உடலுக்கு பலத்தையும், புத்துணர்வையும் கொடுக்க கூடியதும், பசியின்மை, குமட்டலுக்கு மருந்தாக விளங்க கூடிய சாத்துக்குடியை பற்றி இன்று நாம் பார்ப்போம். சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகளவில் உள்ளது. குறைவான எரிசக்தி கொண்டதால், உடல் எடை கூடுவதை தடுக்கிறது. உடலுக்கு பலத்தை கொடுக்க கூடியது. சாத்துக்குடியில் மினரல், பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. பொட்டாசியம் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது சாத்துக்குடி. புத்துணர்வை தரக்கூடியது. ஈறுகளில் வீக்கம், பற்கள் ஆடுவது, வாய்ப்புண் வெடிப்புக்கு அருமையான மருந்து சாத்துக்குடி. சோர்வாக இருக்கும்போது சாத்துக்குடி சாறு குடிப்பது நல்லது. சாத்துக்குடியை பயன்படுத்தி பசியின்மை, வாந்தி, குமட்டலுக்கான மருந்து தயாரிக்கலாம். ஒரு டம்ளர் நீரில் இஞ்சி துண்டுகளை தட்டி போடவும். அதனுடன் சாத்துக்குடி சுளைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது வயிற்று புண்களை அகற்றும். செரிமானத்தை சீர்படுத்தும். பசியை தூண்டும். வாந்தியை தடுக்கும். ருசியின்மையை போக்கும். வயிற்று வலி குணமாகும்.மருத்துவமனைக்கு சென்று நோயாளியை பார்க்கும்போது சாத்துக்குடி வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது. காய்ச்சல், அம்மை, பேதி, சளி, இருமல் என எந்த நோயாக இருந்தாலும் நோயாளிக்கு நல்ல பலத்தை தரக்கூடியது சாத்துக்குடி. வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் தருவதுடன் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடனடி புத்துணர்வை கொடுக்க கூடியது சாத்துக்குடி.
சாத்துக்குடி சாறு பயன்படுத்தி பல் வலி, ஈறுகளில் ரத்த கசிவுக்கான மருந்து தயாரிக்கலாம். சாத்துக்குடி சாறில் நீர்விட்டு, அதனுடன் உப்பு சேர்த்து கலக்கவும். ஈறுகளில் வைக்கும்போது ரத்தகசிவு சரியாகும். சாற்றில் நீர்விட்டு வாய் கொப்பளிக்கலாம். இவ்வாறு செய்தால் வாயில் துர்நாற்றம் தரும் கிருமிகள் வெளியேறும். ஈறு வீக்கம் தணியும். பற்களுக்கு பலம் ஏற்படும். சாத்துக்குடி தோலை பயன்படுத்தி சளி, இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம். தண்ணீர் விடாமல் பொடித்த ஒரு ஸ்பூன் சாத்துக்குடி தோல் எடுத்துக் கொள்ளவும். அதில், 5 மிளகு தட்டி போடவும். கால் ஸ்பூன் சீரகம், இரு சிட்டிகை மஞ்சள் பொடி, உப்பு 2 சிட்டிகை சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடிப்பதால், சளி கரைந்து வெளியேறும். பித்தத்தை சமப்படுத்தும். இருமல் இல்லாமல் போகும். வயிற்றுகோளாறு சரியாகும். பசியை தூண்டும். வைரஸ் காய்ச்சலுக்கு இது நல்ல மருந்து.சாத்துக்குடி சாறுடன் தண்ணீர் சேர்த்து கூந்தலில் தேய்த்து குளிப்பதனால் தலைமுடிக்கு டானிக்காகிறது. தலையில் ஏற்படும் பொடுகை போக்கும். தலைமுடி உடையாமல் வளரும்.
சாத்துக்குடியை இரண்டாக வெட்டி தோலில் தடவுவதால், முகத்திலுள்ள கரும்புள்ளி சரியாகும். கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் மறையும். கழுத்து, கைகளில் உள்ள கருமை மாறும். நோயாளிக்கு ஊட்டசத்தாக விளங்கும் சாத்துக்குடி உற்சாகத்தை தரக்கூடியது. சாத்துக்குடி சாறு சாப்பிட்டுவர மூட்டுவாதம், எலும்பு பலவீனம் ஏற்படாது.
-விடுதலை,28.9.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக