ஞாயிறு, 24 டிசம்பர், 2017

ஆவாரையின் அரிய பயன்கள்!



“ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டா?’’ என்று பழமொழி உண்டு.  ஆவாரம் பூவைப் புங்கை மரத்தின் நிழலில் உலர்த்தி, பதப்படுத்தி (பொடியாக்கிக் கொள்ளலாம்) தண்ணீர்விட்டுக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் பல நோய்களிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் என்பதே அப்பழமொழியின் உட்பொருள்.

ஆவரை, ஆவிரை, ஏமபுட்பி மேகாரி, ஆகுலி, தலபோடம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆவாரையின் தாவரவியல் பெயர் ‘‘Cassia Auriculata’. குத்துச்செடி இனத்தைச் சேர்ந்த ஆவாரை, சுமார் 10 அடி உயரம் வரை வளரும். தென்னிந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் ஆவாரை, மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கும். இதன் இலை, பூ, பட்டை, விதை, பிசின், வேர் என எல்லாமே மருந்துக்குப் பயன்படக்கூடியவை. ஆனாலும்  பூவுக்கு மருத்துவக் குணம் அதிகம். ஆவாரம்பூவில் சட்னி, துவையல், சாம்பார், தோசை எனப் பல உணவு வகைகளைச் செய்து சாப்பிடலாம்.

உடற்சோர்வு நீங்க:

மதுப்பழக்கத்தால் உடலில் சோர்வு ஏற்பட்டுக் கல்லீரல் வீக்கம் மற்றும் பாதிப்பு உண்டாகி மிகுந்த பிரச்னை உண்டாகும். அத்தகைய சூழலில் கால் டீஸ்பூன் ஆவாரம்பூ பவுடரைச் சூடான பாலில் கலந்து 48 நாள்கள் குடித்து வந்தால் நோய் அனைத்தும் நீங்கிப் புதுத்தெம்பு கிடைக்கும். சர்க்கரை நோய்க்கு ஆளானவர்கள் தவிர மற்றவர்கள் ஆவாரம்பூ பொடியுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் பாதித்தவர்கள் இதேபோல் ஆவாரம்பூ பொடியைச் சூடான பாலில் கலந்து காலை, மாலை எனத் தொடர்ந்து அருந்தி வந்தால்  சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். ஆவாரம்பூ அல்லது அதன் பொடியைத் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து அதனுடன் பால் சேர்த்துக் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். ஆவாரம்பூ இதழ்களைக் கறிக்கூட்டாகச் செய்தும் சாப்பிடலாம். இதனால் உடல் சூடு, உடல் நாற்றம், களைப்பு, வறட்சி, மேகவெட்டை போன்றவை சரியாகும்.

தோல் நோய் விலக:

பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம் பூவைச் சம அளவு சேர்த்துச் சிறிதளவு வசம்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த மூலிகைக் கலவையைத் தேய்த்துக் குளிப்பதன்மூலம் சருமம் பொன் நிறமாக மாறும். அத்துடன் சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளிகள் மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.

எலும்பு இணைய:

ஆவாரையின் இலைகள் தரும் பலன்களும் அதிகம். பசுமையான ஆவாரை இலைகளை மையாக அரைத்துத் தயிர் அல்லது நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கரு அல்லது பொடியாக்கிய கறுப்பு உளுந்து சேர்த்துத் தசை பிசகுதல், எலும்பு நகர்தல், மூட்டு நழுவுதல் மற்றும் எலும்பு உடைதல் போன்றவற்றுக்குப் பற்று போட்டு வந்தால் பலன் கிடைக்கும். விலகிய மூட்டினைச் சரி செய்து அதன்மீது பற்றுப்போட வேண்டியது அவசியம்.

பல் நோய் அகல:

ஆவாரம் பட்டையை நன்றாகக் காய வைத்து இடித்துப் பொடியாக்கிச் சலித்துக் கொள்ளவும். அதில் ஒரு டீஸ்பூன் அளவு பொடியை எடுத்து நான்கு டம்ளர் தண்ணீருடன் கலந்து ஒரு டம்ளராக வற்றுமளவுக் கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி இளஞ்சூட்டுடன் வாய் கொப்புளித்து வந்தால் பல் இறுகிக் கெட்டிப்படும். அத்துடன் இதைச் செய்வதால் ஆடிக்கொண்டிருந்த பற்கள் பலப்படும். சொத்தை விழுந்த பற்களில் வலி இருந்தால் சரியாகிவிடும். பல் ஈறுகளில் வீக்கம், சீழ் பிடித்தல் போன்ற பாதிப்புகள் இருந்தால் இந்த நீரால் வாய் கொப்புளித்து வந்தால் பாதிப்புகள் நீங்குவதுடன் பற்களுக்கும்  பாதுகாப்பு கிடைக்கும்.
- உண்மை இதழ், 1-15.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக