செவ்வாழைப் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதுடன் ஆல்கலைன் நேச்சர் (Alkaline Nature) எனப்படும் காரத்தன்மை கொண்ட பழம் இவ்வாழைப் பழம். சிவப்பு நிறத்தில் இருப்பதால் ஆன்தோ சயானின் (Antho Cyanin) என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் (Anti Oxidant) நிறைந்தது. எனவே ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த பழமாக செவ்வாழைப் பழம் விளங்குகிறது. இப்பழத்தில் 4 சதவீதம் நார்ச்சத்து உள்ளதுடன், வைட்டமின் சி சத்தும் உள்ளது.
செவ்வாழை சர்க்கரை சத்தை மெதுவாக வெளியேற்றும் தன்மை கொண்டதால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகாமல் பாதுகாக்கிறது. இப்பழத்தில் உள்ள பீடா கெரெட்டின் (Beta Carotene) வைட்டமின் பி-6 மற்றும் வைட்டமின் டி ஆகியவை இரத்த சிவப்பு அணுக்கள் (RBC) உற்பத்திக்கும், புரதச் சத்தின் வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகிறது. இப்பழத்தில் 11 தாது உப்புகளும், 6 வைட்டமின் சத்துக்களும் அதிக நார்ச்சத்தும் ஸ்டார்ச் எனப்படும் மாவுச்சத்தும் அதிகம் உள்ளதால் இப்பழத்தை சாப்பிட்ட உடன் நமக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதோடு அதிக நேரம் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது.
மருத்துவ குணங்கள்
செவ்வாழையில் வைட்டமின் சி சத்து உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுவதால் பிரி ராடிகல்ஸ் (Free Radicals) என்னும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடுகிறது. மாரடைப்பு ( ஹார்ட் அட்டாக்) நோயையும் தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், வளர்சிதை மாற்றத்திற்கும் பெரிதும் உதவுகிறது. வைட்டமின் சி தேவையான 16 சதவிகிதம் உள்ளது.
இப்பழத்தில் கொழுப்பு சத்தும் கிடையாது. எனவே உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது. டிரிப்டோபன் (Tryptophan) என்னும் அமினோ அமிலத்தை செரோடோனின் (Serotonin) ஆக மாற்றுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டியுடன் செவ்வாழைப் பழத்தையும் கொடுத்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவார்கள்.
பழத்தில் உள்ள ஆன்டாசிட் (Antacid) அடிக்கடி ஏற்படும் நெஞ்சு எரிச்சலைக் குணப்படுத்துகிறது. செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டால் எளிமையாகவும், இயற்கையாவும் மலச்சிக்கலையும் மூலநோயையும் தடுக்க முடியும். வாழைப்பழத்தை அப்படியே சாப்பிட்டால்தான் அதன் பலன் கிடைக்கும். தோலில் ஏற்படும் சுருக்கத்தையும் தடுத்து இளமைத் தோற்றத்தை வழங்குகிறது. இப்பழத்தில் 75 சதவீதம் தண்ணீர் உள்ளதால் தோல் காய்ந்து போவதையும், தோல் உரிவதையும் தடுத்து விடுகிறது.
செவ்வாழைப்பழம் வயிற்றில் அமில அளவைக் குறைத்து விடுவதால் வயிற்று எரிச்சலையும் குறைத்து விடுகிறது. வயிற்றின் உட்புறச் சுவரின் செல்கள் நன்றாக வளர்வதற்கு உதவுவதால் அமிலத் தன்மை ஏற்படுவதைத் தடுத்துவிடுகிறது. பழத்தில் உள்ள புரோட்டியேஸ் (Protease) எதிர்ப்பு சக்தியின் காரணத்தால் வயிற்றில் புண்கள் ஏற்படுவது தடுக்கப்பட்டு விடுகிறது.
இப்பழத்தில் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் கண் பார்வைக்கு சிறந்தது. இப்பழத்தில் உள்ள பீடா கெரோட்டீன் சத்து வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இந்த வைட்டமின் ஏஇன் சத்து கண்களின் ஆரோக்கியத்திற்கும் கண் பார்வைக்கும் சிறந்தது.
குறிப்பு: சிறுநீரக நோயாளிகளும் கிட்னி பெயிலியர் (Kidney Failure) எனப்படும் சிறுநீரகம் சரியாக செயல்படாத நோயாளிகளும், பொட்டாசியம் கலந்த உணவை சாப்பிடக் கூடாது. எனவே இவ்வகை நோயாளிகள் செவ்வாழைப் பழத்தை சாப்பிடவே கூடாது என்பதை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
- உண்மை இதழ், 16-31.5.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக