ஆரோக்கியமான வாழ்க்கைக்கு காய்கறிகள், பழங்கள் கீரைகள் சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவர்கள் மட்டுமல்ல... எத்தனையோ பேர் சொல்லிக் கேள்விப் படுகிறோம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்சிடெண்டுகள் என பல சத்துகள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் நாம் கவனிக்காத இன்னொரு முக்கிய விஷயத்தை சமீபகாலமாக நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.
காய்கறிகளையும் பழங்களையும் கீரைகளையும் உணவில் சேர்த்துக் கொண்டால் மட்டும் போதாது. அவற்றை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம் என்கிறார்கள். அப்படி என்ன முறையாகப் பயன்படுத்துவது? காய்கறிகள், பழங்கள், கீரைகளை சுத்தமாகக் கழுவிய பிறகே பயன்படுத்துகிறோம். அதேபோல, இவற்றை வெட்டிய உடனே பயன்படுத்த வேண்டும் என்பதும் முக்கியம் என்பதுதான் நிபுணர்கள் சொல்லும் ரகசியம். இதற்கு ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் காரணம் எல்லோரையும் யோசிக்க வைப்பவை.
காய்கறிகளை வெட்டி வைத்துவிட்டுத் தாமதமாகப் பயன்படுத்தும்போது பாக்டீரியாக்கள், வைரஸ்கள், சில வகை ஒட்டுண்ணிகள் அவற்றில் உருவாகி விடுகின்றன. குறிப்பாக தீமை செய்யும் நுண்ணுயிரிகள் அதிகமாக உருவாகின்றன. இதனால் நமக்கு நன்மை செய்யும் காய்கறிகள், பழங்களே நமக்குத் தீமை செய்யும் வில்லனாக மாறிவிடுகின்றன. குமட்டல், வயிற்றுப் போக்கு, தலைவலி போன்ற பல பிரச்னைகள் இந்த சுகாதாரமற்ற பயன்பாட்டால் ஏற்படுகிறது.
ஆகவே மக்களே காய்கறிகள், பழங்களை வெட்டிய உடனே பயன்படுத்துங்கள். இதையே வேறு மாதிரி சொன்னால் காய்கறிகள், பழங்களை உடனே பயன்படுத்துகிற மாதிரி இருந்தால் மட்டுமே வெட்டுங்கள்என்கிறார்கள். அதிலும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விஷயத்தை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது.
இதுபோன்ற 'ரெடி டு ஈட் என்று உடனடியாக உண்பதற்குக் கடைகளில் கிடைக்கிற உணவுப் பொருட்கள் எல்லாமே பரிசீலனைக்கு உரியவைதான். இதற்கு வெங்காயம் நல்ல உதாரணம். ஓட்டல்களில் சமையல் பயன்பாட்டுக்காக காலையிலேயே கிலோ கணக்கில் வெங்காயத்தை வெட்டி வைத்து விடுகிறார்கள். காலையில் வெட்டி வைக்கப்படுகிற வெங்காயம்தான் இரவு வரை ஆனியன் தோசை, ஆம்லெட்டுகள் என எல்லா உணவு தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, வெளியிடங்களில் தவிர்க்க முடியாமல் சாப்பிட நேர்கிறபோதும் இதுபோல் வெட்டி வைக்கப்பட்ட சாலட்டுகள், வெட்டி வைக்கப்பட்ட பழங்களிலிருந்து தயார் செய்யப்படுகிற பழரசங்கள் போன்ற உணவு வகைகளைத் தவிர்ப்பதே நல்லது என்கிறார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
-விடுதலை,12.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக