நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மற்றும் வயதானவர்களுக்கு அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தண்டுவட எலும்புகள் மொத்தம் 33. இவற்றில் கழுத்துத் தண்டுவட எலும்புகள் – 7, முதுகுத் தண்டுவட எலும்புகள் – 12, இடுப்புத் தண்டுவட எலும்புகள் -5, கூபகத் தண்டுவட எலும்புகள் – 5, புச்ச எலும்பு அல்லது வால் எலும்புகள் – 4, இவை ஒன்றாக சேர்ந்திருக்கும்.
தண்டுவட எலும்புகள் ஒவ்வொன்றின் இடையேயும் ஒரு சதையாலான “டிஸ்க்” இருக்கும். இந்த டிஸ்க்-ன் இடையில் சைனோவியல் திரவம் என்ற எண்ணெய் போன்ற பொருள் நிரப்பப்பட்டிருக்கும். இவை ஒரு மெத்தைப் போல் இருந்து, இரண்டு எலும்புகள் உராய்வில்லாமல் ஒழுங்காக செயல்படவும், உடல் அசைவிற்கும் உதவுகிறது. ஒருவர் நேராக நிமிர்ந்து நிற்பதற்கு முதுகு தண்டுவட எலும்புகளே காரணமாகும்.
தண்டுவட எலும்புகள், கழுத்து, இடுப்புப் பகுதியில் முன்னோக்கி வளைந்து இருந்தால் அது “லார்டோசிஸ்” என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகள் கழுத்து, இடுப்பு பகுதியில் பின்னோக்கி வளைந்து இருந்தால் “கைபோசிஸ்” என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகள் ஒருபுறமாக வளைந்து இருந்தால் அது “ஸ்கோலியோசிஸ்” என்று அழைக்கப்படும்.
தண்டுவட எலும்புகளுக்கு இடையேயுள்ள “டிஸ்க்” நீர்த்துவம் குறைந்து, உலர்ந்து, சுருங்கி இருந்தால் அதை “ஸ்பாண்டிலோசிஸ்” என்று அழைக்கப்படும். வயதாகும்போது இந்தப் பிரச்சினை அதிகமாகிறது. தண்டுவட எலும்புகளுக்கு இடையே உள்ள டிஸ்க் ஒருபுறமாக அல்லது இருபுறமாக வெளியே நீட்டி நிற்பது “ஹெர்னியேட்டட் டிஸ்க்” எனப்படும். டிஸ்க் வீங்கியிருந்தால் அது “பல்ஜிங்” என்றழைக்கப்படும். தண்டுவட எலும்புகளின் ஓரத்திலிருந்து எலும்புகள் துருத்தி வளர்ந்து காணப்பட்டால் “ஆஸ்டியோபைட்” அல்லது “ஸ்பர்” என்று அழைக்கப்படும். விபத்து, காயங்களில் டிஸ்க்-களில் ஏற்படும் வீக்கங்கள் அல்லது அழற்சிகள் “ஸ்பாண்டிலைடிஸ்” என்று அழைக்கப்படும். தண்டுவட எலும்புகள் தன்னிடத்தில் இருந்து கீழிறங்கி காணப்படும் நிலைக்கு “ஸ்பாண்டிலோலிஸ்தீசிஸ்” என்று பெயர், இது பெரும்பாலும் விபத்துக்களில் ஏற்படும்.
வயது, மற்றும் வேலை காரணமாக, கழுத்து தண்டுவடத்தில் “சி5 – சி6”, “சி6 – சி7” ஆகிய இந்தப் பகுதிகளும், இடுப்புத் தண்டுவடத்தில் “எல் 4 – எல்5”, “எல் 5 – எஸ் 1” ஆகியப் பகுதிகள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
தொழில் ரீதியாக உட்கார்ந்து கம்ப்யூட்டரில் வேலைப் பார்ப்பது, டைப் ரைட்டிங், அலுவலகப் பணிகள், ஓட்டுநர், சுமை தூக்கு பவர், டெய்லர், நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மற்றும் வயதானவர் களுக்கும், அதிகமாக தண்டுவட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மேலும், அடிபட்ட காயங்கள், விபத்துக் களைத் தொடர்ந்தும் தண்டுவடப் பிரச் சினைகள் ஏற்படுகின்றன.
அறிகுறிகள்:
கழுத்து, முதுகு, இடுப்பு வலிகள், தோள்பட்டை, கை வலி, கை மரத்துப் போதல், கால்கள் மரத்துப் போதல், உட்கார்ந்து எழும்புவதில் சிரமம், நடை மாறுபாடு அடைதல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.
1. அமுக்கரா சூரணம் – 1 கிராம், சண்டமாருதச் செந்தூரம் – 100 மி.கி சங்கு பற்பம் – 200 மி.கி, குங்கிலிய பற்பம் 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும். (அல்லது)
2. அமுக்கரா சூரணம் – 1 கிராம், ஆறுமுகச் செந்தூரம் – 200 மி.கி, முத்துச்சிப்பி பற்பம் – 200 மி.கி, குங்கிலிய பற்பம் – 200 மி.கி போன்றவற்றை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
3. அமுக்கரா சூரணம் -1 கிராம், அயவீரச் செந்தூரம் -200 மிகி, முத்துச் சிப்பி பற்பம் -200 மிகி, குங்கிலிய பற்பம் -200 மிகி மூன்று வேளை சாப்பிட வேண்டும்.
4. தண்டுவட பிரச்சினைகளுக்கு எண்ணெய் மசாஜ், வர்ம மசாஜ் மிகவும் சிறந்தது. இதற்காக வாத கேசரித் தைலம், சிவப்பு குக்கில் தைலம், விடமுட்டி தைலம், சுக்குத் தைலம், கற்பூராதி தைலம், குக்கில் தைலம், உளுந்து தைலம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை கழுத்தில் இருந்து முதுகு, இடுப்பு, கால்கள் வரை நன்றாகத் தேய்த்து விட வேண்டும். வெந்நீரில் குளிப்பது நல்லது.
5. வாதமடக்கி, வாதநாராயணன், முடக்கற்றான், தழுதாழை, நொச்சி, பழுத்த எருக்கம் இலை ஆகியவற்றை எண்ணெயில் வதக்கி வலியுள்ள இடங்களில் ஒத்தடமிட வேண்டும்.
6. உணவில் கால்சியம், வைட்டமின் டி சத்து அதிகமுள்ள பிரண்டைத் தண்டு, முருங்கை கீரை, பசலைக்கீரை, எலும்பொட்டிக்கீரை, அறுகீரை, முட்டை, பால், தயிர், பாதாம், வாதுமை, வெந்தயம், சிவப்பு கொண்டைக்கடலை, உளுந்து, முடவாட்டுக்கால் கிழங்கு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.