செவ்வாய், 9 மே, 2017

என்றூம் இளமை காக்கும் “இ”- வைட்டமின்!



வைட்டமின்_ஏ மற்றும் ‘டி’யைப் போல இந்த ‘இ’ வைட்டமினும் கொழுப்பில் கரையும் தன்மை உடையது. கொழுப்பில் கரைந்த பின்னர் பித்தநீரும் சேரும்போதுதான் இது சிறுகுடலில் நன்கு உறிஞ்சப்படும்.

சிகப்பு அணுக்களின் உற்பத்திக்கு இந்த வைட்டமின் மிகவும் தேவை. அகச் சுரப்புகளில் முக்கியமாக பிட்யூட்டரி, அட்ரினல், இனப்பெருக்க ஹார்மோன்கள் நன்கு வேலை செய்ய, நன்றாக சரியானபடி சுரப்பதற்கு இந்த வைட்டமினும் சரிவர பெறப்பட வேண்டும். நமது உடல் இந்த வைட்டமினையும் ஒரு சில நாட்கள் கொழுப்பில் சேமித்து வைக்க இயலும்.

மாதவிடாய் நிற்கும் காலங்களில் இந்த வைட்டமின் சற்றே அதிகம் தேவை. மாதவிடாய் நின்ற பிறகு பலப்பல ஹார்மோன்களின் சுரப்பு குறையும்போது இந்த வைட்டமினும் உறிஞ்சப்படுவது குறையலாம்.

வைட்டமின் _ ‘இ’ நமது ஒரு நாளையத் தேவை மிகவும் குறைவுதான். ஆண்களுக்கு 10 மில்லி கிராமும், பெண்களுக்கு 8 மில்லி கிராமும்தான் தேவை. கர்ப்பமான காலங்களில் பெண்களுக்கு இன்னமும் 2 மில்லி கிராம் கூடுதலாகத் தேவை. பாலூட்டும் தாய்மார்களுக்கு 3 மில்லி கிராம் கூடுதலாகத் தேவை.

வயதாகும்போது கூடுதலாக இந்த வைட்டமினைப் பெற்றால் சீக்கிரமாக முதுமையடையாமல் இருக்கச் செய்யும்.

வைட்டமின்_இ சரியாக எடுத்துக் கொள்பவர்களது நடை, பாவனை எல்லாவற்றிலும் ஒரு நளினம், கம்பீரம் கிடைக்கும். எண்ணெய் வகைகளில் இந்த வைட்டமின் இருந்தாலும் அதை சூடு செய்தால் முழுவதும் அழிக்கப்படும். நமது உடலுக்குத் தேவையான பலனைத் தராது.

ஒரு சிலருக்கு மிகச் சீக்கிரமாகவே மாதவிடாய் நின்றுவிடும். அப்படி ஏற்படாமல் இருக்க இந்த வைட்டமினை மாத்திரை வடிவில் தினமும் உட்கொள்ளலாம்.

நமது உடலில் தசைகள், தசை நார்களின் பலத்திற்கும் வளரும் வயதில் தசைகள் ஆரோக்கியமாக உருவாக வைட்டமின்_இ உதவி புரிகிறது. வயதான பிறகு ஆடி ஆடிப் பலரும்  நடப்பதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி ஏற்படாமல் கம்பீரமாக நடக்க தசைகளில் வலி ஏற்படாமல் இருக்க தினமும் இந்த வைட்டமின் உறுதுணை புரியும்.

இந்த வைட்டமினை நாம் உணவின் மூலம் சுலபமாகப் பெற இயலும். முழுத் தானியங்கள், பயறு வகைகள், வேர்க்கடலை, எள், அக்ரோட் போன்றவை மூலம் சுலபமாகப் பெறலாம். பயறை முளைகட்டும்போது பலப்பல என்சைம்கள் உற்பத்தி ஆகும். அதோடு அதில் உள்ள இந்த வைட்டமினும் நன்கு உறிஞ்சப்பட உதவும்.

இந்த வைட்டமினை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் இருந்து பெற இயலாது. எண்ணெய் வித்துக்கள், கொட்டை வகைகள் போன்றவையும் நமக்கு தினமும் சிறிதளவாவது தேவை.

மாதவிடாய் நின்ற பின்னர் இந்த வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் கால் மரத்துப் போவதைப் போன்ற உணர்ச்சி, பாதங்களில் குத்தும் வலி, நடக்கும்போது சிறிதே தடுமாற்றம் போன்றவை ஏற்படலாம். தொடர்ந்து மாத்திரை வடிவில் உட்கொண்டால் வலி குறையும். வலி குறைக்கும் மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் பலவிதமாக பாதிப்பும் ஏற்படும். பக்க விளைவுகளும் இருக்கும். அளவிற்கு அதிகமாகவும் எடுத்துக்கொள்ளக் கூடாது.

இப்பொழுது பலரும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்தான் உபயோகிக்கின்றோம். அந்த எண்ணெயில் இருந்து வைட்டமின்_‘இ’யைப் பெற இயலாது. இயற்கையான முறையில் செக்கில் ஆட்டிய எண்ணெயில் இருந்து பெற இயலும். இந்த வைட்டமினை மற்ற கொழுப்பில் கரையும் வைட்டமினைப் போல மீன், மீன் எண்ணெயில் இருந்து பெற இயலாது.

இந்த ‘ணி’ வைட்டமினைப் 
பெறும் வழிகள்:

1. முளைப்பயறு வேர்க்கடலை சாலட்

தேவையான பொருட்கள்: முளைவந்த பச்சைப்பயறு _ அரை கப், வேகவைத்த வேர்க்கடலை _ கால் கப், கேரட் துருவல் _ கால் கப், மாங்காய்த் துருவல் _ 1 டேபிள் ஸ்பூன், வெள்ளரிக்காய் அரிந்தது _ 1, உதிர்த்த மாதுளை முத்துக்கள் _ விரும்பும் அளவு, உப்பு _ தகுந்த அளவு, பச்சைமிளகாய் விழுது _ 1 டீஸ்பூன், எலுமிச்சம் பழம்_1, எண்ணெய்_1 ஸ்பூன், கடுகு, வெந்தயம் _கால் டீஸ்பூன் (தாளிக்க), பொடியாக அரிந்த கொத்துமல்லி _ சிறிதளவு, வறுத்த வெள்ளரி விதை _ 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை: முளைவந்த பச்சைப்பயறுடன் மற்ற காய்கறிகள், மாதுளை முத்துகள், வேர்க்கடலை சேர்த்து நன்கு குலுக்கி வைக்கவும், அதோடு எண்ணெயில் கடுகு, வெந்தயம், தாளித்துச் சேர்த்த பின்னர் தகுந்த உப்பு, பச்சைமிளகாய் விழுது, எலுமிச்சையைப் பிழிந்து சேர்த்து குலுக்கி விடவும். பரிமாறும் கிண்ணத்தில் தேவையான அளவு போட்ட பின்னர் வறுத்த வெள்ளரி விதை தூவி பரிமாறலாம்.

2. முளை வெந்தய சாலட்

தேவையான பொருட்கள்: முளைத்த வெந்தயம் _1 கப், பொடியாக அரிந்த அக்ரோட் பருப்பு _ சிறிதளவு, வறுத்த எள் _ 1 டேபிள் ஸ்பூன், பொடியாக அரிந்த பேரீச்சம் பழம் _ 5, அரிந்த பாதாம் _ 6, தேங்காய்த் துருவல் _ கைப்பிடி அளவு.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உடனே பரிமாறலாம். இதற்கு உப்பு, காரம் தேவை இல்லை. அப்படியே மெதுவாக மென்று சாப்பிட்டால் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும்.

3. மக்காச் சோள ‘சாட்’

தேவையான பொருட்கள்: வேகவைத்த மக்காச் சோள மணிகள் _ விரும்பும் அளவு, மிகப் பொடியாக அரிந்த குடமிளகாய் _ 100 கிராம், (மூன்று கலர் குட மிளகாயும் போடலாம்) அரிந்த கேரட் _ 100 கிராம் மிகப் பொடியாக அரிந்த முட்டைக் கோஸ் _ 50 கிராம், உப்பு _ தகுந்த அளவு, அரிந்த மாங்காய், வெள்ளரிக்காய் _ விரும்பும் அளவு, புதினா சட்னி _ 1 டேபிள் ஸ்பூன், பேரீச்சம் பழ இனிப்புச் சட்னி _ சிறிதளவு, ஓமப்பொடி _ மேலே தூவ, பொடியாக அரிந்த வெங்காயம் _ சிறிதளவு, ‘சாட்’ மசாலாத் தூள் _ அரை டீஸ்பூன்.

செய்முறை: எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு அகலப் பாத்திரத்தில் சேர்த்து குலுக்கி விட்டு மேலே ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

அடிக்கடி சுண்டல் சாப்பிடுவதும் நமக்கு இந்த வைட்டமினைப் பெறச் செய்யும். ராஜ்மா, கொண்டைக்கடலை, முழு பச்சைப்பயறு, காராமணி போன்றவைகளை உபயோகித்து அடிக்கடி கிரேவி செய்யலாம். குழம்பிலும் போடலாம். பொரியல் செய்யும்போது காய்கறிகளுடன் சுண்டல் வகையையும் சேர்த்து செய்தால் இந்த வைட்டமினை சுலபமாகப் பெறலாம். தினமும் முளைகட்டிய ஏதாவது ஒரு பயறைப் பச்சையாக ‘சாலட்’ ஆக சாப்பிட்டாலே போதும். 

-உண்மை இதழ்,16-30.4.17

இயற்கை உணவின் வழி ஆன்ட்டி பயாடிக்ஸ் பெறும் வழிகள்!



சளி, சுரம், தலைவலி போன்றவற்றிற்கு மருந்துகள் எடுக்கிறோம். இவை உடலில் பக்க விளைவுகளை உண்டாக்கும். இதைத் தவிர்க்க இயற்கையான உணவு உண்பதன் முலம் நோய்களைத் தவிர்க்கலாம்.

மஞ்சள்



மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. இதில் உள்ள குர்குமின், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள மஞ்சள், இருமலுக்குச் சிறந்த மருந்து. சளி, இருமலினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால், தேனுடன் மஞ்சள் தூள் கலந்து சாப்பிடலாம். ஆயுர்வேத பாரம்பர்யத்தில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்தும் சிறந்த பொருளாக மஞ்சள் கருதப்படுகிறது.

பூண்டு

தினசரி பூண்டு எடுத்துக்கொள்வது அனைத்து வகையான பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும். நோய்க் கிருமிகளை மட்டும் அல்ல. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பையும் குறைக்கும் தன்மை பூண்டுக்கு உண்டு. சளி, ஃப்ளூ, பல் வலி போன்றவற்றுக்கும் நிவாரணம் அளிக்கும். உணவில் சேர்த்துச் சாப்பிடுவதால், பூண்டின் முழுப் பலனும் கிடைத்து விடாது. எனவே, தினசரி ஒன்றிரண்டு பூண்டைத் தோல் உரித்து, சாலட், சூப் போன்றவற்றில் போட்டுச் சாப்பிடுவது நல்லது. பூண்டைப் போலவே, வெங்காயமும் சிறந்த ஆன்டிபயாட்டிக் உணவு.

இஞ்சி

இஞ்சியில், ‘ஜிஞ்சரால்’ எனும் வேதிப்-பொருள் உள்ளது. இது ஆன்டி-ஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்கிறது. மாரடைப்பைத் தடுக்கிறது. மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. குழந்தைகளின் தொப்புளைச் சுற்றி இஞ்சிச் சாற்றைப் பற்றுப் போடுவதன் மூலம் அவர்களின் அஜீரணத்தைச் சரிப்படுத்தலாம்.

அன்னாசிப் பழகம்

ஆன்டிஃபங்கஸ் தன்மை கொண்டது. அன்னாசிப் பழத்தில் வைட்டமின் பி, புரோமலின் சத்து அதிகமாக உள்ளன. புரோமெலின், கிருமிகளை அழித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தும். ஜீரண மண்டல உறுப்புகளை வலுவாக்கும். அன்னாசிப் பழகத்தில் இருக்கும் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் உள்ளிட்ட தாது உப்புகள் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

எலுமிச்சைப் பழம்

இதில் உள்ள சிட்ரிக் அமிலம், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. ரத்தத்தைச் சுத்திகரித்து, நோய்க்கிருமிகளைக் கட்டுப்படுத்துகிறது. எலுமிச்சைச் சாற்றில் மருதாணி இலை, மஞ்சள் சேர்த்து அரைத்து, காலில் தடவுவதன் மூலம் பாதவெடிப்புகள் சரியாகும். சருமத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, முகப்பொலிவைத் தரும். பருக்களை நீக்கும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் உள்ள கந்தகம், கிருமிகளை அழிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். இவை மட்டும் இன்றி, பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பினை முட்டைகோஸ் ஈடுசெய்யும். அல்சரைக் குணப்படுத்தும் குளூட்டமைன் சத்தும் இதில் உள்ளது.

செம்பருத்தி

செம்பருத்திப் பூவில் பாலிஃபீனால், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். புற்றுநோய் செல்களைத் தடுக்கும். ஃப்ரீரேடிக்கல்ஸைக் கட்டுப்படுத்தும். இதன் இலையைத் தண்ணீரில் நன்கு காய்ச்சி, வடிகட்டி குடிநீருக்குப் பதிலாக எடுத்துக்கொள்வதன் மூலம், உடல் வெப்பம் இயல்புநிலையில் இருக்கும். செம்பருத்தி, முடி வளர்ச்சியை அதிகரித்து நரைமுடிப் பிரச்சினையைக் குணமாக்கும். காய்ந்த மொட்டுகளை ஊறவைத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துத் தலையில் தடவினால், கூந்தல் கறுப்பாகும். மாதவிடாய் சரியாக வருவதற்கு அரைத்த செம்பருத்தி விழுதை வெறும் வயிற்றில் உண்ணலாம்.

தேன்

தேனில் உள்ள ஆன்டடிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன. இதில், 17 முதல் 70 சதவிகிதம் வரை நீர்ச்சத்து உள்ளது. தேனுடன் வெந்நீர் கலந்து சாப்பிட்டால், உடல் இளைக்கும்; உடல் உறுதியாகும். ஆஸ்துமா பிரச்சினைக்குத் தேன், முட்டை மற்றும் பால் சேர்த்துப் பருகலாம். வாந்தி, ஜலதோஷம் போன்றவற்றுக்குத் தேனுடன் எலுமிச்சைப் பழச் சாறு கலந்து பருகலாம். மிதமான சூட்டில், பாலோடு தேன் சேர்த்து பருகும்போது ரத்தச்சோகையும் சரியாகும்.

தயிர்

தயிரில், ‘புரோபயாட்டிக்’ எனப்படும் நல்ல பாக்டீரியா நிறைந்துள்ளது. இது, உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாவை நீக்கி, நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகின்றன. மேலும், இதில் உள்ள லேக்டோபேசியல் (லிணீநீtஷீதீணீநீவீறீ) செரிமானத்தைத் தூண்டி, வயிற்று உபாதைகளைச் சரிசெய்துவிடும்.

மாதுளம் பழம்

மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்-கள் ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த உற்பத்தியையும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியையும் அதிகரிக்க உதவுகின்றன. மாதுளைச் சாற்றில் தேன் கலந்து பருகும்போது, இதயம் பலம்பெறும்; நரம்புத் தளர்ச்சி மற்றும் ஜீரணப் பிரச்சினைகள் நீங்கும். பித்தப் பிரச்சினைகள் சரியாக, மாதுளைச் சாற்றோடு கற்கண்டுப் பொடி கலந்து பருகலாம். மாதுளம் பழம் சாப்பிட்டால் இதயத்துக்கும் மூளைக்கும் சக்தி கிடைக்கும்.

மிளகு

சளி, சுரம், ஒவ்வாமை போன்றவற்றை மிளகு தடுக்கும். தினம் 5 மிளகு மென்றுச் சாப்பிட்டால் உடல் நலமாய் இருக்கும். பூச்சிக்கடியால் வரும் பாதிப்பு நீங்கும்.

துளசி

தினம் 10 துளசி இலைகளை மென்று தின்றால் சளி, ஒவ்வாமை நீங்கும். 
-உண்மை இதழ்,16-30.4.17

மாதவிலக்கின்போது வாந்தி, வயிற்றுவலி - எளிய தீர்வு!


13 முதல் 14 வயதில் பெண்கள் பருவம் அடைவர். அதாவது முதல் மாதவிலக்கு வருவதையே நாம் பருவம் அடைதல் என்கிறோம்.

ஆனால், தற்போது இரசாயனம் கலந்த பாக்கெட் உணவுகள், மைதா, பரோட்டா, செயற்கை பானங்கள் சாப்பிடுவதால், பெண் பிள்ளைகள் 10 வயதிலேயே பருவம் அடையும் அவலம்! எட்டு வயதில் பருவம் அடையும் அதிர்ச்சியான நிகழ்வுகளும் நிகழ்கின்றன.

எனவே, பாரம்பரிய உணவுகளை உண்டு, செயற்கை உணவுகளை விலக்குவதே இந்த அவலங்கள் அகல ஒரே வழி.

மாதவிலக்கின்போது சில பெண்களுக்கு வயிற்றுவலி கடுமையாக இருக்கும்! சாப்பிட முடியாது, நடக்க முடியாது. வாந்தியும் வரும்; வயிற்றைப் புரட்டும்.

இரண்டு நாள்கள்கூட இது நீடிக்கும். இதற்கு ஆங்கில மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு நிவாரணம் பெறுகின்றனர். இது மிக மிகத் தவறு. ஆங்கில மருத்து சாப்பிடுவது பல பாதகமான பக்க விளைவுகளை உண்டாக்கும்.

இவ்வாறு வலியும் வாந்தியும் வருவது திருமணம் ஆனபின் பெரும்பாலும் நீங்கி விடும்.

சரியான தீர்வு என்ன?

மாதவிலக்கின்போது வயிற்றுவலி, வாந்தி, அசதி வந்து, சாப்பிட முடியாத நிலை தொடங்கும்போதே,

நற்சீரகத்தை பொன்வறுவலாக வறுத்து, அதைத் தேவையான அளவுத் தண்ணீரில் போட்டு நன்றாகக் காய்ச்சினால் கஷாயம் கிடைக்கும். அதில் எலுமிச்சைச் சாற்றை லு தேக்கரண்டி கலந்து லு டம்ளர் குடித்தால் உடனே குணமாகும். மீண்டும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை ரு டம்ளர் அளவு பருகினால் உடல் நலமாகும். இதனால் பக்க விளைவுகள் ஏதும் வராது. உடல் நலம் பெறும். பொதுவாகப் பெண்கள் பத்து வயது முதலே, சோற்றுக் கற்றாழைச் சோற்றை எடுத்து ஏழுமுறைத் தண்ணீரில் அலசியபின், அத்துடன் தேவையான அளவு தேன் சேர்த்து, தினம் அய்ந்தாறு துண்டுகள் சாப்பிட்டால் பெண்களுக்கு பலப் பிரச்சினைகள் வராது காக்கும்.

பெண்கள் உளுந்து வடை, களி, இட்லி இவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

கறிவேப்பிலையைப் பொடியாகவோ, துவையலாகவோ நிறையச் சாப்பிட வேண்டும். விதையில்லாப் பழங்களைத் தவிர்த்து, விதையுள்ள நாட்டுப் பழங்களைச் சாப்பிட வேண்டும். முருங்கைக்கீரை, முருங்கைக்காய் வாரம் மூன்றுமுறை சாப்பிட வேண்டும்.

எள் சேர்த்த இனிப்பு உருண்டை சாப்பிடுவது பெண்களுக்கு மிகவும் நல்லது.

கீரைகள், பேரீச்சம்பழம் நிறையச் சாப்பிட்டு இரத்தச் சோகை வராமல் தடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் உடல்நலம் பெறுவதோடு, குழந்தையின்மை என்ற சிக்கல் வராது.

செயற்கை உணவுகள் உண்டால் குழந்தை உருவாகும் வாய்ப்பு பெருமளவு குறையும். எனவே, மேற்கண்ட பாரம்பரிய உணவுகளைத் தவறாது உண்டு, செயற்கை உணவுகளை விலக்கி, வளமோடு வாழுங்கள்!   
-உண்மை இதழ்,1.15.4.17

ஞாயிறு, 26 மார்ச், 2017

15வது பாரம்பரிய தமிழ்நாட்டு வைத்தியர்கள் மாநில மாநாடு 2017 

அகத்தியர் மூலிகை உடலியக்க மருத்துவ மய்யம்

15வது பாரம்பரிய தமிழ்நாட்டு வைத்தியர்கள்

மாநில மாநாடு 2017 - இது ஒரு பாரம்பரிய தமிழர்களின் திருவிழா

நாள்: ஏப்ரல் 14,15,16-2017,

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள்

இடம்: பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்-613403,

(மெடிக்கல் காலேஜ் - வல்லம் சாலை)

நாட்டு வைத்தியம், பரம்பரை வைத்தியம், மூலிகை வைத்தியம், தொக்கண வைத்தியம், இயற்கை வைத்தியம், கால்நடை வைத்தியம், இயற்கை வேளாண்மை 18 சித்தர்களின் செயல்பாடுகள் வள்ளுவர், வள்ளலாரின் வழிமுறைகள் போன்ற தலைப்புகளின் பேருரைகள் நடைபெறும்.

அனைவரும் கலந்து கொள்ளலாம்.

அனுமதி இலவசம்  - முன் அனுமதி அவசியம்.

(மூன்று நாட்களும் உணவு, தங்குமிடம், மூலிகை டீ.

மூலிகை சுண்டல், மருந்து குழம்பு உணவுடன் இலவசம்)
-விடுதலை,26.3.17

புதன், 8 மார்ச், 2017

ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் கற்றாழை ஜூஸ்



அன்றாடம் ஒரு மருந்து, அன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு நோய் அதற்கான மருத்துவம் என்று நோயினை முன்வைத்து எளிய முறையிலே நாம் இல்லத்தில் இருந்தபடி செய்து உடனடி நிவாரணம் பெறுவது தொடர்பாக  பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் பெண்களுக்கான மருத்துவ குறிப்புகளில், உயிருக்கு ஆபத்து நேரிட செய்யும் பெரும்பாடு(அதிகமான ரத்தப்போக்கு) நோயினை தவிர்ப்பது குறித்து பார்க்கலாம். பெரும்பாடு என்ற நோயானது தைராய்டு சுரப்பி, கருப்பையிலே நார்கட்டிகள், கருப்பை சுவர்களில் சிறு சிறு கொப்பளங்கள், கருப்பையிலே நீர் கட்டிகள், ஹார்மோன் கோளாறுகளால் சுரப்பிகளில் ஏற்படுகின்ற மாற்றம், கரு முட்டைகள் சரியான முறையில் உற்பத்தியாகி வெளியேறாமை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. இந்நோய்க்கான வெளிப்பாடு அதிக ரத்தப்போக்கு, உடல் சோர்வு, இடுப்பு மற்றும் அடிவயிற்று வலியாகும். நாவல் பட்டை, கற்றாழை, முருங்கைப்பூ உள்ளிட்டவைகள் பயன்படுத்தி பெரும்பாடு நோய்க்கான மருந்து குறித்து பார்க்கலாம். நாவல் பட்டையை பயன்படுத்தி அதிக ரத்தப்போக்கை தடுக்கும் பானம் தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்: மோர், சந்தனப்பொடி, நாவல் மரப்பட்டை ஜூஸ். 30 மி.லி மோருடன் சம அளவு நாவல் பட்டை சாறு மற்றும் சந்தனப்பொடி கலந்து குடிக்கலாம். 

இதனை மாதவிடாயின் போது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை அருந்துவதால் அதிக ரத்தப்போக்கு விரைவில் கட்டுப்படுத்தப்படும். நாவல் மரப்பட்டையை பசுமையாகவோ அல்லது மருந்து கடைகளில் கிடைக்கும் நாவல் பட்டை சூரணத்தையோ இதில் பயன்படுத்தலாம். இதனால் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. வாழைப்பூவை பயன்படுத்தி ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து: தேவையான பொருட்கள்: ரஸ்தாலி வாழைப்பூ இதழ்(அரைத்து சாறு எடுக்கவும்), பனங்கற்கண்டு மற்றும் பால். 50 மி.லி வாழைப்பூ சாறுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் பால் சேர்த்து அருந்தலாம். அல்லது வாழைப்பூ சாறுடன் மோர், சிறிது உப்பு சேர்த்து எடுத்து கொள்ளலாம். குமரி என்று அழைக்கப்படும் வாழைப்பூவில் துவர்ப்பு சுவை உள்ளது. இந்த துவர்ப்பு சுவை ரத்தத்தை கட்டுப்படுத்தும் ஒரு அருமருந்தாகும். இது ரத்தத்தை உடனடியாக உறைய செய்கிறது. முருங்கை பூவினை பயன்படுத்தி பெரும்பாடு, அதிகப்படியான வலியினை போக்கும் மருந்து தயாரிக்கும் முறை: தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ, காய்ச்சிய பால், பனங்கற்கண்டு ஒரு ஸ்பூன் முருங்கைப்பூ விழுதுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். 

பின்னர் அதனை வடிக்கட்டி பாலுடன் சேர்த்து 4 மணி நேரத்துக்கு ஒரு முறை அருந்தி வருவதால், அதிகப்படியான குருதி போக்கு சரியாவதுடன், உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும். முருங்கைப்பூ, நோய் வாராது தடுக்கும் தன்மை கொண்டது. ரத்தத்தை உறைய செய்யும் தன்மை, கருப்பைக்கு பலம் தருவது, ஆண் மலட்டு தன்மையை போக்கும் தன்மையும் முருங்கைப்பூவிற்கு உண்டு. இந்த பானத்தை அருந்துவதன் மூலம் நீர்த்த தன்மையுடன் இருக்கின்ற குருதி கட்டுப்படும். அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் சோற்றுக்கற்றாழை: தேவையான பொருட்கள்: முருங்கைப்பூ, சோற்றுக்கற்றாழை ஜெல்(7 முறை நீரில் அலசி கசப்பினை போக்கவும்), மோர். இரண்டு ஸ்பூன் சோற்றுக்கற்றாழை பசை, முருங்கைப்பூ விழுது மற்றும் மோர் சேர்த்து கலந்து குடித்து வர அதிக ரத்தப்போக்கு கட்டுப்பாட்டுக்குள் வரும். இந்த பானத்தை அருந்துவதால், பெரும்பாடு, மாதவிலக்கு நேரங்களில் ஏற்படும் உடல் சோர்வு, அடிவயிற்று வலி, இடுப்பு வலி ஆகியன நீங்குவதோடு, உடலுக்கு குளிர்ச்சி தரவல்லது.

- தமிழ் முரசு நாளேடு,8.3.17

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

கொஞ்சம் இஞ்சி... 



நம்முடைய பாரம்பரிய உணவுப்பொருளான இஞ்சி பலவிதமான மருத்துவ குணங்கள் கொண்டது. இதனை, பெரும்பாலான வீடுகளில் பித்தம், மந்தம் போன்ற பிரச்சினைகளுக்கு சாப்பிடும் வழக்கம் இருக்கிறது. மருத்துவரீதியாக இஞ்சிக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதைக் கூறுங்கள் என்று ஆயுர்வேத மருத்துவர் அசோக்குமாரிடம் கேட்டோம்.

பசியின்மை, வாந்தி உணர்வு, வயிறு உப்புசம், மூச்சுத்திணறல், பெருவயிறு(வயிறு வீக்கம்) முடக்குவாதம், இதய சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவற்றை உஷ்ண தன்மை கொண்ட இஞ்சி குணப்படுத்தும் சக்தி உடையது. பெரு வயிறு பாதிப்பு உடையவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி, வயிற்றின் மேல் பகுதியில் இஞ்சியை அரைத்து தடவி வரலாம். மேலும், சுவை உணர்வு, பாலுணர்வு ஆகியவற்றையும் இஞ்சி அதிகப்படுத்தும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் இஞ்சியை லேகியம் மற்றும் சூரணமாக கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இஞ்சியை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் லேகியத்துக்கு ஆர்த்ரக்க ரசாயனம்( என்பது இஞ்சியின் சமஸ்கிருதப் பெயர்) எனவும், சூரணத்துக்குத் திரிகடுக சூரணம் எனவும் பெயர்.

இஞ்சியைக் காய வைத்து, சுக்காக மாற்றி சவுபாக்கிய லேகியம் தயாரிக்கிறோம். ஆர்த்ரக்க ரசாயனத்தில் இஞ்சியுடன் வெல்லம், லவங்கப் பட்டை, பச்சிலை(மூலிகை) குருவேர், கோரைக்கிழங்கு, தணியா, தேன் மற்றும் நெய் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது.

இஞ்சியை முக்கிய பொருளாக வைத்து தயாரிக்கப்படும் எல்லா மருந்துகளும் கார சுவை கொண்டவை. ஆகவே, இஞ்சி, சுக்கு போன்றவற்றை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து சாப்பிடக் கூடாது. முக்கியமாக, அல்சரால் அவதிப்படுபவர்கள் சாப்பாட்டுக்குப் பிறகே இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் மருந்துகளை சாப்பிட வேண்டும்.
-விடுதலை,20.2.17

காரட் கண்ணுக்கு நல்லதா?

காரட் சாப்பிட்டால் கண்ணாடியைக் கழற்றி விடலாம் என்ற நம்பிக்கை நீண்டகாலமாக நிலவிவருகிறது. இன்றும் அது வலுவாக நம்பப்படுவதற்கு என்ன காரணம்?
ராயல் விமானப் படையும் காரட்டும்

ஆப்கானிஸ்தானிலிருந்து உலகின் மற்றப் பகுதிகளுக்குக் காரட் பரவியதாகக் கூறப்படுகிறது. ஆரம்பக் காலத்தில் அய்ரோப்பாவில் பாம்புக் கடிக்கும், பால்வினை நோய்க்கும் மருந்தாகக் காரட்டைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ராயல் விமானப் படையினர் இரவு நேரத்திலும் சிறப்பாகப் பணியாற்றியதாகவும், இதற்கு அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டு வந்ததுதான் காரணம் என்றும் ஒரு விமானி தெரிவித்தார். தங்கள் நாட்டு விமானப்படையினரின் ஆற்றலுக்கும் - குறிப்பாக இருட்டில்கூடத் தெளிவாகப் பார்த்து எதிரி விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதற்கும் தினமும் அவர்கள் காரட்டை அதிகமாகச் சாப்பிட்டதே காரணம் என்றும் பிரிட்டிஷ் ராணுவம் அறிக்கை வெளியிட்டது. அதற்குப் பிறகு காரட் சாப்பிட்டால் பார்வை நன்றாக இருக்கும் என்ற கருத்து வலுவடைய ஆரம்பித்தது.

உண்மையிலேயே காரட் கண்ணுக்கு நல்லதா? கண்ணுக்குத் தேவையான எல்லாச் சத்தும் காரட்டில் இருக்கிறதா என்ற சந்தேகங்கள் எழலாம்.

வைட்டமின் ஏ: பார்வைத் திறனோடு நெருங்கிய தொடர்பு கொண்டது வைட்டமின் ஏ. கீரை, காரட், பால், முட்டை, ஈரல், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பப்பாளி, மாம்பழம் போன்றவற்றில் வைட்டமின் ஏ இருக்கிறது. சாப்பிடும்போது சக்கையென நினைத்துத் தூர எறிகிறோமே அந்தக் கறிவேப்பிலையிலும் கொத்துமல்லியிலும்தான் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறையால் பார்வையிழப்பு ஏற்படுவதைத் தடுக்க, அது நிறைந்துள்ள உணவுகள் உதவும். 40 ஆண்டுகளுக்கு முன் வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது. சரியான ஊட்டச்சத்து இல்லாததாலும், போதிய அளவு வைட்டமின் ஏ சத்து கிடைக்காத தாலும் குழந்தைகளுக்கு நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு வயிற்றில் புழுத்தொற்று இருந்தால், வைட்டமின் ஏ சத்தை உடல் கிரகிக்க முடியாத நிலைமை இருந்தாலும் இப்பிரச்சினை ஏற்படும்.

அரசுத் திட்டம்: வைட்டமின் ஏ சத்துப் பற்றாக் குறைக்கான அறி குறிகள் தெரிந்தவுடன் வைட்டமின் ஏ அதிகமுள்ள உணவை அதிகம் உட்கொண்டாலே நிரந்தரப் பார்வையிழப்பைத் தடுத்து விடலாம். இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து வைட்டமின் ஏ சத்துப் பற்றாக்குறையைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதத்தில் இருந்து, ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் அய்ந்து வயதுவரை வைட்டமின் ஏ சத்துத் திரவம் ஆரம்பச் சுகாதார நிலையங்கள் / துணைச் சுகாதார நிலையங்கள் மூலம் கொடுக்கப் பட்டது. இன்றும் இத்திட்டம் தொடர்கிறது.

-விடுதலை,20.2.17