மார்பிலுள்ள கபத்தை அகற்றும் ஆற்றல் உடையது நொச்சி. ஆவி (வேது) பிடிக்க, ஒற்றடமிட, பற்றுப் போட, உள்மருந்தாகக் கொடுக்க எனப் பல்வேறு பரிமாணங்களில் நொச்சியைப் பயன்படுத்தலாம். சித்த மருத்துவத் தத்துவப் புரிதலின்படி, கபம் மற்றும் வாதத்தின் அத்துமீறலைத் தட்டிக்கேட்கும் தாவரம், நொச்சி.
இதிலுள்ள வேதிப்பொருட்கள்: லுடியோலி (Luteolin), வைடெக்ஸிகார்பின் (Vitexicarpin), யுர்சோலிக் அமிலம் (Ursolic acid), பீட்டா சைடோஸ்டீரால் (Beta – sitosterol), நிஷிடைன் (Nishindine), இரிடாய்ட் கிளைக்கோசைடு (Iridoid glycoside) ஆகிய தாவர வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
பயன்கள்: முறையற்ற மாதவிடாயைச் சீராக்க, நொச்சி இலைகள், மிளகு, கீழாநெல்லி சேர்ந்த மருத்துவ நுணுக்கம் சித்த மருத்துவத்தில் கையாளப்படுகிறது. ஹார்மோன் அளவில் சில மாற்றங்களை ஏற்படுத்தி மாதவிடாயை முறைப்படுத்தும். இதன் இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்துக் குடிக்க, இருமலின் தீவிரம் குறையும். குளிர்சுரம் ஏற்படும்போது நொச்சி இலைகளோடு மிளகுக் கூட்டி குடிநீரிட்டு உட்கொள்ளலாம்.
குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தத்துக்கு (மாந்தம் என்பது உடல் முதல் உள பாதிப்புகளுக்கான அடிப்படை) பொடுதலை, உத்தாமணி, நொச்சி, நுணா போன்ற மூலிகைகளின் கூட்டு மருந்து அற்புதமான பலன்களைக் கொடுக்கும். இவற்றை வதக்கிச் சாறு பிழிந்து, சிறிதளவு குழந்தைகளுக்குக் கொடுக்கும் வழக்கத்தைக் கிராமங்களில் இன்றும் காணலாம். மழையின் தீவிரம் அதிகரிக்கும்-போது, மூச்சிரைப்பும் அதிகரிக்கிறதா? கவலை வேண்டாம். நொச்சி, மிளகு, பூண்டு, திப்பிலி, கிராம்பு அரைத்து சிறிதளவாய் வாயில் அடக்கிக்கொள்ள சிரமம் மறையும்.
மருந்தாக: கொசுக்கள், பூச்சிகளை விரட்ட இதன் இலைகளைப் பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ப்ரோஸ்டாகிலான்டின் (Prostaglandin inhibiton) உற்பத்தியைத் தடுப்பதன் மூலம், தன்னுடைய வீக்கமுறுக்கி, வலி நிவாரணிச் செய்கையை நிலைநிறுத்துகிறது. இதிலிருக்கும் பாலிஃபீனால்கள், எதிர்-ஆக்ஸிகரனி செயல்பாட்டை வெளிப்-படுத்துகின்றன. பாம்பின் விஷத்தை முறிக்கும் தன்மை இதன் வேருக்கு இருப்பதாக ஆய்வு உறுதிப்படுத்துகிறது.
இதன் இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாகக் காய்ச்சிக் குளிக்க, களைப்பினால் உண்டாகும் உடல் வலி மறையும். தலை, பாரமாக இருக்கும்போது, நொச்சியிலைகளை கொதிநீரில் போட்டு வேதுபிடிக்க, ஆவியோடு ஆவியாகப் பாரம் இலகுவாவதை உணர முடியும். உடலில் தோன்றும் வலி, சோர்வை வழியனுப்பி வைக்க, விளக்கெண்ணெயில் இதன் இலைகளை லேசாக வதக்கிவிட்டு, ஒரு துணியில் முடிந்து ஒற்றடமிடலாம். நொச்சி இலைகளைத் தலையணைக்குள் புதைத்துப் பயன்படுத்த, தலைவலி குறைந்து ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
தைலம்: நல்லெண்ணெய் சேர்த்துத் தயாரிக்கப்படும் நொச்சித் தைலத்தை, தலைக்குத் தேய்த்துக் குளிக்க பீனிச நோய்கள், ஒற்றைத் தலைவலி ஆகியவை மறையும். குழந்தை ஈன்ற தாய்மார்களைக் குளிப்பாட்டும் நீரில், நொச்சி இலைகளைச் சேர்க்க, சோர்வை நீக்கி, குறைந்திருக்கும் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும். கொசுக்கள் ஆற்றலை அட்டகாசம் செய்யும்போது, உலர்ந்த நொச்சி இலைகளையும் வேப்பிலைகளையும் சேர்த்துப் புகை போடலாம். மண்ணீரலில் உண்டாகும் நோய்களுக்கு, நொச்சியைப் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம்.
நம் நலம் காக்க வந்த நம் நொச்சியை, நாளும் பாதுகாத்துப் பயன்படுத்த வேண்டும்.
- உண்மை இதழ், 1-15.11.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக