புதன், 30 நவம்பர், 2016

இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தும் பிரண்டை!

பிரண்டை இந்தியா, இலங்கை, வங்க தேசம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும் கொடி இனத் தாவரமாகும். ஓலைப்பிரண்டை, உருண்டைப் பிரண்டை, முப்பிரண்டை, சதுரப் பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பலவகைகள் உள்ளன. முப்பிரண்டை கிடைப்பதற்கரியது. இது ஒரு காயகல்பம். இதன் தண்டு, வேர், பழம் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டவை.

தமிழில் பிரண்டை எனச் சொல்லப்படும் இந்த மூலிகையை ஆங்கிலத்தில் போன்-செட்டர் (Bone Setter) என்கிறார்கள். சிலர் உடல்மெலிந்து காணப்படுவார்கள். எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறாமல் இருப்பார்கள்.

இவர்கள் பிரண்டையை நெய்விட்டு வதக்கி துவையலாகச் செய்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் நன்கு தேறும்.

வாயுத் தொல்லை மட்டுப்படும். சுவை-யின்மையைப் போக்கிப் பசியைத் தூண்டும்.

பிரண்டையை நெய்விட்டு வறுத்து அரைத்து காலை மாலை இரு வேளையும் ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் மாறி, மூலநோயால் ஏற்பட்ட புண்கள் குணமாகும்.

வாயு சம்மந்தப்பட்ட நோய்கள் இருந்தால் வயிறு செரிமான சக்தியை இழக்கும். பிரண்டைத் துவையல் செரிமான சக்தியைத் தூண்டும். செரியாமையை போக்கும்.

எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை அரைத்து அடிபட்ட இடத்தின்மீது வைத்துக் கட்டியும், பிரண்டையைத் துவையலாகவும் செய்து சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். முறிந்த எலும்புகள் விரைவில் இணைந்து பலம் பெறும்.

ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இதனால் இதயத்திற்குத் தேவையான ரத்தம் செல்வது தடைப்படும்.

இப்படிப்பட்ட கோளாறுக்கும் பிரண்டைத் துவையலை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகி இதயம் பலம் பெறும். பெண்களுக்கு ஏற்படும் சூதக வலியும், முதுகு வலி, இடுப்பு வலி போன்றவைக்கும் பிரண்டை சிறந்த மருந்தாகும்.

பிரண்டை உடலிலுள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்று நோய்க்குக் கொடுக்கப்படும் மருந்துகளில்-கூட பிரண்டை சேர்க்கப்படுகிறது.

பிரண்டையின் வேறு பெயர்கள், கிரண்டை அரிசினி, வச்சிரவல்லி.

தாவரப் பெயர்: VITTIS Gvandrangularis.

தாவரக் குடும்பம்: VITACEAE.

 -உண்மை இதழ்,1-15.11.16



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக