நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுப் பழக்க வழக்கம் உள்பட சில காரணங்கள் இருந்தாலும்கூட, மிக முக்கியக் காரணம் மேலை நாடுகளில் உள்ளவர்களைவிட, நம் இந்தியர்களுக்கு இருதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாயின் அளவு, இன்னும் சற்று சிறியதாக அமைந்திருப்பதுதான்.
பரம்பரை ரீதியாக வரலாம்.
புகையிலை பழக்கவழக்கங்கள் (சிகரெட் பிடிக்கும் கணவரால் மனைவிக்கோ குழந்தைகளுக்கோ வரலாம்)
அதிக ரத்தக்கொதிப்பு காரணமாகலாம்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது.
பி.எம்.அய். மதிப்பு சராசரியாக இருந்தாலும் (கூகுளில் போட்டிருப்பதைப் பார்த்து பி.எம்.அய் மதிப்பு 23க்குள்தானே இருக்கிறது என்று அலட்சியமாக இருப்பார்கள். ஆனால்) இளம் வயதில் வயிற்றைச் சுற்றிக் கொழுப்பு இருந்தால், அவர்களுக்கு இதய நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.
உடல் உழைப்பிலோ யோகா மாதிரியான பயிற்சிகளிலோ ஈடுபடாமல் இருப்பது.
சிலருக்கு சிறுநீரகக் கோளாறுகளாலும் வரும்.
நீண்ட நாள்கள் மன அழுத்தம்.
புகை பிடித்தாலே ஸ்ட்ரோக், மாரடைப்பு உள்ளிட்டவை வரும் வாய்ப்பு அதிகம்.
இதயத்தை பலப்படுத்த
உப்பு குறைவாக எடுத்துக் கொள்பவர்களுக்கு இதயத்துக்கான இரத்த நாளங்கள் மிக ஆரோக்கியமாக இருக்கின்றன!
இதயத்தை பலப்படுத்த துத்தநாக (ஜிங்க்) சத்து அதிகமுள்ள இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
மாரடைப்பு வருவதற்கான அறிகுறியை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
மூச்சுவிடுவதில் கடினம், உடல் சோர்வு, வாந்தி வருவது போன்றும் வயிறு வலிப்பது போன்ற உணர்வும் அசவுகரியமான உணர்வும் இருக்கும். அதேநேரம் தோல் மங்கிப்போகும். அனைத்திலும் முக்கியம் நெஞ்சு எரிச்சல் ஏற்படும். இப்படி வந்தால், ‘வாய்வுத் தொல்லையால் வருது’ என்று பலரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், அப்படி அலட்சியமாக விட்டுவிடக் கூடாது.
இதயத்துக்கு முக்கியமான எதிரி உப்பு, ஊறுகாய், சாஸ், கெட்சப், சிப்ஸ், அப்பளம், உப்பு பிஸ்கட், சீஸ், மிக்ஸர், முறுக்கு, சால்டட் பட்டர், ரெடிமேட் சூப் பாக்கெட், கருவாடு உள்ளிட்டவற்றில்தான் சோடியம் அதிகமுள்ளது. ஒரு நாளைக்கு 5 கிராமுக்கு மேல் ஒரு மனிதன் உப்பு சேர்த்துக்கொள்ளக் கூடாது.
இதய பிரச்சனை வராமல் தடுக்க, தினசரி உணவில் லவங்கப் பட்டையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது சர்க்கரையை மட்டுமல்ல, ரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
இதயத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துகள்:
‘பீட்டா கரோட்டின்’ என்று சொல்லக்கூடிய வைட்டமின் ‘ஏ’தான் முதன்மையான ஆன்டி ஆக்ஸிடென்ட். இது பப்பாளி, கேரட், மாம்பழம், வாழைப்பழம், பூசணிக்காய், உள்ளிட்டவை. அதேபோல் பச்சை இலை காய்களிகளிலும் இந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக உள்ளது.
நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ அதிகமுள்ளது. அதற்கடுத்ததாக, கொய்யாப்பழத்தில் இருக்கிறது.
நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் உள்ளிட்ட தாவர எண்ணெய்களில் வேர்க்கடலை, எள்ளுப்பொடி உள்ளிட்டவற்றில் வைட்டமின் ‘இ’ நிறைந்துள்ளது. இவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தவிர, செக்கில் ஆட்டிய எண்ணெயைப் பயன்படுத்துவது சிறந்தது! முக்கியமாக, எண்ணெய்யில் பொரித்த உணவுகள்- குறிப்பாக, ‘ரீஃபைன்ட்’ ஆயில் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
நமது இந்திய மசாலாக்களில் ‘செலினியம்’ என்னும் சத்து உள்ளது. இவை இதய ஆரோக்கியத்துக்கு உதவும்.
ரத்த நாளங்களில் கொழுப்பு படியாமல் ஆரோக்கியமாக இருக்க பூண்டு உதவும். வெங்காயமானது கொலஸ்ட்ராலை குறைத்து ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளும். தவிர, ரத்தம் உறைதலையும் தடுக்கும்.
ஒரு நாளைக்கு 40 கிராம் நார்ச்சத்து கட்டாயம் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள ஆப்பிள், மாம்பழம், பெர்ரி பழ வகைகள், அத்திப்பழம், அன்னாசி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள், கத்திரிக்காய், கேரட், பட்டாணி, புரோக்கோலி, வெங்காயம், தக்காளி, டர்னிப், தோலுரிக்கப்படாத உருளைக்கிழங்கு மற்றும் மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள், முழு தானியங்கள், சிறு தானியங்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட தானிய வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக பழங்களின் தோல்களில்தான் நார்ச்சத்து அதிகமுள்ளது. ஆனால், தற்போது விளையும் எந்தப் பழத்தையும் தோலுடன் சேர்த்து சாப்பிடும்படி அறிவுறுத்தப் படுவதில்லை. ஏனெனில், அந்தப் பழம் விளையும்போது நல்ல விளைச்சலுக்காக அடிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பழத்தின் தோலிலேயே தங்கிவிடுகின்றன. ஆகையால், பழங்களை வாங்கியபின் 20 நிமிடமாவது சாதாரண தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவியபின்தான் சாப்பிட வேண்டும். இதேபோல்தான் காய்கறிகளுக்கும்.
தினசரி 2 ஸ்பூன் வெந்தயத்தை சாப்பிட வேண்டும். அது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
அய்ந்து இதழ் கொண்ட செம்பருத்திப்பூ இதழை அப்படியே சாப்பிடலாம். அல்லது மூலிகை டீயாக காய்ச்சியும் குடிக்கலாம்.
இதயப் பிரச்சனைகள் வராமல் தடுக்க...
முளைவிட்ட தானியங்களில் பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ, பி மற்றும் சி நிறைந்துள்ளன. இவை உடலுக்குத் தேவையான சக்தியைத் தரும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தினசரி வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதேபோல் வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும். இது உடலில் படிந்துள்ள உப்புகளை வெளியேற்றும். வாரம் இருமுறை பீட்ரூட் சாப்பிட வேண்டும். இது ரத்த நாளங்களை பலப்படுத்தும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
குடிக்கும் தண்ணீருக்கும் இதய நோய்க்கும் சம்பந்தம் இருக்கிறதா?
குடிக்கும் தண்ணீருக்கும் இதய நோய்க்கும் சம்பந்தம் இருக்கிறது! ஆனால், நேரடியாக அல்ல. ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். ஆனால், ‘மினரல் வாட்டர்’ கூடாது. குடிநீரை சுத்திகரிக்கும்போது நீரில் உள்ள உண்மையான சத்துக்கள் வெளியேற்றப்படுகின்றன. இதுவே ‘மினரல் வாட்டர்’ குடிக்கும்போது கிடைக்கும் சுவைக்குக் காரணம், ஒரு கிணற்றிலிருந்து வரும் தண்ணீர், ஆழ்துளைக் குழாயிலிருந்து வரும் தண்ணீரை நாம் அப்படியே இயற்கையாகக் குடிக்கலாம். இதுதான் உண்மையான மினரல் வாட்டர். ஆனால், இதில் சுவையிருக்காது. காரணம், அதிலுள்ள தாது உப்புகள்தான்.
அந்தத் தண்ணீரை சுத்தமும் சுவையுமாக மாற்ற, அந்தத் தண்ணீரை மண்பானையில் ஊற்றி, வெட்டிவேர் அல்லது சிறிதளவு சீரகத்தை வெள்ளைத் துணியில் கட்டி, பானையில் போட்டு ஊறிய பிறகு அந்தத் தண்ணீரைக் குடிக்கலாம்.
பீட்ரூட்டை துண்டுகளாக்கியோ அல்லது சாறாகவோ சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும். இளநீர் குடிப்பது, வால்நட், ஃபிளக் ஸீட், பூசணி விதை, வெள்ளரி விதை மற்றும் மீன் உள்ளிட்டவற்றை வாரம் இருமுறை சாப்பிடுவது நல்லது.
வாழைத்தண்டு சாறு, கொத்துமல்லி சாறு, பன்னீர் ரோசா வடிநீர் உள்ளிட்டவற்றை தினசரி சேர்த்துக்கொள்வது இதயத்துக்குப் பலம் தரும். மருதம் பட்டை மற்றும் துவர்ப்பு சுவையுள்ள உணவுகளையும் அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதய நோய்க்கு மற்றொரு முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாமை. இதற்கு கடுமையான உடற்பயிற்சிதான் செய்ய வேண்டும் என்பதில்லை. குறைந்தபட்சம் அருகிலுள்ள கடைக்கு நடந்து செல்லலாம். மின்தூக்கி, நகரும் படிக்கட்டுக்குப் பதிலாக இயல்புநிலைப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை இதய ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல; மனித ஆரோக்கியத்துக்கும் மிகவும் நல்லது!
- உண்மை இதழ் 16 -30 .10 .19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக