சனி, 15 ஏப்ரல், 2023

புளிச்சக்கீரையின் பயன்கள்!

 

உணவே மருந்து

மே 1-15,2022

புளிச்சக்கீரையின் பயன்கள்!

தென்னிந்தியாவில் அதிலும் பயன்படுத்தப் படும் கீரைகளில் புளிச்சக்கீரையும் ஒன்று. குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டு மக்கள் புளிச்சக்கீரையை அதிகம் தங்கள் உணவில் விரும்பிச் சேர்க்கிறார்கள்.

புளிப்புச் சுவை அதிகமாக இருப்பதால் புளிச்சக் கீரை என்று அழைக்கப்படும் இக்கீரையின் புளிப்புத்தன்மை நம் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும், உடல் வளர்ச்சிக்கும் இந்த புளிப்புச் சுவை மிகவும் அவசியம்.

புளிச்சக்கீரையில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுச் சத்துகளும் உள்ளன. குறிப்பாக வைட்டமின் ‘சி’, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன. அது மட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடென்ட் என்று சொல்லக்கூடிய Flavonoids, Anthocyanin   மற்றும் Poly Phenolic acid போன்றவை இருப்பதால் பல நோய்களைத் தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது. தினந்தோறும் நமது சுற்றுச்சூழலில் உருவாக்கப்படும் தூசுகள், கழிவுகள் போன்ற மாசுபாடுகளால், நம் உடல் செல் அணுக்களில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தக் கீரையை உட்கொள்வதால் இந்த நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

இந்தக் கீரையில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இச்சத்து செரிமான ஆற்றலை அதிகரித்து மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, வயிறு கோளாறுகள் வராமல் தடுக்க உதவுகின்றன. அது மட்டுமின்றி, குடலின் ஆரோக்கியத்தையும் அதில் சுரக்கப்படும் சுரப்பின் அளவையும் அதிகரிப்பதால் உடல்  ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்தக் கீரையில் அதிகளவு உள்ள இரும்புச்சத்து நம் ரத்தச் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகையால் ஏற்படும் அசதி, படபடப்பு, உடல்சோர்வு, மூச்சு வாங்குதல் போன்ற கோளாறுகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இந்தக் கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாடோடு வைத்திருக்க உதவியாக இருக்கிறது. இந்தக் கீரையில் அதிகளவு உள்ள பொட்டாசியம் ரத்தக் குழாய்களுக்குத் தேவையான ஓய்வினைக் கொடுத்து, உயர் ரத்த அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் குறைப்பதால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது. இந்தக் கீரையில் கொழுப்புச் சத்தும் கலோரியும் குறைவாகவும்,  நார்சத்து அதிகமாகவும் இருப்பதால் அதிக நேரம் பசியில்லாமல் இருப்பதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்தக் கீரையில் அதிகளவு உள்ள வைட்டமின் ‘ஏ’ கண்பார்வை அதிகரிக்கச் செய்வதுடன், கண்புரை ஏற்படாமலும்  தடுக்கிறது. இந்தக் கீரையிலுள்ள புளிப்புச் சுவை, வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் தோலில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கவும், அரிப்பு, சிரங்கு போன்ற தோல் நோய்களுக்கும் நல்ல தீர்வாக உள்ளது. அது மட்டுமின்றி இதிலுள்ள வைட்டமின் மற்றும் தாது உப்புக்களால் கூந்தலின் பொலிவு அதிகரிப்பதுடன் முடி உதிர்வதும் தடுக்கப்படுகிறது. இதிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் ஈறுகளின் ரத்தக் கசிவைத் தடுப்பதோடு, எலும்பை வலுவாக்கவும்,   உடலில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் செய்து, நோய் வராமல் தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது’.’ ஸீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக