந்துரைக்கப்படும் லைகோபீன் என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் தக்காளியில் நிறைய உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தக்காளியில் 93 முதல் 95 சதவீதம் வரை தண்ணீரே உள்ளது. தங்கள் எடையைக் குறித்து அக்கறையுள்ளவர்கள் தக்காளியில் கலோரிகள் மிகக் குறைவு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
தக்காளி சாறு: நன்கு பழுத்த தக்காளிப் பழத்தை சாறாக மாற்றி உடனே அருந்த வேண்டும். பழுத்த பழத்தில்தான் நோய்த்தடுப்பு வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது. சிறுநீர் எரிச்சல், உடலில் வீக்கம், உடல் பருமன், நீரிழிவு, குடல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றை குணமாக்கவும் தக்காளி சாறு சிறந்ததாகும். இந்நோய் உள்ளவர்கள் 5, 6 பழங்களை சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸி மூலம் சாறாக மாற்றி அருந்தினால் போதும். நாக்கு வறட்சியும் அகலும்; உடலும் மினுமினுப்பாய் மாறும்.
உடல் பருமன் குறையும்: 100 கிராம் தக்காளிப் பழத்தில் 20 கலோரி தான் உள்ளது. எனவே, எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் பருமன் அதிகரிக்காது. பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் ஏ முதலியவை அதிக அளவில் உள்ளன. இதனால் உடலுக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். உடல் பருமனை குறைக்க விரும்புகிறவர்கள் காலையில் பழுத்த இரு தக்காளிப் பழங்களை சாப்பிட்டால் போதும். தொடர்ந்து ஓரிரு மாதங்கள் இப்படி சாப்பிட்டால் கொழுத்த சரீரம் கட்டுப்படும். இதற்கு முக்கிய காரணம், அதில் மாவு சத்து குறைவாய் இருப்ப துதான். அத்துடன் உடலுக்கு தேவையான தாது உப்புகளும், வைட்டமின்களும் கிடைத்துவிடுகிறது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படாமல் உடல் பருமனை குறைக்கலாம். தக்காளி உடலில் உள்ள நோய்கிருமிகளை முற்றிலும் அடித்து விரட்டுகிறது. அதனால்தான் உலகம் முழுவதும் தற்போது விரும்பி பருகப்படும் பானங்களுள் தக்காளி சாறும் ஒன்றாய் இருக்கிறது. தக்காளிச்சாறு நீரிழிவுக்காரர்களின் சிறுநீரில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
பார்வை கோளாறு நீங்கும்: இரவு நேரத்தில் பார்வை சரியாக தெரியாதவர்கள் தக்காளிச்சாறு சாப்பிட்டால் பார்வை கோளாறுகளை சரி செய்யும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக