ஞாயிறு, 13 டிசம்பர், 2015

நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள்


நெல்லிக்காய் லேகியம்: 150 கிராம் பனை வெல்லத்துடன் இரண்டு ஆழாக்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து பனைவெல்லம் கரைந்தவுடன் இறக்கி இதனை மேலாக இறுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஆழாக்கு அளவு சுத்தமான பசும்பால் விட்டு நன்றாக கொதித்து வரும் சமயம், இடித்து சலித்த நெல்லிக்காய் வற்றல் தூளில் ஆழாக்கு அளவு இதில் போட்டு பாகுபதம் வரும்போது, அரை ஆழாக்கு தேன், அரைஆழாக்கு சுத்தமான பசு நெய்யினை விட்டுக் கிளறி லேகியபதம் வந்தவுடன் இறக்கவேண்டும்.
ஆறிய பின்னர் வாயகன்ற பாட்டிலில் இட்டு மூடி வைத்து தினசரி காலை மற்றும் மாலையில் தேக்கரண்டி சாப்பிடலாம்.
இந்த லேகியம் வாதம், பித்தம், சிலேத்துமம் ஆகியவற்றை சமன் செய்யும். உடலுக்குப் பலத்தை தருவதுடன், பித்தம் காரணமாக ஏற்படும் கிறுகிறுப்பு, வாந்தி, அரோசிகம் மாறும். ரத்தம் சுத்தமாகும்.
பெருங்குடல், சிறுகுடல், இரைப்பைகளில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும். சொறி, சிரங்கு நமைச்சல் குணமாகும். கருவுற்ற நிலையில் 21 நாள்கள் சாப்பிட சுகப்பிரசவம் ஏற்படும். கருப்பை கோளாறுகளைக் குணப்படுத்தும். காய கல்ப மாக செயல்படும் இந்த லேகியம் 3 மாதம் வரை கெடாது.
நெல்லிக்காய் வடாம்: ஒரு படி நெல்லிக்காயை கொஞ்சம் கொஞ்சமாக உரலில் போட்டு இடித்தால் மசித்து அதன் வித்துக்கள் வெளியேறும். நைந்தபின் வித்துக்களை நீக்கி விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
எல்லாக் காய்களையும் இடித்த பின் பெரிய பச்சை மிளகாயில் 10-ம், இரண்டு கொட்டை பாக்களவு தோல் சீவிய இஞ்சி, கைப்பிடியளவு கறிவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு ஆகியன சேர்த்து மறுபடியும் உரலில் போட்டு மைபோல் இடிக்கவேண்டும்.
பின்னர் அதனை எடுத்து உளுந்து வடை அளவிற்கு அடையாகத் தட்டி சுத்தமான பாயில் வைத்து, வெயிலில் உலர்த்தவேண்டும்.
நீர் சுண்டி சருகுபோல காய்ந்த பின் எடுத்து ஜாடியில் அடுக்கி மூடி வைத்துவிட வேண்டும். வாரத்திற்கு ஒரு முறை வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவேண்டும். இது வெகுநாட்கள் கெடாது.
நெல்லிக்காய் சஞ்சீவி லேகியம்: நன்றாக பழுத்த நெல்லிப்பழங்களின் விதைகளை நீக்கி வெயிலில் சருகாக உலரவிட வேண்டும். பின்னர் அதனை உரலில் இடித்து சலித்துக் கொள்ள வேண்டும்.
சுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை தலா 5 கிராம் எடுத்து இடித்து சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இரண் டாழாக்கு பசுவின் பாலை நன்றாக கொதிக்க வைத்து, அதில் 200 கிராம் பனைவெல்லத்தை போட்டு பாகு பதம் வரும் சமயம், அரை ஆழாக்கு சுத்தமான தேனை விட்டு சுக்கு, மிளகு, திப்பிலி தூளையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி ஒரு வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி தேக்கரண்டி காலையில் மட்டும் சாப்பிட்டு வர 40 நாளில் ரத்தம் சுத்தமாகும்.
-விடுதலை,1.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக