ஞாயிறு, 19 மார்ச், 2023

"வாட்ஸ் அப்" - "யுடியூப்" பார்த்து மூலிகை மருந்து என்று கண்டதைச் சாப்பிடாதீர்கள்!

 



நவீன தொழில்நுட்பங்கள்  நாம் அறியாத பல உலகங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அதில் ஒன்று அலைபேசியில் வரும் `வாட்ஸ் அப்' மற்றும் `யுடியூப்' மருத்துவங்கள். பலர் தேவையே இல்லாமல் `முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல' என்ற தொனியில் எங்க பாட்டன் அதைச் சாப்பிட்டான், எங்க பூட்டன் இதைச் சாப்பிட்டான் என்று கூறி கிழங்கு மற்றும் இலை தழைகள் போன்றவற்றைச் சாப்பிடச்சொல்வார்கள். 

சிலர்  இதை  அப்படியே நம்பிச் சாப்பிட்டுவிடுகிறார்கள். இப்படித்தான் சிலநாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில்  செங்காந்தள் பற்றி `யுடியூப்'பில் யாரோ கூறியதைக் கேட்டு அதை சாப்பிட்டு உயிரிழந்த ஓர் இளைஞர் குறித்த செய்திகள் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. 

இந்த நிகழ்வில், மருத்துவரீதியாக என்ன நடந்திருக்கலாம் - செங்காந்தள் கிழங்கின் விஷத்தன்மை எப்படிப்பட்டது? 

மருத்துவத்தை பொறுத்தவரை இரண்டு விஷயங்களை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, உணவுப் பொருளை மருந்தாக எடுத்துக்கொள்வது என்பது வேறு; மருந்துப்பொருளை உணவாக எடுத்துக்கொள்வது என்பது வேறு. விளக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நம் வீட்டு அஞ்சறைப் பெட்டியில் இருக்கிற மிளகு, சீரகத்தை மருந்துப்பொருளாக சாப்பிட்டால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது. தவிர, அதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற அளவும் நமக்கெல்லாம் தெரியும். ஆனால், செங்காந்தள் கிழங்கு என்பது மூலிகை மருந்து. அந்த மருந்துப்பொருளை உணவுப்பொருளாக நினைத்துக் கொண்டு சாப்பிட்டதுதான் ஒருவரை மரணம் வரை கொண்டு சென்றிருக்கிறது.

செங்காந்தளில்  சயனைட் மூலக்கூறு உள்ளது. இந்தப் பொருளை நவீன முறையில் பிரித்தெடுத்து மருந்துவப் பொருளாக பயன்படுத்துகின்றனர். நவீன மருத்துவத்தில் வெளி நோய் மற்றும் உள் நோய்களுக்கு  மருந்தாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இவ்வளவு அளவுதான் பயன்படுத்த வேண்டும் என்கிற அளவு இருக்கிறது. சித்த மருத்துவத்திலும் பல அளவுமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு மிகக்குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவோம்.

உணவுப் பொருள்களான கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்குபோல ஒரு மூலிகைக்கிழங்கை சாப்பிட்டால், அது எப்படிப்பட்ட பின்விளைவையும் ஏற்படுத்தலாம்.  ஆனால் செங்காந்தள் கிழங்கு சாப்பிட்டு இறந்த இளைஞருக்கு செங்காந்தள் கிழங்கு  உடலின் இரத்த ஒட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுநீரகம் உள்ளிட்ட உள் உறுப்புகள்  ஒரே நேரத்தில் செயலிழந்து மரணத்தை ஏற்படுத்தியிருக்கலாம். மருத்துவர்கள் பரிந்துரைக்காத எந்தவொரு மூலிகையையும், "யூடியூப்" பார்த்தோ, "வாட்ஸ்ஆப்" பார்த்தோ தயவுசெய்து சாப்பிடாதீர்கள். முக்கியமாக மூலிகை பலன்கள் என்ற பெயரில் தகுதி இல்லாதவர்கள் கூறுவதைச் சாப்பிட்டு ஆபத்தில் சிக்கவேண்டாம்.

-------------------------------------------+++++++++++++++++_-----------------------------




உள்ளூர் செய்திகள்

 திருப்பத்தூர்

 செங்காந்தள் கிழங்கை தின்றவர் சாவு 

Byமாலை மலர்13 நவம்பர் 2022 2:38 PM 

சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை பார்த்து விபரீதம் போலீசார் விசாரணை ஆம்பூர்: ஆம்பூரை அடுத்த விண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன் (வயது 26). அவரது நண்பர் நாட்டறம்பள்ளியைச் சேர்ந்த ரத்தினம் (வயது 45). இவர்கள் இருவரும் விண்ணமங்கலம் பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் செங்காந்தள் பூச்செடி கிழங்கை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும் என சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை பார்த்து இருவரும் செங்காந்தள் செடியை பிடுங்கி கிழங்கை பச்சையாக சாப்பிட்டுள்ளனர் . இதைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே இருவருக்கும் வாந்தி - மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களை ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக லோகநாதனை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் . ரத்தினம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . கிழங்கை தின்றவர் சாவு He who eats yam will die 

https://www.maalaimalar.com/news/district/tamil-news-kanyakumari-mp-vijay-vasant-participates-in-nehruyuvakendra-organisations-cultural-function-585481?infinitescroll=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக